Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

37 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய 16ஆம் நூற்றாண்டு நடராஜர் சிலை

Advertiesment
37 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய 16ஆம் நூற்றாண்டு நடராஜர் சிலை

Arun Prasath

, சனி, 14 செப்டம்பர் 2019 (16:55 IST)
16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை, முப்பத்து ஏழு வருடங்களுக்கு முன்பாக தமிழக கோவில் ஒன்றிலிருந்து காணமல் போய், நாடு திரும்பியிருக்கிறது.

இந்தச் சிலை மீட்கப்பட்டது எப்படி? பின்னணியில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது?

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள அறம்வளர்த்த நாயகி அம்மன் சமேத குலசேகரம் உடையார் கோயிலைச் சேர்ந்த நடராஜர் சிலை 1982ஆம் ஆண்டில் காணாமல்போய், பிறகு ஆஸ்திரேலியாவில் இருப்பது கண்டறியப்பட்டு, தற்போது மீட்கப்பட்டுள்ளது. தில்லியில் ஒப்படைக்கப்பட்ட இந்த சிலை, வெள்ளிக்கிழமையன்று காலையில் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சிலையை தில்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டுவந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

"37 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட இந்தச் சிலையைக் கண்டுபிடித்து மீட்டுகொண்டு வந்துள்ளோம். கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு எனது குழுவும் ஊடகங்களும் உதவியாக இருந்தன" என்று தெரிவித்தார். இந்தச் சிலை விரைவில் கல்லிடைக்குறிச்சி கோவிலில் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கல்லிடைக்குறிச்சியில் காணாமல் போன சிலை

webdunia
திருநெல்வேலி அம்பாசமுத்திரம் தாலுக்காவில் அமைந்திருக்கிறது கல்லிடைக்குறிச்சி. இந்த ஊரில் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட கோவில், குலசேகரமுடையார் - அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவில். 1982ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதியன்று இந்தக் கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு, நடராஜர் சிலை உட்பட நான்கு சிலைகள் திருடப்பட்டன.

இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து 1984ல் வழக்கு மூடப்பட்டது. அதற்குப் பிறகு இந்தச் சிலை எங்கே போனது என்பது யாருக்கும் தெரியாது.

நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டது எப்படி?

2001ஆம் ஆண்டில் தி ஆர்ட் கேலரி ஆஃப் சவுத் ஆஸ்திரேலியா ஃபவுண்டேஷன் (ஏஜிஎஸ்ஏ) 75.7 சென்டிமீட்டர் உயரமுள்ள இந்தச் சிலையை ஆலிவர் ஃபோர்ட் அண்ட் பிரென்டன் லின்ஞ் லிமிட்டட் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கியது. இந்தச் சிலையை அந்த அருங்காட்சியகம் 2,25,000 டாலர்களுக்கு வாங்கியது.

இந்த நடராஜர் சிலை ஏஜிஎஸ்ஏவால் வாங்கப்பட்டது குறித்து மிகேலா போலன் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் தி ஆஸ்திரேலியன் இதழில் எழுதிய கட்டுரையில் பல விரிவான தகவல்களை அளிக்கிறார்.
webdunia

இந்தச் சிலை வாங்கப்பட்டபோது அருங்காட்சியகத்தின் தலைவராக இருந்தவர் ரான் ராட்ஃபோர்ட். இந்தச் சிலையை வாங்குவது குறித்தும் சிலை எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் ரான் ராட்ஃபோர்டும் ஆலிவர் ஃபோர்ட் அண்ட் பிரென்டன் லின்ஞ் லிமிட்டட் நிறுவனத்தைச் சேர்ந்த பிரென்டன் லின்ச்சும் 2001 பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரை நான்கு முறை கடிதங்கள் மூலம் உரையாடுகிறார்கள். அதற்கு முன்பாகவே இந்தச் சிலையை லண்டனில் வைத்துப் பார்வையிட்டிருக்கிறார் ராட்ஃபோர்ட்.

இந்தச் சிலை திருடப்பட்ட சிலையா என்பது குறித்து திரும்பத் திரும்ப லின்ச்சிடம் விளக்கம் கேட்கிறார் ராட் ஃபோர்ட். இந்தச் சிலை திருடப்பட்டதல்ல என்றும் 1970களில் இருந்தே ஒரு இத்தாலிய சேகரிப்பாளரிடம் இருந்த சிலை என்கிறார் லின்ச். வேறு ஒருவரும் இந்தச் சிலையை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார் என்று அவசரப்படுத்துகிறார் லின்ச். பிறகு ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியகம் இந்தச் சிலையை வாங்கிவிடுகிறது. அருங்காட்சியகத்தில் பார்வைக்கும் வைக்கப்படுகிறது. 2013வரை அந்த அருங்காட்சியகத்திலேயே இந்த சிலை இருந்துவந்தது.

அந்த காலகட்டத்தில், ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியங்களில் திருடப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருப்பது குறித்த சர்ச்சைகள் எழவே, பல அருங்காட்சியகங்கள் தங்கள் வசம் உள்ள சிலைகளை ஆராய ஆரம்பித்தன.

இந்த கட்டத்தில், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் சிலைகளை மீட்பதில் கவனம் செலுத்தும் இந்தியா பிரைட் அமைப்பு, ஏஜிஎஸ்ஏவுக்குக் கடிதம் எழுதி நடராஜர் சிலையை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப வேண்டுமெனக் கோரியது. மிகேலா போலன் மூலமாக தகவல் சுதந்திரச் சட்டத்தின் (The Freedom of Information Act) கீழ் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இதற்குப் பிறகு, Due deligence policy கொள்கையின்படி இந்தச் சிலை குறித்து ஆராய முடிவெடுத்த ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியகம் 2016 செப்டம்பரில் ஆசிய கலைப் பிரிவின் க்யூரேட்டரான ஜேம்ஸ் பென்னட்டை இந்தியாவுக்கு அனுப்பியது. புதுச்சேரிக்கு வந்த ஜேம்ஸ் பென்னட், அங்கிருந்த பிரெஞ்சு நூலகத்தில் 1958ல் எடுக்கப்பட்ட இந்தச் சிலையின் புகைப்படதைப் பார்த்தார். தங்களிடம் உள்ள சிலை, தமிழகத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட சிலை என்பதை உணர்ந்தார்.
 
இதற்கு அடுத்த ஆண்டில் குலசேகரமுடையார் கோவிலுக்குச் சென்ற ஜேம்ஸ் அங்கிருந்த அர்ச்சகர்கள், அறங்காவலர்களிடம் பேசி சிலை திருட்டுப்போனது குறித்து உறுதிசெய்துகொண்டார். இதற்குப் பிறகு, இந்த சிலை திருட்டுப் போன சமயத்தில் தமிழக காவல்துறையில் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பிரதியை கேட்டு ஏஜிஎஸ்ஏ கடிதம் அனுப்பியது.

இந்த எஃப்ஐஆர் பிரதியை 2019 ஜனவரி 20ஆம் தேதியன்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அனுப்பி வைத்தது. அதேபோல, கான்பெர்ராவில் உள்ள இந்தியத் தூதரகமும் அந்தச் சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி முறைப்படி கோரியது. இதற்குப் பிறகு அடிலெட்யில் இந்திய கான்சல் - ஜெனரலைச் சந்தித்த ஏஜிஎஸ்ஏவின் இயக்குனர் சிலையைத் திரும்பத் தருவதாகக் கூறினார்.
இதற்குப் பிறகு 2019 மார்ச் மாதத் துவக்கத்தில் ஏஜிஎஸ்ஏவின் அதிகாரிகளும் இந்தியத் தொல்லியல் துறையின் பழம்பொருள் பிரிவின் இயக்குநர், இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரகத்தின் அதிகாரிகளும் சிலையைத் திரும்ப அளிப்பதற்கான முறைகள் குறித்து சந்தித்துப் பேசினர்.

இதற்குப் பிறகு இந்தச் சிலை செப்டம்பர் 10ஆம் தேதியன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தில்லியிலிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் சென்னைக்குக் கொண்டுவந்துள்ளார்.
webdunia

தமிழக கோவில்களில் இருந்து சிலைகளும் கலைப்பொருட்களும் கடத்தப்பட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களுக்கும் தனியார் சேகரிப்பாளர்களுக்கும் விற்கப்படுவது நீண்ட காலமாகவே நடந்துவரும் ஒரு முறைகேடு என்கிறார் இந்தியா ப்ரைட் திட்டத்தின் இணை ஒருங்கிணைப்பாளரும் The Idol Thief நூலின் ஆசிரியருமான விஜயகுமார்.

தமிழ்நாடும் சிலை திருட்டும்

"தற்போது 28 சிலைகள் குறித்து தகவல் சேகரித்து இன்டர்போலுக்கு அனுப்பியிருக்கிறோம். இவை அனைத்துமே 1950களில் திருடப்பட்டவை. இந்தச் சிலைகள் அமெரிக்கா, ஜெர்மன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இது தவிர, சுமார் 3,500 முதல் 5,000 சிலைகளும் கலைப் பொருட்களும் வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும் விற்பனைக்கூடங்களிலும் தனியார் சேகரிப்பிலும் இருக்கலாம் எனக் கருதுகிறோம்" என்கிறார் விஜயகுமார்.
 
கடந்த ஆண்டில் உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்ய பிரமாணப் பத்திரத்தில் 1384 கல் மற்றும் செப்புத் திருமேனிகள் காணாமல் போயிருப்பது குறித்து சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் விஜயகுமார்.

"1993 -2012 காலகட்டத்தில்தான் அதிக சிலைகள் திருடப்பட்டு, கடத்தப்பட்டன. ஆனால், இந்த சிலைகளை மீட்பதில் பெரும் சிக்கல்கள் இருக்கின்றன. 1972ல் புன்னைநல்லூரில் நடராஜர் சிலை காணாமல்போனது. 1973லேயே வேறு ஒரு சிலையை சமர்ப்பித்து, அந்த வழக்கு மூடப்பட்டது. இப்போது உண்மையிலேயே காணாமல்போன சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள், இது நம்முடைய சிலை என்பதற்கான ஆவணங்களைக் கேட்கிறார்கள். தற்போதுவரை அவை தரப்படவில்லை" என்கிறார் அவர்.

கல்லிடைக்குறிச்சியில் தற்போது மீட்கப்பட்டுள்ள நடராஜர் சிலை உட்பட மேலும் ஆறு சிலைகள் காணமல் போயின. மீதமுள்ள சிலைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், இந்த நடராஜர் சிலையை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திற்கு விற்ற நிறுவனத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார் விஜயகுமார்.

தமிழ்நாட்டில் சிலை திருட்டு சம்பவங்கள் அதிகமானதையடுத்து 1980ஆம் ஆண்டில் அப்போதைய டிஐஜி கே.கே. ராஜசேகரன் நாயர் தலைமையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை உருவாக்கியது. வருடத்திற்கு சராசரியாக 25 சிலைகள் திருடுபோய்க் கொண்டிருந்த நிலையில், இந்த பிரிவு உருவாக்கப்பட்ட பிறகு அவை வெகுவாகக் குறைந்தன. இருந்தபோதும் அதற்கு முன்பாக திருடப்பட்ட சிலைகளை மீட்பது இன்னமும் சவாலான காரியமாகவே இருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுபஸ்ரீ உயிரிழந்தது எதிர்பாராத விபத்து - அரசு எப்படி பொறுப்பேற்கும் ? அமைச்சர் கடம்பூர் ராஜூ