Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நரேந்திர மோதி - மு.க. ஸ்டாலின் சந்திப்பு சுட்டிக்காட்டுவது என்ன?

Advertiesment
நரேந்திர மோதி - மு.க. ஸ்டாலின் சந்திப்பு சுட்டிக்காட்டுவது என்ன?
, வெள்ளி, 18 ஜூன் 2021 (10:39 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான எதிர்கால உறவை இந்த சந்திப்பு சுட்டிக்காட்டுகிறதா?
 
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக டெல்லி வந்திருக்கும் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை வியாழக்கிழமை மாலையில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்ததாக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
 
தமிழ்நாட்டில் தி.மு.கவும் பா.ஜ.கவும் எதிரும் புதிருமான கட்சிகளாக இருக்கும் நிலையில், பிரதமர் மோதி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடையிலான சந்திப்பு எவ்வாறானதாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு ஹேஷ்யங்கள் நிலவிவந்தன.
 
குறிப்பாக, பிரதமர் மோதி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக #GobackModi என்ற முழக்கம் எழுப்பப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட்டது.
 
வியாழக்கிழமை மாலை ஐந்து மணியளவில் பிரதமரின் இல்லத்தில் துவங்கிய இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரமே நீடித்தது. இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரமதரிடம் அளித்திருக்கிறார் மு.க. ஸ்டாலின்.
 
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் சார்பில் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகளின் தலைப்பை படித்துக் காட்டினார்.
 
1. தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். 2. செங்கல்பட்டு, ஊட்டியில் உள்ள தடுப்பூசி உற்பத்தி நிலையங்களை செயல்படச்செய்ய வேண்டும். 3 தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் 4. ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை முழுமையாகத் தர வேண்டும் 5. நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் 6. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். 7. மேகதாது அணை திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். 8. கோதாவரி - காவிரி, காவிரி குண்டாறு இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். 9. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட வேண்டும். 10. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் 11. கச்ச தீவு மீட்கப்பட வேண்டும் 12. புதிய மின்சாரச் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். 12 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவிலேயே கட்டி முடிக்க வேண்டும். கோவையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்ட வேண்டும். 13. மருத்துவக் கல்லூரிகளில் மத்திய ஒதுக்கீட்டில் ஓபிசி இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் 14. ஜவுளி பூங்காக்களை அமைக்க வேண்டும். 15. அறிவிக்கப்பட்ட பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். 16. புதிய கல்விக் கொள்கையை விலக்கிக்கொள்ள வேண்டும். 17. நாடு முழுவதும் கட்டாயக் கல்வி, 18. கொரோனா - சலுகைகளை வழங்க வேண்டும். 19. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 20. ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் 21. சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். 22. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சீரமைக்கப்பட வேண்டும். 23. உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். 24. இட ஒதுக்கீட்டிற்கான சமூக அளவுகோலை மாநிலங்களே நிர்ணயிக்க வேண்டும். 25. சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 26. பெண்களுக்கு 33 சதவீதம், 27. ரயில்வே திட்டங்கள் 28. குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளாண்மை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் வாசித்துக் காண்பித்தார்.
 
இவை தவிர, சிறப்பு வரிகளை (Cess) மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களையே முன்னுரிமை அளித்து நியமிக்க வேண்டும், பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை நீக்க வேண்டும், மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையிலான மேம்பாலத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும், சென்னையிலிருந்து கன்னியாகுமரிவரை எட்டு வழிச் சாலை அமைக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய கிளையை சென்னையில் அமைக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
 
செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக பிரதமர் சொல்லியிருக்கிறார். எந்த கோரிக்கையாக இருந்தாலும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
 
"தொடர்ந்து அழுத்தம் தருவோம்"
பிரதமருடனான சந்திப்பு, மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் இருந்தது" என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் தரப்படுவதில்லை, அந்த விவரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
 
"உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற நோக்கில் எங்கள் நிலைப்பாடு இருக்கும்" என்றும் தெரிவித்த மு.க. ஸ்டாலின், தாங்கள் கோரிக்கைகளாக அளித்த "பல பிரச்னைகள் ஒன்றிய அரசு செய்ய வேண்டியவை. சில விவகாரங்களைச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு அனுமதி தேவை. சில விஷயங்களை இரண்டு அரசுகளும் சேர்ந்து செய்ய வேண்டியவை. ஆகவே இவற்றை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்" என்றும் தெரிவித்தார்.
 
இன்றைய சந்திப்பைப் பார்க்கும்போது ஒரு வழக்கமான முதலமைச்சர் - பிரதமர் சந்திப்பாகத்தான் இது தென்படுகிறது என்றாலும் தி.மு.க. தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக முன்வைத்துவி்ட்டது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
 
"விவசாயச் சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை. ஆனால், அதை நீக்க வேண்டும் என்ற எதிர் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பியிருக்கிறார். ஆகவே, இந்தச் சந்திப்பின் மூலம் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான உறவு எதன் அடிப்படையில் இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார் ஸ்டாலின். அந்த வகையில் இந்த சந்திப்பு மிக முக்கியமானதுதான்" என்கிறார் அவர்.
 
சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை கோரிக்கை தொடர்பான குழப்பம்
பிரமதரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த கோரிக்கை மனுவில், "15. நெடுஞ்சாலைத் திட்டங்கள்" என்ற பிரிவில் "சென்னை - சேலம் புதிய நெடுஞ்சாலைத் திட்டம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த அ.தி.மு.க. அரசு இந்தத் திட்டத்தை அறிவித்தபோது, இதற்கு விவசாயிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
 
இந்த நிலையில், தி.மு.கவும் அந்தத் திட்டத்தை ஆதரிக்கிறதா என்ற குழப்பத்தை இந்த கோரிக்கை எழுப்பியிருக்கிறது. ஆனால், அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்றுதான் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக தமிழக செய்தித் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோனியாகாந்தி, ராகுல் உடன் முதல்வர் மு.க ஸ்டாலின் சந்திப்பு