Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரு கைகளால் சிலம்பம் சுற்றி அசத்தும் நாமக்கல் கர்ப்பிணி பெண்

Advertiesment
இரு கைகளால் சிலம்பம் சுற்றி அசத்தும் நாமக்கல் கர்ப்பிணி பெண்
, வியாழன், 30 செப்டம்பர் 2021 (12:40 IST)
நாமக்கல்லைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் இருகைகளிலும் சிலம்பம் சுழற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

நாமக்கல் அருகே தூசூர் கனவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்த். அவரது மனைவி சினேகா. மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் நேரம்போக காலை மாலை நேரங்களில் மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கும் பயிற்சிக் கூடமும் ‘ஏகலைவா’ என்ற பெயரில் நவீன்த் நடத்தி வருகிறார்.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தன்னிடம் பயிற்சி பெறும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக சிலம்ப சாதனை நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் நவீன்த் நடத்தினார். இதனை கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற தனியார் அமைப்பு பதிவு செய்தது.

இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினாலும் நவீன்த் மனைவி சினேகா உடலெங்கும் வியர்வை கொட்ட கொட்ட இரு சிலம்பங்களை ஒரு மணி நேரம் இடைவிடாது சுழற்றியதே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

காரணம் சினேகா ஏழு மாத கர்ப்பிணிப்பெண். அவர் இரு கைகளிலும் சிலம்பத்தை பிடித்து ஆவேசமாகவும், அதே சமயத்தில் சிலம்பம் தன் வயிற்றில் பட்டு விடாதவாறும் லாவகமாக சுழற்றினார்.

பிபிசி தமிழுக்காக சினேகாவை சந்தித்து பேசிய போது"நான் சிறுவயதாக இருக்கும் போதே கோயில் திருவிழாக்களில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றுவதை பார்த்து வியந்து போயிருக்கிறேன்.

எனக்கு அப்போதிலிருந்தே சிலம்பம் மீது ஆர்வம் ஏற்பட்டது, ஆனால் அப்போது அந்த வீர விளையாட்டை கற்றுக்கொள்ள முடியவில்லை. திருமணத்திற்கு பிறகு எனது கணவரே சிலம்பம் மாஸ்டராக இருந்ததால் அவரிடம் நான் முறைப்படி சிலம்பம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

பின்னர் ஒரு மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி சாதனை படைத்தேன். பெண்களுக்கு இந்த கலை மிக அவசியமானது. இது தற்காப்பு கலை மட்டுமல்ல, உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் சிலம்பம் பயனுள்ளதாக இருக்கும். அதனால் தான் நான் கர்ப்ப காலத்தில் சிலம்பம் சுற்ற முடிந்தது," என்றார்.

தொடர்ந்து சினேகாவின் கணவரும் சிலம்ப பயிற்சியாளருமான நவீன்த்திடம் பேசினோம்.
"சேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தேன். அதோடு சிலம்பம் பயிற்சிப் பள்ளியும் நடத்தி வருகிறேன். ஒரு கால கட்டத்தில் முழு நேர சிலம்ப பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் கல்லூரியில் பணியில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். எனது பயிற்சிப் பள்ளியில் 200 பேர் சிலம்பம் பயின்று வருகின்றனர். இதில் எனது மனைவி சினேகாவும் ஒருவர்.

அவர் மிக ஆர்வமாக இருந்தததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்து பயிற்சி அளித்தேன் மருத்துவ ஆலோசனையின்படி ஆரம்பத்தில் சுலபமான பயிற்சி அளித்தேன்.

தற்போது அவர் மற்றவரை போல் பயிற்சி பெறுகிறார். மருத்துவரின் ஆலோசனையின்படி உணவு மற்றும் பயிற்சி எடுப்பதால் கர்ப்பமாக இருப்பது ஒரு பிரச்னையில்லை. சிலம்பம் சுற்றும் போது உடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் வேலை செய்வதால் ஆரோக்கியம் கூடும்.

பிரசவத்தின் போது அது உதவுமென நம்புகிறேன் எனினும், மற்றவர்கள் மருத்துவ ஆலோசனையின் படி பயிற்சி பெறுவது தான் நல்லது. 4 அடிச்சுவடு, 8 அடிச்சுவடு, 16 அடிச்சுவடு மற்றும் சந்தை முறை, வாள்வீச்சு, சுருள்வாள் வீச்சு, மான்கொம்பு, வேல்கம்பு போன்றவையும் சிலம்பாட்டத்தில் உண்டு. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு இந்த கலை உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாரம்பரிய கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதும் அவசியம்." என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை மதுக்கடைகளுக்கு தடை! – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி