Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏலூரு நகரில் பரவும் மர்ம நோய்; ஆந்திர பிரதேச மருத்துவமனையில் அதிகரிக்கும் நோயாளிகள்

Advertiesment
ஏலூரு நகரில் பரவும் மர்ம நோய்; ஆந்திர பிரதேச மருத்துவமனையில் அதிகரிக்கும் நோயாளிகள்
, திங்கள், 7 டிசம்பர் 2020 (17:35 IST)
ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு நகரில், அடையாளம் காணப்படாத ஒரு வித நோய் பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமையுடன் 428ஐ எட்டியது. அங்கு 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் மர்ம நோய் பாதிப்புடன் சேரும் பொதுமக்களை மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பார்வையிட்டு நலம்  விசாரித்தார். அங்கு மருத்துவர்களிடமும் மர்ம நோய் தாக்கம் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார்.
 
இதைத்தொடர்ந்து நோய் பாதிப்பு மற்றும் அதன் தன்மை தொடர்பரான தகவல்களை திரட்டவும், மருத்துவ கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை  ஒருங்கிணைக்கவும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை ஏலூரு மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.
 
நோய் பாதிப்புள்ளவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதரிகளின் முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் வந்து விடும் என்று ஆந்திர பொது சுகாதாரத்துறை இயக்குநர்  டாக்டர் கீதா பிபிசி தெலுங்கு சேவை செய்தியாளரிடம் தெரிவித்தார்.
 
இந்த நிலையில், ஏலூரு மாவட்டத்தில் நோய் தன்மை தொடர்பாக பார்வையிட டெல்லியில் இருந்து எய்ம்ஸ் குழு ஆந்திரா வந்துள்ளது. அந்த குழுவில் டாக்டர்  ஜாம்ஷெட் நாயர், டாக்டர் அவிநாஷ் டிசோஷ்தவர், டாக்டர் சான்கேத் குல்கர்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தங்களுடைய கள ஆய்வு மதிப்பீட்டை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் வழங்குமாறு இந்திய சுகாதாரத்துறையால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 
திடீரென தீவிரமான மர்ம நோய்
 
கடந்த சனிக்கிழமை முதல், குழந்தைகள், பெண்கள் உள்பட, 345 பேர் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்ததாக  ஞாயிறு மாலையில் அறிவிக்கப்பட்டது.
 
தன்மை கண்டறியப்படாத இந்த நோயின் தாக்கம் குறித்து தொடர்ந்து சுகாதார அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
 
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது; தேசிய வேதியியல் தொழில்நுட்ப மையத்தின் குழு ஒன்றும் இன்று ஏலூரு சென்று  ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதாக பிபிசி தெலுங்கு சேவையின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
 
மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, ஏழு பேரைக் கொண்ட மருத்துவக் குழு ஒன்றும் ஏலூரு வந்துள்ளது என்றும் நோய் பாதிப்பு உள்ளாகியுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவிக்கிறார்.
 
நோய் அறிகுறிகள் என்ன?
 
இந்த புதிய மர்ம நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு குமட்டல், வலிப்பு முதல் நினைவிழப்பு வரை பல அறிகுறிகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள்  கூறுகிறார்கள்.
 
ஏலூரு அரசு மருத்துவமனையில், தேவையான அளவுக்கு படுக்கைகளை அதிகரித்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டு இருக்கிறது.
 
ஏற்கனவே இந்தியா, கொரோனா வைரஸ் பெரும் தொற்றை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில், மர்ம நோயும் வந்திருக்கிறது.
 
இந்த அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அனைவருக்கும் கொரோனா தொற்று  இல்லை என முடிவுகள் வந்திருப்பதாக, உள்ளூர் ஊடகம் குறிப்பிடுகிறது.
 
இந்த அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்படுபவர்கள், குறிப்பாக குழந்தைகள், கண்கள் எரிவாதாகக் கூறுகிறார்கள்.
 
அதன் பின் திடீரென வாந்தி எடுக்கத் தொடங்குகிறார்கள். இன்னும் சிலர் மயங்கி விழுந்துவிடுகிறார்கள் அல்லது வலிப்பு வந்துவிடுகிறது என ஏலூரு அரசு  மருத்துவமனையில் இருக்கும் மருத்துவ அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் கூறியிருக்கிறார்.
 
இந்த அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்பட்ட பலரும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு, உடல் நலம் தேறி  விரைவாக மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்புகிறார்கள்.
 
இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் ரத்த மாதிரிகளில், எந்த விதமான வைரஸ் தொற்றும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆந்திரப் பிரதேச  மாநிலத்தின் சுகாதார அமைச்சர் ஆல்ல கலி கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் கூறியிருக்கிறார்.
 
ஆல்ல கலி கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும் பதவி வகிக்கிறார். இவர்தான் நோய் பரவல் ஏற்பட்டுள்ள ஏலூரு தொகுதியின்  சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளார்.
 
இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த இடங்களை, அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்ட பிறகு, மக்கள் இந்த மர்ம நோயால் பாதிக்கப்படுவதற்கு நீர்  மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு காரணமல்ல எனக் கூறி இருக்கிறார்கள். இது ஏதோ மர்ம நோய், பரிசோதனைக் கூடங்களின் பகுப்பாய்வுகள் தான் இது என்ன என்று வெளிப்படுத்தும் என்றார் அமைச்சர் ஸ்ரீநிவாஸ்.
 
ஆந்திர பிரதேசத்தின் எதிர்க் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, இந்த நோய் குறித்து விசாரணை வேண்டும், இந்த நோய்க்கு மாசுபாடுதான் காரணம் எனவும்  வலியுறுத்தி இருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தரிசு நிலத்தையெல்லாம் அரசியல்வாதிகள் பட்டா போட்டுடுறாங்க! – மதுரை கிளை நீதிமன்றம் பளார்!