Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பு: ஐ.நா பொதுச் செயலர் கண்டனம், ராணுவத்தால் ஃபேஸ்புக் முடக்கப்பட்டதாக தகவல்

மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பு: ஐ.நா பொதுச் செயலர் கண்டனம், ராணுவத்தால் ஃபேஸ்புக் முடக்கப்பட்டதாக தகவல்
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:04 IST)
மியான்மரில் கடந்த திங்கட்கிழமை நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியடைவதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டொனியோ குட்டாரெஷ் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் முடிவுகளைப் புறக்கணிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றும், ஒரு நாட்டை இப்படி ஆட்சி செய்யக் கூடாது என ஆட்சிக்கவிழ்ப்பு நடத்திய  தலைவர்களுக்குப் புரிய வைக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
 
ஐ.நாவின் பாதுகாப்புச் சபை இந்த ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட ஆலோசித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் ஆட்சிக்கவிழ்ப்பைக் கண்டிக்கும் அறிக்கைகளை சீனா தடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
 
மியான்மரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆங் சாங் சூச்சி, ராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
 
அவர் மீது சில குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து 15 நாட்களுக்கு (15 பிப்ரவரி வரை) மியான்மர் ராணுவத்தினரால் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
ஆங் சாங் சூச்சி மற்றும் மியான்மரின் அதிபர் வின் மின்ட் ராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பிறகு, அவர்களிடமிருந்து எந்த தகவலும்  கிடைக்கவில்லை.
 
அடுத்த ஓராண்டுக்கு ராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி தன் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அத்தேர்தலில் ஆங் சாங் சூச்சி அழுத்தமாக தன் வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
 
மியான்மரில் ஃபேஸ்புக்குக்கு அந்நாட்டு ராணுவம் தடை விதிக்க உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
 
பிப்ரவரி 4ஆம் தேதி, மியான்மரில் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பயனர்கள் தெரிவித்தனர். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான எதிர்ப்பை ஒருங்கிணைக்கும் ஃபேஸ்புக் பக்கத்துக்கு 10,000-க்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
 
`முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது`
 
மியான்மரில் அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டொனியோ குட்டாரெஷ் அழைப்பு  விடுத்திருக்கிறார்.
 
"மியான்மரில் ராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம். சர்வதேச சமூகத்தில் இருக்கும்  முக்கிய நாடுகள் மூலம் மியான்மர் மீது கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார் அன்டொனியோ.
 
"மியான்மர் மக்களின் மனதையும், தேர்தல் முடிவுகளையும் மறுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டை இப்படி நடத்தக் கூடாது, இப்படி  முன்னெடுத்துச் செல்லக் கூடாது என்பதை மியான்மர் ராணுவத்துக்கு புரிய வைக்க முடியும் என நம்புகிறேன்," என்றார்.
 
மேற்கத்திய நாடுகள் மியான்மர் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பைக் கண்டிக்கின்றன, ஆனால் மியான்மரைக் கண்டிக்க சீனா மறுப்பதால், ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஒரு  பொது நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. சீனா, ஐ.நா பாதுகாப்புச் சபையில் விட்டோ பலம் கொண்ட ஓரு நிரந்தர உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த பல ஆண்டுகளாக மியான்மரை, சீனா சர்வதேச விசாரணையிலிருந்து பாதுகாத்துக் கொண்டிருப்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது. ரோஹிஞ்சா முஸ்லிம்கள்  பிரச்னையின் போது கூட, சீனா ரஷ்யாவோடு சேர்ந்து கொண்டு மியான்மரை சர்வதேச விமர்சனங்களிலிருந்து பாதுகாத்தது குறிப்பிடத்தக்கது. இப்போது கூட  மியான்மர் மீது சர்வதேச அழுத்தம் கொடுப்பது மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது, சூழலை மேலும் மோசமாக்கும் என எச்சரித்திருக்கிறது சீனா.
 
வலுக்கும் போராட்டம்
 
மியான்மரின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த செவ்வாய் & புதன்கிழமை இரவு, மியான்மரின் யங்கூன் நகரில் ஒட்டுநர்கள் தங்கள்  வாகனத்தின் ஹாரன்கள் மூலம் ஒலி எழுப்பி, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். அதே போல அந்நகரில் வாழும் மக்கள், தங்கள் பாத்திர பண்டங்களை அடித்து  ஒலி எழுப்பி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.
 
மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். பலரும் தங்களின் பணியை நிறுத்தினார்கள். சிலர் பணியைத் தொடர்ந்தாலும், ராணுவ  அடக்குமுறைக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதத்தில் சில இலச்சினைகளை அணிந்து கொண்டார்கள்.
 
ஒட்டுமொத்தமாக போராட்டக்காரர்கள், மியான்மரின் முகமான ஆங் சாங் சூச்சியை விடுதலை செய்யுமாறு கோருகிறார்கள்.
 
போராட்டக்காரர்கள் சிவப்பு அல்லது கருப்பு ரிப்பன்களை அணிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். அதோடு கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடந்த மக்கள் போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மூன்று விரல் சல்யூட்டையும் மியான்மர் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பலரும் தங்கள் சமூக வலைதளங்களின் profile  picture என்றழைக்கப்படும் அடையாளப்படங்களை சிவப்பு நிறத்துக்கு மாற்றி ஆங் சாங் சூச்சியின் கட்சிக்கு தங்கள் ஆதரவைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1.08 கோடியை நெருங்கிய கொரோனா பாதிப்பு! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!