Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் பீதியை கிளப்பியதாக மலேசிய பெண் பத்திரிகையாளர் கைது

கொரோனா வைரஸ் பீதியை கிளப்பியதாக மலேசிய பெண் பத்திரிகையாளர் கைது
, வியாழன், 6 பிப்ரவரி 2020 (15:39 IST)
கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் மலேசியர் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், புதன்கிழமை மாலைக்குள் இந்த எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது.

மலேசியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 12ஆக உயர்ந்துள்ளது. எனினும் இவர்களில் ஒன்பது சீன குடிமக்கள் என்பதும், அவர்களில் சிலர் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்குள் வந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் சீனாவில் இருந்து மலேசியா திரும்பிய அந்நாட்டு குடிமக்களில் இருவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கொரோனா பாதிப்புள்ள மலேசிய குடிமக்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட முதல் மலேசிய குடிமகன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மலேசிய குடிமகன் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து 41 வயதான அந்நபர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு நாடு திரும்பி உள்ளார். பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையின் மூலம் அவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

பொய்த்தகவல் பரப்பியதாக குற்றச்சாட்டு: பெண் பத்திரிகையாளர் கைது:

ஏற்கெனவே கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தவறான, பொய்யான, பீதியூட்டும் தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் 12 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பத்திரிகையாளர் ஒருவரையும் அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது.
webdunia

41 வயதான வான் நூர் ஹையாட்டி வான் அலியாஸ் என்ற அந்தப் பெண் பத்திரிகையாளர், மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டு மறுத்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டாண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பினாங்கு மாநிலத்திற்கு சீன குடிமக்கள் ஆயிரம் பேர் கப்பல் மூலம் வந்திறங்கியிருப்பதாக வான் அலியாஸ் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இவர் ஊடகத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளைப் பெற்றவர் என மலேசிய ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த தந்தை, மகனுக்கு கொரோனா பாதிப்பு

இதற்கிடையே கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் வுஹான் நகரில் இருந்த மலேசியர்களில் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து நாடு திரும்பியுள்ளனர்.

தாயகம் திரும்பிய மலேசியர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் வுஹானில் இருந்து திரும்பிய மலேசியர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தந்தையும் மகனுமான அந்த இருவரும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

வுஹான் நகரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மலேசியா அழைத்து வரப்பட்ட 107 பேரில் 45 வயதான ஆடவரும், 9 வயதான அவரது மகனும் அடங்குவர்.

"கிருமித்தொற்று உள்ள தந்தையும் மகனும் மலேசிய விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பரிசோதிக்கப்பட்டனர். எனினும் அப்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. பின்னர் மருத்துவப் பரிசோதனையின் போதே கிருமித் தொற்று உறுதியானது," என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சுல்கிஃப்ளி அகமது தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் 213 பேருக்கு மருத்துவப் பரிசோதனை

மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஜனவரி 10 முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 213 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
webdunia

இவர்களில் 122 பேர் மலேசியர்கள், 86 பேர் சீன குடிமக்கள். ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜோர்டான், பிரேசில், தாய்லாந்தைச் சேர்ந்த தலா ஒருவர் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கிருமித் தொற்று பாதிப்புள்ள ஐந்து பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

கொரோனா பாதிப்பைக் கையாள்வதில் மலேசிய அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் பிரதிநிதியான டாக்டர் யிங்-ரு லோ (Dr Ying-Ru Lo) இதுகுறித்து கூறுகையில், கொரோனா பாதிப்பு குறித்து மலேசியா அரசு அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக அறிவித்ததாகவும், எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டனர், கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் மலேசிய சுகாதார அமைச்சின் இணையதளத்தில் உடனுக்குடன் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா??