Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசிய அரசியல்: சிறையில் முன்னாள் பிரதமர் நஜிப்; இனி என்ன நடக்கும்? - விரிவான அலசல்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (21:21 IST)
நஜிப் ரஸாக்
 
மலேசிய வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சில வழக்குகள் மட்டுமே ஒட்டுமொத்த நாட்டையும் உற்று கவனிக்க வைத்தன எனலாம். அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மீதான ஊழல் வழக்குகளுக்கு அந்த பட்டியலில் நிச்சயம் இடமுண்டு.
 
முன்பொரு சமயம், மங்கோலிய பெண் அல்தான் தூயா வழக்கிலும் நஜிப்பின் பெயர் அடிபட்டது. எனினும் அந்த நெருக்கடியில் இருந்து அவர் பின்னர் தப்பித்தார். ஆனால் 1எம்டிபி நிதி முறைகேடு உள்ளிட்ட ஊழல் வழக்குகள் அவரை மீளமுடியாத சிக்கலில் ஆழ்த்தி விட்டன.

 
 
யார் இந்த நஜிப்?
 
பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் நஜிப். நாட்டின் இரண்டாவது பிரதமர் துன் ரஸாக்கின் மூத்த மகன் ஆவார். மலேசியாவில் ஆக இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றவர். அப்போது அவருக்கு 22 வயது.

 
அந்த முதல் தேர்தலில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அன்று முதல் இன்று வரை அந்த பெகான் நாடாளுமன்றத் தொகுதியின் எம்பியாக அவர் தொடர்ந்து நீடித்து வருகிறார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியபோதும், அத்தொகுதி மக்கள் நஜிப்பை கைவிடவில்லை.

 
மலேசியாவின் ஆறாவது பிரதமராக 2009ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார் நஜிப். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவரது வெற்றிநடை தொடர்ந்தது. எனினும், 2018ஆம் ஆண்டு தேர்தலில் அவரது தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி தோல்வி அடைந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு அக்கூட்டணி சந்தித்த முதல் தோல்வி அது.

 
அதன் பின்னர் அவர் மீது புதிய அரசாங்கம் ஊழல் வழக்குகளைப் பதிவு செய்ததுடன், அதிரடியாக கைது நடவடிக்கையும் மேற்கொண்டது. அதையடுத்து நடைபெற்ற விசாரணைகளின் முடிவில், சிறைத்தண்டனை பெற்றுள்ளார் நஜிப் துன் ரஸாக்.

 
மலைக்க வைக்கும் தொகை அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. இதனால் அவர் திவாலாகும் நிலைமையும் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் அவரது மனைவி, வளர்ப்பு மகன் ஆகியோரும் வழக்குகளில் சிக்கினர்.

 
இங்கிலாந்தில் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த நஜிப் நாடு திரும்பியதும், மலேசியாவின் மத்திய வங்கியிலும், அரசாங்க நிறுவனத்திலும் பணியாற்றினார்.

 
1953ஆம் ஆண்டு பிறந்த நஜிப்புக்கு, 1973ஆம் ஆண்டு, தமது 22 வயதிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. தனது தந்தை காலமானதை அடுத்து கிடைத்த அந்த வாய்ப்பை அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டார்.

 
அதே ஆண்டில் அவர் அன்றைய ஆளும் கட்சியான அம்னோவின் பெகான் தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1976ஆம் ஆண்டு அவருக்கு துணை அமைச்சர் பதவி தேடி வந்தது. இதையடுத்து மாநில அரசியலில் கவனம் செலுத்த கட்சித் தலைமையால் பணிக்கப்பட்டார். 1982 முதல் 1986 வரை மலேசியாவின் பகாங் மாநில முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார் நஜிப்.

 
பிறகு தேசிய அரசியலுக்குத் திரும்பிய அவர், 2009ஆம் ஆண்டு வரை தற்காப்பு, கல்வி, கலாச்சாரம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை எனப் பல்வேறு அமைச்சுகளில் பணியாற்றினார். குறிப்பாக, நிதி அமைச்சராகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகுத்துள்ளார்.
மலேசிய கல்வி அமைச்சராகப் பதவி வகித்த அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக 2004ஆம் ஆண்டு நாட்டின் துணைப் பிரதமராக உயர்வு கண்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளிலேயே நாட்டின் பிரதமராகவும் வாய்ப்பும் கைகூடி வந்தது.
 
 
அரசு முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியில் (1Malaysia Development Berhad - 1MDB) பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, நஜிப்பின் அரசியல் வாழ்க்கையில் சரிவு ஏற்படத் தொடங்கியது எனலாம்.
 
அச்சமயம் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விளக்கங்களை அளிக்கத் தவறிய அவர், அதற்கு நேர்மாறாக அதிகாரத்தின் மீதான தனது பிடியை மேலும் வலுவாக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
 
அப்போது அவரது அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்த மொஹைதின் யாசின் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இரண்டு நாளேடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
 
 
தேசிய பாதுகாப்பு கவுன்சில் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுத்தார் நஜிப்.
 
 
இதன் மூலம் பிரதமருக்கு அளப்பரிய அதிகாரங்கள் கிடைக்கும் என்பதால் எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மேலும், தேச நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் நஜிப் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்கு ஆளாயின. பல்வேறு மானியங்களைக் குறைத்ததால் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துவிட்டதாகவும் அவை சாடின.
 
இந்த நிலையில், 1எம்டிபி ஊழல் விவகாரம் காரணமாக மலேசிய பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, மலேசிய நாணயமான ரிங்கிட் கடும் சரிவைக் கண்டது.
 
 
 
மலேசிய பிரதமர்களிலேயே அங்குள்ள இந்திய சமூகத்துக்கு அதிக நன்மைகளைச் செய்தது நஜிப்தான் என்று ஆளும் தேசிய முன்னணிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.

 
தமிழ் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு, மலேசிய இந்தியர் உருமாற்ற திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, மெட்ரிகுலேஷன் கல்விக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் இந்திய மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான இடங்களை ஒதுக்கியது என மலேசிய இந்திய சமுதாயத்துக்கு அவர் பல்வேறு வகையிலும் உதவிக்கரம் நீட்டியதாக அவர்கள் பட்டியலிடுகின்றனர்.
 
ஒவ்வோர் ஆண்டும் பத்து மலை திருத்தலத்தில் உள்ள முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூச நிகழ்வில் கூடுமானவரை தவறாமல் கலந்துகொள்வார் நஜிப். அவர் பிரதமராக இருந்தபோது, அந்நிகழ்வில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வருவதும் வழக்கம்.
 
மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி தமது அமைச்சரவையில் உள்ள இந்திய சகாக்களின் ஏற்பாட்டில் நடைபெறும் 'திறந்த இல்ல' உபசரிப்பிலும் நஜிப் தம்பதியர் பங்கேற்பர் என்பதையும் அவரது இந்திய ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 
ரஜினியின் தீவிர ரசிகர் நஜிப்

 
 
முன்னாள் பிரதமர் நஜிப் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களில் ஒருவர். 'கபாலி' படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது, இருவரும் சந்தித்துப் பேசினர்.

 
'கபாலி' படத்துக்கு மலேசியாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டபோது சென்னைக்கு வருகைதந்த நஜிப், ரஜினியின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று சந்தித்தார்.

 
இது ரஜினியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது என்றாலும், மலேசிய இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்கான நஜிப்பின் அரசியல் தந்திரம் என்ற விமர்சனமும் எழுந்தது.

 
1எம்டிபி என்ற மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனலிடமிருந்து சுமார் $10 மில்லியனை சட்டவிரோதமாகப் பெற்றதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடரப்பட்ட வழக்கில் அவரை குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் அறிவித்தது. அந்த வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நஜீப் ரஸாக், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். மலேசிய கூட்டரசு நீதிமன்றம், நஜிப்புக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் ( 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் ($46.84 மில்லியன்) அபராதம்) நிலைநிறுத்தியுள்ளது.
 
 
மலேசியாவில் அடுத்த பொதுத்தேர்தல்
 
இதற்கிடையே நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என அம்னோ கட்சி, நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்புக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. நஜிப் ரஸாக் வழக்கின் தீர்ப்பு தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 
நஜிப் மீதான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் முந்தைய நாள் அவர் சார்ந்துள்ள அம்னோவின் முக்கியத் தலைவர்கள் பலர் நடப்பு பிரதமர் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்பை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். புத்ராஜெயாவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
 
 
பிரதமரும் அம்னோ கட்சியைச் சார்ந்தவர்தான். அம்னோ உதவித்தலைவராக உள்ள அவருக்கு, தேர்தலை நடத்தக்கோரி, சொந்த கட்சியினரே அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

 
 
15ஆவது பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் நடத்தப்பட வேண்டும். எனினும் எதிர்வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என சில தரப்புக்கள் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

 
ஆனால், தற்போது தேர்தலை நடத்தினால் ஆளும் தரப்புக்கு சாதகமாக இருக்காது என்கிறார் பிரதமர். அவர் சார்ந்துள்ள அம்னோ கட்சித் தலைவர்களோ, அக்டோபர் அல்லது டிசம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
 
 
எனினும், மலேசியாவில் நாடாளுமன்றத்தை நினைத்த போதெல்லாம் கலைத்துவிட முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். நாளுமன்றத்தைக் கலைப்பதற்கான காரணத்தை அந்நாட்டின் மாமன்னரிடம் பிரதமர் தெரிவிக்க வேண்டும். மாமன்னர் அதை ஏற்கும் பட்சத்தில், அவரது இசைவுடன் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக பிரதமர் அறிவிக்கலாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments