Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜம்மு காஷ்மீரில் நிலம், வீடு வாங்க விருப்பமா?" - நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்

ஜம்மு காஷ்மீரில் நிலம், வீடு வாங்க விருப்பமா?
, புதன், 28 அக்டோபர் 2020 (23:52 IST)
ஜம்மு காஷ்மீரில் இனி இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் நிலம், வீடு வாங்கலாம், தொழில்களில் முதலீடு செய்யலாம் என இந்திய உள்துறை அமைச்சகம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிக்கைக்கு அந்த பிராந்தியத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக இயக்கங்களின் பிரதிநிதிகளும் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

இது தொடர்பாக அமலில் இருந்த ஜம்மு காஷ்மீர் நில உரிமையாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்துள்ள இந்திய அரசு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவற்றில் தொழில் வாய்ப்புகளும், முதலீடுகளும் பெருகும் என்று தெரிவிக்கிறது.

ஆனால், அரசு மேற்கொண்டுள்ள இந்த திருத்தங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். "விவசாயமில்லாத நிலம் மற்றும் வேளாண் நிலத்தை மாற்றிக் கொள்ளும் வாய்ப்புகளை தனது நடவடிக்கை மூலம் இந்திய அரசு பிறருக்கு எளிமையாக்கியிருக்கிறது. ஜம்மு காஷ்மீரை விற்பனைக்கு விடப்படுவது போல அமையும் இந்த செயலால் ஏழை நில உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்," என்கிறார் ஒமர் அப்துல்லா.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரான மெஹ்பூபா முஃப்தி, "ஜம்மு காஷ்மீருக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்தி அதில் உரிமை கொண்டாடும் மக்களின் நிலையை கீழிறக்கும் இந்திய அரசின் வடிவமே புதிய நிலச்சட்டம் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மூன்று மாகாண மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தை இந்த நடவடிக்கை உணர்த்துகிறது," என்று கூறியுள்ளார்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, "இது ஒரு நெடுஞ்சாலை வழிப்பறி போன்றது. ஜம்மு காஷ்மீரின் வளங்களையும் ரம்மியமான அழகையும் அபகரித்து விட்டார்கள். மக்கள் ஜனநாயக கட்டமைப்பை அழித்த பிறகு, கோடீஸ்வர அதிபர்களுக்காக நிலங்களை கட்டாயப்படுத்தி அபகரிக்கும் அடுத்த கட்டம் இது" என்று கூறியுள்ளார்.

இந்திய காஷ்மீர் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள காஷ்மீர் தொடர்பான அந்நாட்டு நாடாளுமன்ற குழுவும், இந்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளது.

"இந்திய அரசின் செயல்பாட்டை கருப்பு தினமாக காஷ்மீரிகள் அனுசரிக்கும் வேளையில், சட்டவிரோதமாக புதிய நிலச்சட்டத்துக்கான அறிவிக்கையை இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இது முற்றிலும் காஷ்மீர் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா தீர்மானத்தை மீறும் செயல். ஐ.நா தீர்மானத்தின்படி ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலையை எவராலும் மாற்ற முடியாது" என்று அந்த குழு கூறியுள்ளது.

ஆனால், "ஜம்மு காஷ்மீர் நிலச்சட்டத்திருத்தத்தின் மூலம் அந்த யூனியன் பிரதேசத்தில் தொழில் வாய்ப்புகள் ஊக்குவிக்கப்படும். அதே சமயம், விவசாய நிலங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகிறார்.

 
"வேளாண் நிலங்கள் மீதான அனைத்து முழு பொறுப்பும் உள்ளூர் விவாசயிகளிடமே இருக்கும் என்றும் வெளியில் இருந்து எவரும் அந்த நிலங்கள் மீது உரிமை கொண்டாட முடியாது," என்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் புதிய தொழில்களை தொடங்க தகுதிவாய்ந்த ஏராளமான தொழில் முதலீட்டாளர்களும் தொழில் முனைவோரும் வரிசையில் காத்திருப்பதாக பிரதமர் அலுவலக விவகாரம், வடகிழக்கு விவகாரங்களுக்கான இந்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

டெல்லியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் அங்குள்ள நில உரிமை தொடர்பான அறிவிக்கையை விரைவில் வெளியிட முதலீட்டாளர்கள் விரும்பியதாக கூறினார். புதிய தொழில்கள் தொடங்கப்படுவதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பு பெருகும், அங்குள்ளவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய நில சட்டத்திருத்த அறிவிக்கை, ஜம்மு காஷ்மீரின் வாழ்வியல் சூழலை மாற்றக்கூடும் என அங்குள்ள அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, "உண்மையில் அங்கு மாறும் வாழ்வியல் சூழலால் தங்களுடைய வாக்கு வங்கியை இழக்க நேரிடுமே என்ற ஏக்கத்தில் சில அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள்," என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

"370ஆவது சட்டப்பிரிவு அமலில் இருந்தபோது, காஷ்மீரிகளின் வாழ்வியலுக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லை என அந்த கட்சிகள் கூறுமேயானால், பாகிஸ்தானில் இருந்து திரும்பிய அகதிகளுக்கு ஏன் அந்த கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது வாக்குரிமையை வழங்கவில்லை?" என்று ஜிதேந்திர சிங் கேள்வி எழுப்பினார்.

ஜம்மு காஷ்மீர் நிலங்களுக்கு ஏன் சிறப்புச்சலுகை?

ஜம்மு காஷ்மீரில் 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாத கடைசி வாரத்தில் ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் மூலம் காஷ்மீர் ராஜ்ஜியம் இந்தியாவின் அங்கமானதும் அங்கு இந்திய ராணுவம் வருகை தந்தது. அந்த நிகழ்வை கருப்பு தினமாக அங்குள்ளவர்கள் இந்த வார தொடக்கத்தில் கடைப்பிடித்தனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் நிலச்சட்டங்களில் திருத்தம் செய்யும் அறிவிக்கையை இந்திய உள்துறை வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதிவரை, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் இந்திய அரசியலமைப்பின் 370, 35ஏ பிரிவின்படி அந்த பிராந்தியத்தில் பிறந்தவர்கள் மட்டுமே அங்குள்ள நிலத்துக்கு உரிமையை கொண்டாட முடியும். அங்குள்ள நிலத்தையோ சொத்துகளையோ வெளி மாநிலத்தவர்கள் வாங்க முடியாது.

ஆனால், புதிய திருத்தத்தால், இனி இந்தியாவில் பிறந்த எந்த மாநிலத்தவரும் ஜம்மு காஷ்மீரில் நிலத்தையோ வீடுகளையோ வாங்க முடியும். புதிய தொழில்களில் முதலீடு செய்ய முடியும். வர்த்தக தேவைக்கு நிலங்களை கையகப்படுத்த முடியும்.

இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் நிலங்கள் மீது ஜம்மு காஷ்மீரிகள் கொண்டிருந்த ஏகபோக உரிமைக்கு முடிவு காணப்பட்டிருப்பதாக அங்குள்ள அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

இதே வேளை, வேளாண் தொடர்பான நிலத்தை வேறு பயன்பாடுகளுக்கு உபயோகிக்க முடியாது என்று புதிய சட்டத்திருத்தம் தெளிவுபடுத்துகிறது. அதே சமயம், சுகாதாரம், கல்விக்காக எந்த நிலத்தையும் அதை வாங்கும் நபரின் தேவைக்கு ஏற்ப மாற்றும் வசதியை புதிய சட்டத்திருத்தம் வழங்குகிறது. மேலும், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் இத்தகைய நிலத்தை மாற்றிக் கொள்ள அனுமதியில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கார்ப்ஸ் கமாண்டர் எனப்படும் கட்டளை தளபதியின் ஆணைப்படி பயிற்சிக்காக ஒரு இடம் தேவைப்படும் என கருதினால் அதை கையகப்படுத்தி ராணுவ பகுதியாக அறிவித்து அதை ராணுவத்துடன் இணைத்துக் கொள்ளலாம் என்று புதிய சட்டத்திருத்தம் கூறுகிறது.

இந்திய அரசின் இந்த புதிய அறிவிக்கை, இனி ஜம்மு காஷ்மீரில் அதிக தொழில் முதலீடுகளை குவிக்கவும் "சுற்றுலா துறையை மேம்படுத்தும் நடவடிக்கை" என்ற பெயரில் அங்குள்ள நிலங்களில் விடுதிகளை கட்டவும் தொழில் முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.

ஆனால் இந்த நடவடிக்கைக்கு விலையாக, இயற்கை சூழல் மற்றும் இயல்பு மாறாத ஜம்மு காஷ்மீரின் இயற்கை வளங்கள் விலையாகக் கொடுக்கப்படுவதாக அங்குள்ளவர்கள் சமூக ஊடகங்களில் கவலையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க ஏற்கெனவே அந்த பிராந்தியத்தில் ஏழு அரசியல் கட்சிகளுடன் பல்வேறு உள்ளூர் சமூக அமைப்புகள் இணைந்து குப்கார் இயக்கம் என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கியுள்ளன. அவை இந்திய அரசின் சமீபத்திய அறிவிக்கையை கடுமையாக எதிர்க்கின்றன. இந்த நிலையில், இந்திய அரசின் ஆணைப்படி புதிய தொழில்கள் அல்லது முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வந்தாலும், அவர்கள் எதிர்ப்புக்குரல் கொடுக்கும் இந்த கட்சிகளையும் சமாளிக்க நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தவர் வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த சண்முகம் சுப்பையாவுக்கு பதவி?…உதயநிதி ஸ்டாலின் கேள்வி !