Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரிய கிரகணம் டிசம்பர் 14: எங்கு, எப்போது, எப்படி தெரியும்?

சூரிய கிரகணம் டிசம்பர் 14: எங்கு, எப்போது, எப்படி தெரியும்?
, திங்கள், 14 டிசம்பர் 2020 (16:08 IST)
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி கதிரவ மறைப்பு (சூரிய கிரகணம்) டிசம்பர் 14ஆம் தேதி திங்களன்று நிகழவுள்ளது.
 
பூமி மற்றும் சூரியனுக்கு இடையே நிலவு கடந்து செல்லும்போது சூரியன் மறைக்கப்படுவது சூரிய கிரகணம் எனப்படும். இந்த நேரத்தில் நிலவின் நிழல் பூமியின் மேற்பரப்பின் மீது விழும். சூரியனின் ஒளி நிலவின் மீது விழுவதால்தான் இந்த நிழல் பூமி மீது விழுகிறது என்பதால், பகல் நேரத்தில் மட்டுமே கதிர்வ மறைப்பைக் காண முடியும்.
 
ஆனால், கதிர்வ மறைப்பு நிகழும்போது பூமியில் எங்கெல்லாம் பகல் நேரம் உள்ளதோ அங்கெல்லாம் காண முடியாது. நிலவு உருவத்தில் சிறியது என்பதால், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே கடந்து செல்லும்போது, அதன் நிழல் பூமியில் எந்தெந்தப் பகுதிகளில் தென்படுமோ, அந்தப் பகுதிகளில் இருந்து மட்டுமே கதிரவ மறைப்பைக் காண முடியும்.
 
சூரிய கிரகணம் டிசம்பர் 14 - 15-ல் எப்போது நிகழும்?
இந்திய நேரப்படி இந்த நிகழ்வு டிசம்பர் 14ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 7:03 மணிக்கு தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி அதிகாலை 12:23 மணி வரை நீடிக்கும். இந்த சூரிய கிரகணத்தின் உச்சம் டிசம்பர் 14ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 9:43 மணிக்கு நிகழும்.
 
நவம்பர் 30-ஆம் தேதி நடந்த நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்) நிகழ்ந்தபோது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பகல் நேரம் என்பதால் அப்போது, இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் அதைக் காணமுடியவில்லை.
 
அதைப் போலவே டிசம்பர் 14ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும்போது, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இரவு நேரம் என்பதால் அப்போதும் இந்தப் பகுதிகளில் இருந்து, சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாது.
 
சூரிய கிரகணத்தை எங்கிருந்து காண முடியும்?
தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு பகுதிகள், ஆஃப்பிரிக்க கண்டத்தின் தென்மேற்கு பகுதிகள், அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் இருந்து டிசம்பர் 14ஆம் தேதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
 
தென் அமெரிக்காவின் தெற்கு பகுதியிலுள்ள சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய பகுதிகளில், கதிரவ மறைப்பின் உச்சம் நிகழும் இரண்டு நிமிடம், பத்து நொடிகளுக்கு முழு கதிரவ மறைப்பு (Total Solar Eclipse) நிகழும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
 
அதாவது இந்த நேரம் பகலிலேயே இருள் போல காட்சியளிக்கும். ஏனென்றால் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே கடந்துசெல்லும் நிலவு பூமியிலிருந்து சூரியன் தெரியாதபடி முழுமையாக அதை மறைத்துக்கொள்ளும்.
 
வேறு சொற்களில் சொல்வதானால், சூரிய கிரகணம் உச்சத்தில் இருக்கும் அந்த நேரத்தில் சூரியன் மீது நிலவை வைத்ததைப் போன்ற தோற்றம் பூமியிலிருந்து தெரியும். அப்போது நிலவின் நிழல் பூமியின்மீது விழுந்து, சூரிய ஒளி விழாதபடி செய்யும்.
 
சூரியன் நிலவைவிட பன்மடங்கு பெரியது என்றாலும், சூரியன் பூமியிலிருந்து வெகுதொலைவிலும், நிலவு பூமிக்கு அருகாமையிலும் இருப்பதால் இந்தத் தோற்றம் உண்டாகும்.
 
வளைவு கதிரவ மறைப்பு (Annular solar eclipse) நிகழும் நேரத்தில் சூரியனுக்கு நடுவில் நிலவு கடந்து செல்லும். இந்த வகை கதிரவ மறைப்பின் உச்சத்தின்போது நிலவு சூரியனின் மையத்தை மறைக்கும். இதனால், சூரியனின் நடுப்பகுதி மறைக்கப்பட்டு, வெளி வட்டம் மட்டுமே தெரியும்.
 
அதை பூமியில் இருந்து பார்க்கும்போது, சூரியன் ஒரு நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும். பகுதி கதிரவ மறைப்பின்போது (Partial solar eclipse) நிலவின் ஒரு பகுதி, சூரியனின் ஒரு பகுதியை மறைக்கும். இதன்போது பூமி, நிலவு, சூரியன் ஆகிய மூன்றும் சீரான நேர்கோட்டில் இருக்காது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் பேட்டி: நான் யாருடைய பி அணி தெரியுமா?