Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய காகங்களை கொடிய பறவையாக கருதும் கென்யா - 10 லட்சம் காகங்களை கொல்லும் முடிவு ஏன்?

Crows

Prasanth Karthick

, வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (13:31 IST)

"கட்டுக்கடங்காமல் பறக்கும் ஏலியன் பறவைகள்" - இந்த வாக்கியம் ஒரு பயங்கரமான ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படத்தின் பெயர் போல் தோன்றலாம். ஆனால் கடலோர கென்யா மக்களுக்கு இது நிஜத்தில் நடக்கும் ஒன்று.

 

 

இந்திய காகங்கள் கென்யாவில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள அதிகாரிகள் பிரச்னைக்கு தீர்வாக 10 லட்சம் காகங்களை கொல்லும் பணியை தொடங்கியுள்ளனர்.

 

ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய திகில் படமான 'தி பேர்ட்ஸ்’ என்ற படத்தில் வருவதைப் போல இந்த பறவைகள் மனிதர்களை குறிவைக்கவில்லை. ஆனால் இவை பல ஆண்டுகளாக வன உயிரினங்களை வேட்டையாடுவதன் மூலமும், சுற்றுலா பகுதிகளில் தொந்தரவுகள் ஏற்படுத்துவதன் மூலமும், கோழிப் பண்ணைகளைத் தாக்குவதன் மூலமும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன

 

கென்யாவில் கொடிய பறவையாக கருதப்படும் இந்த இந்திய காகங்களை கொல்ல முதற்கட்டமாக வாடாமு மற்றும் மலிந்தி ஆகிய நகரங்களில் விஷம் பயன்படுத்தப்படுகிறது.

கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு அருகில் காகங்கள் நடமாடுவதைத் தடுப்பதே இந்த மிகப்பெரிய நடவடிக்கையின் குறிக்கோள்.

 

இந்திய காகங்கள் கென்யாவில் பரவியது எப்படி?

 

இந்திய காகம் கென்ய கடற்கரையில் "குங்குரு" அல்லது "குராபு" என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவைகள் இந்தியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவை. இது பெரும்பாலும் வர்த்தகக் கப்பல்களில் பயணம் செய்வதன் மூலம் கண்டம் தாண்டி பரவுகின்றன.

 

ஆனால் அவை 1890களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது, அப்போது பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருந்த சான்சிபார் தீவுக்கூட்டத்தில் பெருகிவரும் கழிவுப் பிரச்னையைச் சமாளிக்கும் முயற்சியில் காகங்கள் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது.

 

அங்கிருந்து, அவை நிலப்பரப்பு மற்றும் கென்யா கடற்கரை வரை பரவியது.

 

குங்குரு காகங்கள் முதன்முதலில் 1947 இல் மொம்பாசா துறைமுகத்தில் இருந்ததாக பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் அதனுடன் இணைந்து அதிகரிக்கும் குப்பை மேடுகளால்தான் இந்த பறவைகள் அதிகளவில் பெருகின. குப்பை மேடுகள் பறவைகளுக்கு உணவளிப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் சிறந்த சூழலை வழங்குகின்றன. இவற்றை இயற்கையாக வேட்டையாடும் விலங்கினமும் ஏதும் இல்லை.

webdunia

இந்திய காகங்களை கொடிய பறவையாக கென்யா கருதுவது ஏன்?
 

"இந்திய காகங்கள் பறவைகளை மட்டும் வேட்டையாடாமல், பாலூட்டிகள், ஊர்வனங்கள் ஆகியவற்றையும் வேட்டையாடுகின்றன - இதனால் பல்லுயிர் மீதான அவற்றின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்துகிறது" என்று கென்யாவின் வாடாமு பகுதிக்கு வருகை தரும் நெதர்லாந்தை சேர்ந்த பறவைகள் நிபுணரான ஜாப் கிஜ்ஸ்பெர்ட்சன் பிபிசியிடம் கூறினார்.

 

காகங்கள் மற்ற பறவைகளின் முட்டை மற்றும் குஞ்சுகளைக் கூட குறிவைத்து தாக்கி, அவற்றின் கூடுகளை அழிப்பதன் மூலம், வீவர்ஸ் மற்றும் வாக்ஸ் பில் (weavers and waxbills) போன்ற சிறிய உள்நாட்டுப் பறவைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளன என்று இயற்கை பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.

 

"உள்ளூர் பறவைகளின் எண்ணிக்கை குறையும் போது, ​​சுற்றுச்சூழல் பாதிக்கப்பட தொடங்குகிறது. பறவைகளால் வேட்டையாடப்படும் தீங்கு விளைவிக்கும் விஷப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று ரோச்சா கென்யா என்ற பாதுகாப்புக் குழுவின் ஆராய்ச்சி விஞ்ஞானி லெனாக்ஸ் கிராவ் கூறினார்.

 

பயிர்கள், கால்நடைகள் மற்றும் கோழிகளை காகங்கள் சேதப்படுத்துகின்றன.

 

"அவை கோழி குஞ்சுகளின் மீது பாய்ந்து ஆக்ரோஷமாக தாக்குகின்றன. இவை சாதாரண பறவை இனம் அல்ல, காட்டுத்தனமாக செயல்படுகின்றன" என்று கிலிஃபி கவுண்டியில் உள்ள டகாயே கிராமத்தில் வசிக்கும் யூனிஸ் கட்டானா கூறினார்.

 

கிராவோவின் கூற்றுப்படி, அவை துன்பத்தில் இருக்கும் போது அல்லது இரையை கண்டதும் ஒரு தனித்துவமான ஒலியை எழுப்புகின்றன.

 

தலை மீது எச்சமிடும் என்று மக்கள் அச்சம்
 

மொம்பாசா நகரில் சுவர்கள் மற்றும் கூரைகளில் காகங்கள் எச்சமிடுவதால் வீடுகள் அசுத்தமாகின்றன. அதே நேரத்தில் பலர் தலை மீது காகங்கள் எச்சமிடும் என்று பயந்து மர நிழல்களின் கீழ் உட்காரவே தயங்குகின்றனர்.

 

"இந்த காகங்கள் அதிகாலை முதலே எரிச்சலூட்டும் சத்தத்தை எழுப்ப தொடங்கிவிடுகிறது. எனவே மக்களின் தூக்கம் பாதிக்கப்படுகிறது." என்று மொம்பாசாவில் குடியிருக்கும் விக்டர் கிமுலி பிபிசியிடம் கூறினார்.

 

இந்த பிரச்னைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, விஷம் வைக்கும் நடவடிக்கை மூலம் இந்திய காகங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கருதினர். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதற்கான பணிகள் தொடங்கியது.

 

இந்த நடவடிக்கை பற்றி சுற்றுச்சூழல் வல்லுநர்கள், பாதுகாவலர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஹோட்டல் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பல மாதங்கள் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கென்யா வனவிலங்கு சேவை தெரிவித்துள்ளது.

 

விஷம் வைக்கும் செயல்முறை
 

"நாங்கள் அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம்," என்று கிராவ் கூறினார்.

 

இந்த அழித்தல் செயல்முறை மூலம் விஷம் வைப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே அவற்றுக்கு இறைச்சி போன்ற இரையை அவை கூடும் இடங்களில் வைத்து பழக்கப்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவை வழக்கமாக இரை தேடும் இடமாக மாறும்.

 

"அந்த இடங்களில் அதிக எண்ணிக்கையில் காகங்கள் வந்து இரை உண்ணும் வழக்கம் வந்தது, அவற்றுக்கு நாங்கள் விஷம் கொடுக்கிறோம்," என்று ரோச்சா கென்யா அமைப்பை சேர்ந்த அதிகாரி எரிக் கினோட்டி கூறினார்.

 

இந்த செயல்முறையில் பிற பறவைகள் அல்லது விலங்குகளை பாதிக்காமல், காகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் செயல்திறன் மிக்கதாக நிரூபிக்கப்பட்ட ஒரே பொருள் `ஸ்டார்லைசைட்’ எனப்படும் பறவை விஷம் மட்டுமே.

 

விஷத்தை இறக்குமதி செய்ய உரிமம் பெற்ற `லிட்டில் கென்யா கார்டன்ஸ்’ நிறுவனம், 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,000 காகங்கள் காகங்களை கொன்றதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிசிலியா ரூடோ கூறினார்.

 

"மெதுவாக செயல்படும் இந்த விஷம், காகம் இறப்பதற்கு முன் முழுவதுமாக வளர்சிதையாக மாற்றமடைகிறது - அதாவது, இறந்த காகத்தின் சடலத்தை உண்ணும் வேறு எந்த உயிரினங்களுக்கும் இரண்டாம் நிலை விஷம் ஏற்படும் அபாயம் இல்லை" என்று ரூட்டோ விளக்கினார்.

 

நாட்டில் தற்போது 2 கிலோ விஷம் இருப்பில் உள்ளது, இது சுமார் 20,000 காகங்களைக் கொல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் நியூசிலாந்தில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

மனிதாபிமானம் அற்ற செயல்முறை என வாதிடும் ஆர்வலர்கள்

எவ்வாறாயினும், கென்யாவில் இந்த விஷத்தின் பயன்பாடு விலங்கு மற்றும் பறவை உரிமை ஆர்வலர்களிடமிருந்து கவலைகளை எழுப்பியுள்ளது. அவர்கள் காகங்களுக்கு விஷம் கொடுப்பது மனிதாபிமானமற்றது என்றும் மரணம் அல்லாத மாற்று முறைகள் ஆராயப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

 

" விஷம் வைப்பது என்பது ஒரு குறுகிய கால தீர்வாகும், இது பிரச்னையின் மூல காரணத்தை நிவர்த்தி செய்யாது" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் லியோனார்ட் ஒன்யாங்கோ கூறினார்.

 

ஆனால் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பூர்வீக உயிரினங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையை உறுதிப்படுத்தவும் செய்யப்படுவதாக கூறுகின்றனர்.

 

"நாங்கள் இப்போது விஷம் வைக்கும் நடவடிக்கை செய்யவில்லை என்றால், சேதம் மீள முடியாததாகிவிடும்," என்று காகங்களை அழிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராவ் கூறினார்.

 

ஆனால், இந்த திட்டத்தை அரசாங்கம் தொடங்குவது இது முதல் முறை அல்ல.

 

20 ஆண்டுகளுக்கு முன்னர் முந்தைய முயற்சியானது பறவைகளின் எண்ணிக்கையைக் குறைத்தது, ஆனால் பின்னர் ஸ்டார்லைசைட் நாட்டிற்குள் வருவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அதன் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்தது.

 

சுற்றுலா விடுதிகளை கூடாரமாக்கும் காகங்கள்
 

குப்பை கொட்டும் இடங்கள் மட்டுமின்றி சுற்றுலா விடுதிகள் காகங்களின் விருப்பமான இடமாக மாறியுள்ளன, அங்கு அவை உணவருந்தும் இடங்களில் ஒன்றாக கூடி விருந்தினர்கள் தங்கள் உணவை அனுபவித்து உண்ணும் போது இடையூறு விளைவிப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

"விடுமுறையை அனுபவிக்க, உணவருந்த எங்கள் ஹோட்டல்களுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு காகங்கள் ஒரு பெரிய தொந்தரவாக மாறிவிட்டன" என்று கென்யா ஹோட்டல் கீப்பர்கஸ் மற்றும் கேட்டர்ஸ் சங்கத்தின் தலைவரான மவ்ரீன் அவுர் கூறினார்.

 

கென்யா முழுவதும் பரவும் அபாயம்
 

சில ஹோட்டல்களில் ஊழியர்கள் காக்கைகளைப் பிடித்து கழுத்தை நெறித்து மூச்சுத்திணறச் செய்கின்றனர். சில இடங்களில் உண்டிவில்லை பயன்படுத்தி அவற்றைப் பயமுறுத்துவதற்காக ஊழியர்களை அமர்த்தியுள்ளனர்.

 

ஆனால் மற்ற காகங்கள் இறப்பதையும், மாட்டிக் கொள்வதையும் பார்த்து அந்த பகுதிகளைத் தவிர்க்கும் அளவுக்கு காகங்கள் புத்திசாலித்தனமாக இருப்பதால் அவற்றுக்கு வைக்கப்படும் பொறி பயனற்று போகிறது.

 

பெருமளவிலான காகங்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் தங்களுக்கு வேறு வழியில்லை என்று நினைக்கிறார்கள். குறிப்பாக இனிவரும் காலங்களில் காகங்கள் உள்நாட்டில் பரவக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளன.

 

தலைநகர் நைரோபியில் இருந்து சுமார் 240 கிமீ தொலைவில் உள்ள எம்டிட்டோ ஆண்டேய் பகுதியில் இந்த பறவைகள் காணப்பட்டதாக பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.

 

"எனது மிகப்பெரிய பயம் என்னவென்றால், நாம் இப்போது எதுவும் செய்யவில்லை என்றால், காகங்கள் நைரோபியை அடைந்துவிடும். இது நாட்டில், குறிப்பாக நைரோபி தேசிய பூங்காவில் உள்ள பறவையினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்" என்று கிராவ் கூறினார்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு! என்ன காரணம்?