Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேடும் கமல்; 'இனி பகுதிநேரம்தான் சினிமா'

உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேடும் கமல்; 'இனி பகுதிநேரம்தான் சினிமா'
, திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:59 IST)
உள்ளாட்சித் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் ஆயத்தமாகி வருகிறது. ` நடப்பு அரசியலைப் பற்றி நாம் பேசும் விஷயங்கள் எல்லாம் மக்கள் ஏற்கெனவே அறிந்தவைதான். அவர்களிடம், நாம் சரியானவர்கள் என்பதை நம்ப வைக்க வேண்டும்' எனக் கட்சி நிர்வாகிகளிடம் மனம் திறந்து கமல் பேசியிருக்கிறார். கமலின் உள்ளாட்சி வியூகம் என்ன?
 
தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் உள்பட அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
 
இதையொட்டி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்களை நியமிப்பதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால், வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வியூகம் ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
 
தி.மு.கவின் உள்ளாட்சி வியூகம்
 
அந்த வரிசையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் நடக்கவுள்ள ஒன்பது மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமைன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
அப்போது, ` கூட்டணிக் கட்சிகளையும் அனுசரித்து அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடங்களை ஒதுக்க வேண்டும், தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திட்டங்களை விளக்கிக் கூறி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். மேலும், இந்தத் தேர்தலில் நூறு சதவிகித வெற்றியைப் பெற வேண்டும்' எனவும் மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியானது.
webdunia
அ.தி.மு.க தரப்பிலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதையொட்டி அக்கட்சியின் மாவட்டசெயலாளர்களுடன் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகிய இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். குறிப்பாக, தேர்தல் நடக்கவுள்ள ஒன்பது மாவட்டங்களில் 7 இடங்கள் வடக்கு மாவட்டங்களில் வருவதால் பாட்டாளி மக்கள் கட்சியின் தயவு உள்பட பல்வேறு விஷயங்களை அ.தி.மு.க ஆலோசித்து வருகிறது.
 
மக்கள் நீதி மய்யம் 2.0.
 
அதேநேரம், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கவனத்தை ஈர்த்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் பெரும் சோதனையை அளித்தது. அக்கட்சியின் வாக்கு சதவிகிதமும் 2.62 என்ற அளவில் குறைந்தது. ஏறக்குறைய இரண்டு தேர்தல்களுக்கும் இடையில் ம.நீ.ம பெற்ற வாக்குகளில் 7 லட்சம் குறைந்தன. தவிர, கோவை தெற்குத் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசனிடம் கமல் தோற்றுப் போனார்.
 
இதனையடுத்து, கட்சியை சீரமைக்கும் நடவடிக்கைகளில் கமல்ஹாசன் இறங்கினார். இதன் தொடர்ச்சியாக, கமீலா நாசர், மகேந்திரன், சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல் உள்பட ம.நீ.மவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு விலகினர்.
 
இதனால் பெரிதாக கமல் அதிர்ச்சியடையவில்லை. தொடர்ந்து, `ம.நீ.ம 2.0' என்ற பெயரில் நிர்வாக அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இதற்காக, மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த நிர்வாகிகளிடம் மனம் திறந்து பேசச் சொன்னார். அவர்களில், `யாருக்கு என்ன திறமையுள்ளது?' என்பதை அறிந்து அவர்களுக்கான பொறுப்புகளையும் மாற்றியமைத்தார்.
 
"உள்ளாட்சித் தேர்தலை மிக முக்கியமான ஒன்றாக கமல் பார்க்கிறார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி வலுவாக இருப்பதைக் காட்டிக் கொள்வதற்கு இதைவிட வேறு தருணம் அமையப் போவதில்லை என்ற மனநிலையில் இருக்கிறார். அதையொட்டி, தன்னை சந்திக்க வருகிறவர்களிடம் கமல் மனம் திறந்து பேசி வருகிறார்" என்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர்.
 
வேட்பாளர்களைத் தேடும் கமல்
 
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள மாவட்டங்களில் ஒன்றிய தலைவர் உள்பட அதற்கு மேல் உள்ள பதவிகள் எல்லாம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளாக உள்ளன.
 
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மிக முக்கியமானதாகப் பார்க்கிறோம். தோற்றுப் போனாலும் மக்களிடம் நம்பிக்கையைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் கமல் இருக்கிறார். கட்சி எங்கே பலவீனமாக இருக்கிறதோ அங்கே அதனை சரிசெய்யும் வேலைகள் நடக்கின்றன.
 
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள் கிராமப்புறங்களில் ம.நீ.மவின் கட்டமைப்பை ஓரளவு வலுப்படுத்த வேண்டும் என்ற மனநிலையில் தலைமை இருக்கிறது. அதேபோல், தேர்தலில் போட்டியிடுவதற்கு நல்ல வேட்பாளர்களையும் தேடிக் கொண்டிருக்கிறோம். காரணம், பல கிராமங்களில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஆள்களே இல்லை.
webdunia
இதன் காரணமாக, ஊருக்குள் செல்வாக்காக இருப்பவர்களையும் புதிதாக கட்சிக்குள் வருகிறவர்களில் செல்வாக்காக உள்ளவர்களையும் அடையாளம் கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன. காரணம், இந்தத் தேர்தலில் சின்னத்தைவிட தனி மனிதர்களின் செல்வாக்குக்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.
 
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தோற்றாலும் உள்ளாட்சியில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றதற்கு இதுதான் பிரதான காரணமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் உள்ளூரில் இருந்த முக்கிய பிரமுகர்கள்தான் தி.மு.கவை காப்பாற்றினார்கள். எனவே, உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறோம்" என்கிறார்.
 
மேற்கு மண்டலத்தை நம்பும் கமல்
மேலும், `` கட்சி மீண்டு வந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்கான ஒன்றாக இந்தத் தேர்தலை கமல் பார்க்கிறார். கட்சி தொடங்கிய காலத்திலேயே, ` எந்த இடத்தில் பேச வேண்டும் என மக்கள் விரும்புகிறார்களோ, அங்கே இருந்து பேசுவேன்' என்றார் கமல்.
 
அதைத்தான் தற்போது செய்து வருகிறார். தற்போது கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்யும் வேலைகள் நடக்கின்றன. மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு உள்ள மாவட்டங்களில் முக்கியமானதாக மேற்கு மண்டலத்தைப் பார்க்கிறார். அவருக்கு வாக்களித்த கோவை தெற்குத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என விரும்பினார்.
 
கொரோனா நெருக்கடி காரணமாக பயணம் தடைபட்டது. இதைப் பற்றி நிர்வாகிகளிடம் பேசும்போது, `மக்களுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். நாம்தான் நேர்மையாக இருக்கிறோம் என நினைத்துக் கொண்டு இங்கு வந்தோம். நாங்களும் இருக்கிறோம் என பெரிய கூட்டமே நமக்கு வாக்களித்தனர். நாம் எதிர்பார்த்த இடங்களில் இன்னும் கூடுதலாக வாக்குகளை வாங்கியிருக்கலாம். அவர்களை உற்சாகப்படுத்துவது மிகவும் முக்கியம்' என்றார்.
 
தொடர்ந்து தன்னை சந்திக்க வந்தவர்களிடமும், ` நாம் இன்னும் செயல்பட வேண்டியுள்ளது. மக்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். நடப்பு அரசியலைப் பற்றி நாம் பேசும் விஷயங்கள் எல்லாம் அவர்கள் ஏற்கெனவே அறிந்தவைதான்.
 
நாம் சரியானவர்கள் என்பதை அவர்கள் நம்ப வேண்டும் என்றால், அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்' என்றார். அடுத்ததாக, மாவட்ட செயலாளர்கள், அணித் தலைவர்கள் மாற்றம் நடக்க உள்ளது. புதிய நிர்வாகிகளை கூட்டமைப்பாக இயங்க வைப்பது, அவர்களுக்கு நேரம் கொடுத்து செயல்பட வைப்பது போன்ற பணிகள் நடக்க உள்ளன" என்கிறார் விரிவாக.
 
இனி பகுதிநேரம்தான் சினிமா
`ம.நீ.மவின் உள்ளாட்சி வியூகம் என்ன?' என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` சட்டமன்றத் தேர்தலின் தொடர்ச்சியாக சோர்ந்து போகாமல் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த உள்ளோம்.
 
தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையிலும் கிராமங்கள்தோறும் மக்கள் நீதி மய்யம் சென்றடைவதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தலை அணுக இருக்கிறோம். உள்ளாட்சி அதிகாரத்தில் ம.நீ.மவின் பங்களிப்பு அதிகப்படியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பணிகள் நடந்து வருகின்றன" என்கிறார்.
 
மேலும், "கமலின் அரசியல் அறிவு குறித்து மக்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் சரிவர வராத காரணங்களை ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ந்து மக்களை உற்சாகப்படுத்தும்விதமாக தேர்தலை சந்திக்க உள்ளோம். இனி வரும் நாள்களில் அரசியலில் இருந்து கொண்டு சினிமாவுக்கு கமல் நேரம் ஒதுக்க உள்ளார். அதுவும் தொழிலுக்காகவும் வருமானத்துக்காகவும்தான். மற்றபடி, மக்களோடுதான் இனி அவர் இருப்பார்" என்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

35 ஆயிரமான தினசரி பாதிப்புகள்; இந்தியாவில் கொரோனா நிலவரம்!!