Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாழ். பல்கலை: புதிய ஆடைக் கட்டுப்பாட்டு அறிவித்தலால் சர்ச்சை

யாழ். பல்கலை: புதிய ஆடைக் கட்டுப்பாட்டு அறிவித்தலால் சர்ச்சை
, வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (15:07 IST)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், 'கலாசாரத்தை' பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல் மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

 
ஆண்கள் முகச்சவரம் (க்ளீள் ஷேவ்) செய்திருக்க வேண்டும், ரீசேட் அணியக் கூடாது, மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் கலைப்பீட அறிவித்தல் பலகைகளின் ஊடாக தெரிவிக்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
 
இந்த அறிவிப்புகள் தம்மைக் கட்டுப்படுத்துவதாக உள்ளதாக மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
யாழ். பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்களின் உடை மற்றும் அவர்களின் கலாசார பண்பாடு தொடர்பிலும் பல்கலைகழகத்திலும் சமூகத்திலும் வெளிப்பட்ட கரிசனையை அடுத்து, கலைப்பீட ஆசிரியர்கள் மட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ஞானகுமாரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
இது கட்டாய விதிமுறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுடன், முஸ்லிம் மாணவர்கள் உட்பட யாரையும் வற்புறுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், பெண்களை சேலை அணியச் சொல்லி விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
 
இது குறித்து கருத்து தெரிவித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிவகாந்தன் தனுஜன், மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்டி வருவதை மாணவ பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டபோதிலும் பிற கட்டுப்பாடுகள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார்.
 
மாணவிகளை மாத்திரம் சேலை கட்டி வருமாறு கூறுவதை ஆணாதிக்க நடைமுறையாகக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
 
மாணவிகள் தரப்பில் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவி டினோஷா ராஜேந்திரன், கிழமையில் ஒருநாள் சேலை அணிவது தொடர்பில் மாணவிகளிடம் எவரும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil