Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்ரோ ராக்கெட்: 36 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் - ஏவும் இடம், நேரம் - முழு விவரம்

Advertiesment
இஸ்ரோ ராக்கெட்: 36 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் - ஏவும் இடம், நேரம் - முழு விவரம்
, புதன், 19 அக்டோபர் 2022 (22:32 IST)
பிரிட்டனின் ஒன்வெப் செயற்கைக்கோள் நிறுவனத்துக்காக ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவிலிருந்து எல்.வி.எம்.3 ராக்கெட் ஏவப்பட உள்ளது. வணிக ரீதியில் ராக்கெட் ஏவும் உலகளாவிய சந்தையில் இந்த முயற்சி இந்தியாவுக்கு ஒரு மைல்கல் என்று இஸ்ரோ தெரிவிக்கிறது.

 
புவியின் தாழ் வட்டப்பாதையில் ஏவப்படும் (LEO) செயற்கைக்கோள்களை தயாரிக்கும் நிறுவனமான 'ஒன்வெப்', இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் இந்திய விண்வெளித்துறையின் வணிகப்பிரிவான 'நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்' (என்எஸ்ஐஎல்) ஆகியவை இணைந்து வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களை ஏவுவது தொடர்பாக இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

 
அதன்படி, இஸ்ரோவின் அதிக எடைகொண்ட ராக்கெட்டான எல்.வி.எம்.3 மூலம் ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும். முதலில் 'ஜிஎஸ்எல்வி எம்கே3' என்று இந்த ராக்கெட்டுக்கு பெயர் இருந்த நிலையில், பின்னர் அது 'எல்விஎம்3' என்று பெயர் மாற்றம் பெற்றது.

 
"வணிக ரீதியில் ராக்கெட் ஏவுதலுக்கான உலகளாவிய சந்தையில் இஸ்ரோ அடியெடுத்து வைக்கும் வரலாற்று முயற்சியாக ஒன்வெப் உடனான இந்த ஒப்பந்தம் இருக்கும்," என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 

 
பிரிட்டனைச் சேர்ந்த இந்த நிறுவனம் உலகளாவிய தகவல்தொடர்பு வலைப்பின்னலாக இயங்குகிறது. அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான தகவல் தொடர்பை வழங்கும் உலகளாவிய கூட்டமைப்பாக இது செயல்படுகிறது. இந்தியாவின் பார்தி ஏர்டெல் நிறுவனம், ஒன்வெப் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குதாரர் என்றும் இஸ்ரோ தெரிவிக்கிறது.

 
இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், இஸ்ரோவும், என்எஸ்ஐ நிறுவனமும் இணைந்து எல்.வி.எம்3 ராக்கெட் மூலம், 36 செயற்கைக்கோள்களை இந்த நிறுவனத்துக்காக தாழ்புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 
இதற்காக, இந்தியா கொண்டு வரப்பட்ட ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் சோதிக்கப்பட்டு, அக்டோபர் 14ஆம் எல்விஎம்3 ராக்கெட்டில் வைக்கப்பட்டன.
 
எப்போது ஏவப்படும்?
 
அக்டோபர் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்திய நேரப்படி நள்ளிரவைக் கடந்த அதிகாலை 12.07 மணிக்கு, எல்விஎம்3 ராக்கெட் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக ஒன்வெப் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
 
 
இந்த ராக்கெட் ஏவும் காட்சியை பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி பார்க்கும் வசதியை இந்திய விண்வெளிஆய்வு மையம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. அதற்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இணையதளத்தில் உள்ள பார்வையாளர் பதிவு இணைப்பை கிளிக் செய்து பார்வையாளர் தங்களுடைய விவரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு உபயோகத்தில் உள்ள மின்னஞ்சல், செல்பேசி எண், ஆதார் அட்டை நகல் இருத்தல் அவசியம்.

 
இந்த விவரங்களை பதிவேற்றம் செய்தவுடன் பார்வையாளர் மாடத்துக்கு அக்டோபர் 23ஆம் தேதி செல்வதற்கான நுழைவு அனுமதிச்சீட்டு ஆன்லைனில் கிடைக்கும். அதை பதிவிறக்கம் செய்துகொண்டு சம்பந்தப்பட்ட பொதுமக்கள் விண்வெளி மையத்தை அடைந்து ராக்கெட் ஏவும் காட்சியை பார்க்கலாம்.

 
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்துக்கு அருகே உள்ள ரயில் நிலையம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் சூலூர்பேட்டை என்ற இடத்தில் உள்ளது.இது விண்வெளி மையத்தில் இருந்து 16 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையத்தில் இருந்து டாக்ஸி அல்லதுஆட்டோ மூலம் விண்வெளி மையத்துக்குச் செல்லலாம்.
 
 
 
தொடர்ந்து தாழ்புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை அனுப்பிக் கொண்டிருக்கும் ஒன்வெப் நிறுவனம், இந்த செயற்கைக்கோள்களின் உதவியுடன், உலக நாடுகளுக்கு அதிவேக இன்டர்நெட் சேவையைக் கொடுப்பது தான் தமது இலக்கு என்று தெரிவித்திருந்தது.
 
 
2020ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி தன் 36 செயற்கைக் கோள்களை, ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தியது ஒன்வெப் நிறுவனம்.

 
அப்போது, 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது சேவையை உலக நாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்தியாவுக்கு 2022ஆம் ஆண்டு மத்தியில் இருந்து அதிவேக இன்டர்நெட் கிடைக்கலாம் என்றும் ஒன்வெப் கூறியிருந்தது.

 
இந்த நிலையில், அக்டோபர் 23ஆம் தேதி இந்தியாவிலிருந்து 36 செயற்கைக்கோள்களுடன் எல்விஎம்3 ராக்கெட் புவியின் தாழ்வட்டப் பாதை நோக்கி ஏவப்பட தயாராக உள்ளது. இஸ்ரோவுக்கும் என்எஸ்ஐ நிறுவனத்துக்கும் இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று என்எஸ்ஐஎல் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக ஒன்வெப் நிறுவனத்தின் இணையம் தெரிவித்துள்ளது.

 
உலகளாவிய இணைய சேவையை வழங்க, 'ஒன்வெப்' நிறுவனம் வைத்த இலக்கான 650 செயற்கைக் கோள்களில், தற்போது அனுப்பப்பட உள்ள 36 செயற்கைக் கோள்களையும் சேர்த்து 462 ஆகிறது.
 
 
ஜிஎஸ்எல்வியிலிருந்து எல்விஎம் என பெயர் மாற்றம் பெறுவதற்கு ஒரே காரணம், இந்த ராக்கெட் செயற்கைக்கோள்களைபுவி ஒத்திசைவு வட்டப்பாதையில் நிலைநிறுத்தாது.
 
ஒன்வெப் செயற்கைக்கோள்கள் 1,200 கிலோமீட்டர் உயரத்தில் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் (LEO) இயங்குகின்றன.
 
இதேவேளை, புவி ஒத்திசைவு வட்டப்பாதை, பூமியின் பூமத்திய ரேகைக்கு மேலே 35,786 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது 23 மணி நேரம் 56 நிமிடங்கள் 4 விநாடிகள் கொண்ட பூமியைச் சுற்றும் தாழ்வான சாய்வு வட்டப்பாதையாகும்.
 
ஜியோசின்க்ரோனஸ் வட்டப்பாதையில் உள்ள ஒரு விண்கலம் வடக்கு மற்றும் தெற்கு நோக்கி அலைவது போல் தோன்றினாலும் அது பூமிக்கு மேலே ஒரு நிலையான தீர்க்கரேகையில் இருப்பதாகவே தோன்றுகிறது, அதனால்தான் இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி எம்.கே2 ரக ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்க்கே தலைமையில் காங்கிரஸ் வலுப்பெற வாழ்த்துகள்! - ராமதாஸ்