Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சன்னியாசியான இளம்பெண்கள்: பெற்றோர் புகாரை மறுக்கும் ஈஷா மையம்

சன்னியாசியான இளம்பெண்கள்: பெற்றோர் புகாரை மறுக்கும் ஈஷா மையம்
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (05:43 IST)
கோவை வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் திருமணமாகாத இரு மகள்கள் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், இதனை ஈஷா மறுத்துள்ளது.
 

 
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியரான காமராஜ், தன் இளைய மகள் லதா சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஈஷா தியான வகுப்புச் செல்ல ஆரம்பித்து, அதற்குப் பிறகு மெல்ல மெல்ல அவர்களது மையத்திற்கு செல்ல ஆரம்பித்ததாகத் தெரிவித்தார்.
 
அதற்குச் சில காலம் கழித்து, ஒட்டுமொத்தமாகவே ஈஷா மையத்தில் லதா தங்கிவிட்டதாகவும், லண்டனில் படித்துவந்த தன் மூத்த மகள் கீதாவும் அதற்குப் பிறகு இந்த மையத்திற்குச் சென்றுவிட்டதாகவும் காமராஜ் கூறினார்.
 
மையத்தில் சேர்ந்த புதிதில் தங்களை அடிக்கடி சந்தித்த தங்கள் மகள்கள், பிறகு சந்திக்க மறுப்பதாகவும் கடைசியாக சந்தித்தபோது மொட்டை அடித்து சன்னியாசம் வாங்கியிருப்பதைப் பார்த்து தாங்கள் அதிர்ந்து போயிருப்பதாகவும் தெரிவித்தார் காமராஜ்.
 
இந்தப் புகார் குறித்து ஈஷா மையத்தில் கேட்டபோது, அந்தப் பெண்கள் விரும்பியே இங்கு தங்கியிருப்பதாகத் தெரிவித்தர்.
 
பிபிசி தமிழோசையிடம் பேசிய சுவாமி ஏகா என்பவர், அந்தப் பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் செல்லலாம் என்றும் யாரும் அவர்களைத் தடுக்கவில்லையென்றும் கூறினார். மேலும் கடந்த இரு மாதங்களில் அந்தப் பெண்களின் பெற்றோர் பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் வந்து பார்த்துச் சென்றதாகத் தெரிவித்தார்.
 
விரைவில், அந்தப் பெண்களையும் தாய் - தந்தை இருவரையும் சந்தித்துப் பேசவைக்க காவல்துறை முடிவெடுத்துள்ளது. இதற்கிடையில் ஊடகங்களிடம் பேசிய அந்தப் பெண்கள், தாங்கள் விரும்பியே ஈஷா மையத்தில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
 
ஜக்கி வாசுதேவ் என்பவரால், 1992ல் துவக்கப்பட்ட ஈஷா மையம் கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இயங்கி வருகிறது. இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தங்களிடம் யோகக் கலையைப் பயின்றிருப்பதாக இந்த மையம் தெரிவிக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அதிமுக இப்படி செய்தது வருத்தம் அளிக்கிறது’ - தமிழிசை சவுந்தரராஜன் கவலை