Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்கள் மலம் கருப்பாக வெளியேறுகிறதா? அது எவ்வளவு ஆபத்தானது?

Advertiesment
உங்கள் மலம் கருப்பாக வெளியேறுகிறதா? அது எவ்வளவு ஆபத்தானது?

Prasanth Karthick

, செவ்வாய், 23 ஜூலை 2024 (15:49 IST)

நம்மில் பலரும் காலைக்கடன் கழிக்கும்போது நமது மலம் கருப்பாகவோ, நெகிழ்வான தன்மையுடனோ இருப்பதை கவனித்திருப்போம்.
 

அது நாம் முந்தைய நாள் உண்ட உணவினால் இருக்கக்கூடும் என்று அதனைப் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டோம்.
 

ஆனால், இதனைச் சரியாக கவனிக்காவிட்டால் அது பெரிய சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

மலம் கருப்பாக இருப்பது ‘black or tarry stools’ என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ மொழியில் இது மெலெனா (Melena) என்றழைக்கப்படுகிறது.
 

இது ஏன் ஏற்படுகிறது? இது எவ்வளவு ஆபத்தானது? இதனை எப்படிச் சரிசெய்வது?

 

மலம் ஏன் கருப்பாக மாறுகிறது?


 

மலம் கருப்பாக இருப்பதற்கு ஜீரண அமைப்பின் மேற்பகுதியில் ஏற்படும் சிக்கல்தான் முக்கியக் காரணம் என்று அமெரிக்க அரசின் தேசிய மருத்துவ நூலகத்தின் தகவல் தெரிவிக்கிறது. அதாவது வயிறு, சிறுகுடல், பெருங்குடலின் வலப்பகுதி ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது.
 

இந்தப் பகுதிகளில் ஏற்படும் சிக்கலால் ரத்தக்கசிவு ஏற்பட்டு அது வயிற்றில் கலக்கும் போது, அங்கிருக்கும் உணவோடு சேர்ந்து அது மலத்தில் கருப்பாக வெளியேறுகிறது.
 

ஆகவே, மலம் கருப்பாக இருப்பதற்கு நமது ஜீரண அமைப்பில் ஏற்படும் சிக்கல்களால் நடக்கும் ரத்தக்கசிவே காரணம்.
 

இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள பிபிசி தமிழ் சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடல் மருத்துவரான மலர்விழியிடம் பேசியது.
 

அதற்கு பதிலளித்த அவர், வழக்கமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் நமது மலம், கருப்பாக மாறுவதற்கு அதனோடு ரத்தம் கலப்பதுதான் காரணம் என்றார். “வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களோடு ரத்தம் கலக்கும்போது இது ஏற்படுகிறது. அப்படிக் கலந்து அது மலக்குடல் வழியே வெளிவருகிறது,” என்கிறார் அவர்.
 

இப்படி மலம் கருப்பாக மாறுவதற்கு அதில் அதிகபட்சம் 60மில்லி ரத்தம் கலந்திருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் மலர்விழி.

 

ரத்தக் கசிவு ஏன் ஏற்படுகிறது?


 

இவ்வாறு வயிற்றிலும் குடலிலும் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான முக்கியக் காரணம், அல்சர் எனப்படும் குடல் மற்றும் வயிற்றுப்புண் என்கிறார் மருத்துவர் மலர்விழி.

அல்சர் ஏற்பட்டிருந்தால், அந்தப் புண்களிலிருந்து கசியும் ரத்தம் வயிற்றில் கலந்து மலத்தைக் கருப்பாக்குகிறது.
 

இதற்கு மற்றொரு முக்கியக் காரணம், கல்லீரல் பிரச்னை என்கிறார் மருத்துவர் மலர்விழி. கல்லீரல் பிரச்னைகள் இருந்தால், உணவுக்குழாயில் இருக்கும் நரம்புகள் புடைக்கும் நிலை ஏற்படும் என்கிறார் அவர். இது ஈசோஃபேகல் வேரிசஸ் (Esophageal varices) என்று அழைக்கப்படுகிறது.
 

இப்படிப் புடைக்கும் நரம்புகள் வெடித்து, அவறிலிருந்து ரத்தம் கசிந்தாலும், அது மலத்தோடு கலந்து மலம் கருப்பாக மாறும் என்கிறார் மருத்துவர் மலர்விழி.

 

முக்கியக் காரணங்கள் என்ன?

webdunia

 

இப்படி ரத்தம் கசிவதற்குக் காரணமான குடல் மற்றும் கல்லீரல் பிரச்னைகள் ஏன் ஏற்படுகின்றன என்று மருத்துவரிடம் கேட்டபோடது, அவர் இதற்குப் பல காரணிகள் உள்ளன என்கிறார்.
 

குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுவதற்கு மிகமுக்கியமான காரணம் ஹெலிகோபாக்டர் பைலோரி (Helicobacter pylori) எனப்படும் கிருமி என்கிறார் அவர். இந்தக் கிருமி பெப்டிக் அல்சர் அல்லது கேஸ்ட்ரிக் அல்சர் ஆகிய நோய்களை ஏற்படுத்துகிறது, என்கிறார் அவர்.
 

“இந்தக் கிருமி கலந்த உணவை உட்கொண்டால் அல்சர் ஏற்படும். உணவுப் பொருட்கள் சரியாகப் பாதுகாத்து வைக்கப்படாவிட்டால் இக்கிருமிக் கலப்பு ஏற்படும்,” என்கிறார் அவர்.
 

கல்லீரல் பிரச்னைகள் ஏற்படுவதைக் குறித்துப் பேசிய அவர், மது அருந்துவதால் கல்லீரல் சேதம் ஏற்படும் என்கிறார்.
 

அதேபோல், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொண்டால், கல்லீரலில் கொழுப்பு சேரும் (fatty liver), என்கிறார்.
 

இவைகளும் கல்லீரல் பிரச்னைகளை ஏற்படுத்தி, நரம்புப் புடைப்பின் மூலம் ரத்தக்கசிவை ஏற்படுத்தலாம் என்கிறார் மருத்துவர் மலர்விழி.
 

மேலும், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய காரணங்களும் இந்தப்பிரச்னைகளைத் தீவிரப்படுத்தும் என்கிறார் அவர்.

 

இது எவ்வளவு ஆபத்தானது?


பொதுவாக குடல் அல்லது வயிற்றுப்புண் ஏற்பட்டால், ரத்த வாந்தி வரும், அதனால் பீதியடைந்து மக்கள் மருத்துவரை நாடுவார்கள். ஆனால் அதே காரணத்தால் மலத்தில் ரத்தம் கலந்து கருப்பாக வெளியேறினால், அது அலட்சியமாக எடுத்துக்கொள்ளப் படுகிறது, என்கிறார் மருத்துவர் மலர்விழி.
 

“இப்படி தொடர்ந்து அதிக நாட்கள் மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறினால், அது ரத்தசோகை ஏற்பட வழிவகுக்கும். அதனால் இந்த வயிற்றுப்பிரச்னையைச் சரிசெய்யாமல் ரத்தசோகையைக் குணப்படுத்துவது இயலாது,” என்கிறார் அவர்.

 

மலம் கருப்பாக வெளியேறினால் என்ன செய்ய வேண்டும்?


 

உடனடியாகச் சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் மலர்விழி.

“அப்போதுதான் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, உடனே சிகிச்சை அளிக்க முடியும்,” என்கிறார் அவர். “இல்லையென்றால் தொடர்ந்து ரத்த இழப்பு ஏற்படும்,” என்கிறார்.
 

இதற்கு என்ன சிகிச்சை?


 

முதலில் எந்த இடத்திலிருந்து ரத்தம் கசிகிறது என்பதைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் சோதனை ஆகியவை செயப்படும், என்கிறார் மருத்துவர் மலர்விழி.
 

எந்த இடத்திலிருந்து ரத்தம் கசிகிறது என்பதைக் கண்டறிந்தவுடன் அதனை நிறுத்துவதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும் என்கிறார் அவர். “ஒவ்வொரு நோயாளிக்கும் இதற்கான சிகிச்சை மாறுபடும்,” என்கிறார்.

 

‘உங்கள் மலத்தை கவனியுங்கள்’


 
 

இதுகுறித்து மேலும் பேசிய மருத்துவர் மலர்விழி, முன்பு மது அருந்துவதால் கல்லீரல் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தாலும், கடந்த 20 வருடங்களில், மதுப்பழக்கம் சாராத கல்லீரல் பிரச்னைகள் அதிகரித்து வடுவதாகக் கூறுகிறார். இதற்கு முக்கியக் காரணம் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்தான், என்கிறார்.
 

“உங்கள் மலத்தின் நிறமும் தன்மையும் உங்கள் உடல் ஆரோக்கியத்தின் நேரடிப் பிரதிபலிப்பு. நம்மில் பலரும் நமது மலத்தைக் கவனிப்பதற்குச் சங்கடப்பட்டுக்கொண்டு அதனைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால் அதனைக் கவனித்து, அதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்,” என்கிறார் அவர்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவண்ணாமலையில் 300-வது பௌர்ணமி கிரிவலம்- பக்தர் தவழ்ந்து சென்று வழிபாடு!