Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் திரிபு தோன்றியதற்கு குறைவாக தடுப்பூசி செலுத்தியது ஒரு காரணமா?

தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் திரிபு தோன்றியதற்கு குறைவாக தடுப்பூசி செலுத்தியது ஒரு காரணமா?
, செவ்வாய், 7 டிசம்பர் 2021 (12:40 IST)
தென்னாப்பிரிக்காவில் அதிவேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கைக்கும் புதிய கொரோனா திரிபான ஒமிக்ரானுக்கும் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது.

ஒமிக்ரான் முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட போது, அந்தத் திரிபு பரவாமல் இருக்க பல புதிய எல்லை பாதுகாப்பு தொடர்பான தடைகள் விதிக்கப்பட்டன.

பொதுவாக மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

எனவே, தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் திரிபு தோன்றியதற்கு குறைவாக தடுப்பூசி செலுத்திக் கொண்டது ஒரு காரணமாக இருக்குமா?

தென்னாப்பிரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விவரம்:

பொதுவாக 100 பேருக்கு 100 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது உலக சராசரியாக உள்ளது. சில பணக்கார நாடுகள் இந்த எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் கடந்துள்ளன.

ஆனால் தென்னாப்பிரிக்காவில் 100 பேருக்கு 42 டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி அப்பிராந்தியம் முழுவதும் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தரவுகளில் தெரியவருகின்றன. உதாரணமாக லெசோத்தோ என்கிற நாட்டில் 100 பேருக்கு 30 டோஸ் தடுப்பூசியும், நமீபியா நாட்டில் 100 பேருக்கு 25 டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் திரிபுக்குக் குறைவாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டது ஒரு காரணமாக இருக்குமா?

தென்னாப்பிரிக்காவில் கெளடங் மாகாணத்தில் கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டிலேயே மிகக்குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மூன்று மாகாணங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாகாணத்தின் ஒட்டுமொத்தப் பெரியவர்கள் மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கைக்கும் ஒமிக்ரான் திரிபுக்கும் நேரடியாக எந்த ஒரு தொடர்பையும் நிறுவ முடியவில்லை.

வைரஸ் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்குப் பரவும்போது பிறழ்கிறது. அதேபோல பாதிக்கப்பட்ட ஒரு நபரின் உடலுக்குள் தன்னைத்தானே பிரதி எடுத்தார்போல் வைரஸ் உருவாகும் போதும் பிறழ்கிறது.

குறைவாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களுக்கு மத்தியில், அதிக அளவில் கொரோனா தொற்று பவரலைக் காணலாம், அதேபோல அதிக உடல் நலக்குறைவோடு இருப்பவர்களையும் காணலாம். இது வைரஸ் பிறழ்வுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருப்பவர்கள் அல்லது முன்பே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வைரஸ் கடக்க விரும்பும் போதுதான், அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிறழ்வுகள் உண்டாகின்றன.
webdunia

எனவே குறைந்த அளவுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட, கொரோனா வைரஸ் அதிகம் பரவி இருக்கக்கூடிய, ஆனால் முழுமையாக கொரோனா வைரஸை அழிக்க இயலாத மக்கள் தொகையே புதிய பிறழ்வுகள் உண்டாவதற்கான மிகச் சிறந்த சூழல்.

அதேபோல ஏற்கனவே நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் (உதாரணமாக ஹெச்.ஐ.வி தொற்றுள்ளவர்களைக் குறிப்பிடலாம்), நீண்ட காலமாக அல்லது மிகத் தீவிரமான கொரோனா அறிகுறிகளை கொண்டவர்கள் கூட பிறழ்வுகள் ஏற்படுவதற்கான நல்ல சூழலை உருவாக்குகிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு அதற்குரிய சிகிச்சையைப் பெறாமல் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

போதிய அளவுக்குத் தடுப்பூசிகள் இருக்கின்றனவா?

பொதுவாக ஆப்பிரிக்க நாடுகள் இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள், தடுப்பூசி நன்கொடைகள், கோவேக்ஸ் என்கிற கொரோனா தடுப்பூசி பகிர்வுத் திட்டம் ஆகியவற்றை நம்பி உள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளைப் பெற பல நாடுகள் சிரமப்பட்டன, ஆனால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் இந்த நிலை மாறியது.

ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் அதிகரித்தது என்றாலும், குறைந்த கால கட்டத்திற்குள், விரைவாக காலாவதியாகக் கூடிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக குளோபல் வேசின் அலையன்ஸ் எனப்படும் கவி அமைப்பு கூறுகிறது.

இதனால் நாடுகள் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை திட்டமிட சிரமப்பட்டன என்று, கவி தன் அறிக்கையில் கூறியுள்ளது. உதாரணமாக தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம், அதிகப்படியான கையிருப்பு இருந்ததால், அதிகப்படியான கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அந்நாட்டு சுகாதார அமைச்சர் தாமதப்படுத்தினார்.

பல ஆப்பிரிக்க நாடுகளில், கொரோனா தடுப்பூசி காலாவதியானதால் அதை பயன்படுத்த முடியாமல் தூக்கி வீசப்பட்டது குறித்துச் செய்திகள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

ஏர்ஃபினிட்டி ஆய்வுத் திட்டத்தின் தரவுகளின் படி, தென்னாப்பிரிக்காவுக்கு 32.5 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்பட்டன. அந்நாட்டின் மொத்த பெரியவர்கள் மக்கள் தொகை 40 மில்லியன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

போட்ஸ்வானாவுக்கு 2.4 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்பட்டன, அந்நாட்டின் மக்கள் தொகை 2.3 மில்லியன், நமீபியாவில் உள்ள 2.5 மில்லியன் மக்களுக்கு ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டன.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதாவது தயக்கம் இருக்கிறதா?

தொடர்ந்து சீராக தடுப்பூசிகள் விநியோகிக்கப்படாதது ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது என்றாலும், எதார்த்தத்தில் தென்னாப்பிரிக்கா தன் நாட்டில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை நிறுத்தி வைக்க வேண்டிய சூழலை எதிர்கொண்டு வருகிறது.

போலி செய்திகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன, குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் என தென்னாப்பிரிக்காவின் சுகாதார அமைச்சர் ஜோ பாலா (Joe Phaahla) கூறினார்.

சில நேரங்களில் தவறான செய்திகளால் அல்லது தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சரியான செய்திகள் போதிய அளவுக்கு இல்லாததால் மக்கள் மத்தியில் நிறைய அச்சம் நிலவுகிறது.

பரவலாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மற்றும் 100 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் அடிப்படையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் தீவிர உடல்நலக் குறைவு ஏற்படுவது மிக மிகக் குறைவு.

மக்கள் மத்தியில் உலவும் சில தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றாலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கூட கொரோனா தொற்று ஏற்படும் என்பது போன்ற தகவல்களில் கொஞ்சம் உண்மையும் இருக்கின்றன.

தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறையோடு கூட்டாண்மை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில், தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கொரோனா தொற்று ஏற்படும் என்கிற தகவலால், தடுப்பூசி வேலை செய்யாது என்கிற முடிவுக்கு சில தரப்பு மக்கள் சிந்திக்க வழிவகுத்துள்ளது என கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் அது உண்மையல்ல, தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் கூட கொரோனா தொற்று ஏற்படலாம், ஆனால் தடுப்பூசி காரணமாக லேசான கொரோனா மட்டுமே ஏற்படும். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதைக் குறைக்கும், கொரோனாவால் ஏற்படும் மரண அபாயத்தையும் மிகப்பெரிய அளவில் தடுப்பூசிகள் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் போக, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, மக்கள் அதிக தூரம் பயணம் மேற்கொண்டு தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் வட மேற்கு பகுதியில் கிராமப் புறத்தில் உள்ள சமூக மக்களால் தடுப்பூசி மையங்களை எளிதாக அணுக முடியவில்லை என அந்நாட்டின் சுகாதாரத் துறை கூறியுள்ளது. சில பகுதிகளில் தடுப்பூசி விநியோகப் பிரச்சனையும் உள்ளன.

"தென்னாப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான கருத்து கொண்டவர்களை விட, தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பலருக்கு நிறைய தயக்கம் இருக்கிறது" என்கிறார் விட்ஸ் பல்கலைக்கழகத்தில் தடுப்பூசிகள் மற்றும் தொற்று நோய்கள் பிரிவில் ஆராய்ச்சியாளராக இருக்கும் சாரா டவுன்ஸ்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட் விலைக்கும் கம்மி விலையில்... Samsung Galaxy A03 Core!!