Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேஜிக் காளான்களில் உள்ள சைலோசிபின் மன அழுத்தத்திற்கு மருந்தாக பயன்படுகிறதா?

Advertiesment
Brain-eating Microbes
, புதன், 13 ஏப்ரல் 2022 (15:32 IST)
மேஜிக் காளான்களில் காணப்படும் சைலோசிபின் என்கிற ஒருவித மயக்கத்தை தரக்கூடிய ரசாயனம், தீவிர மன அழுத்தத்தில் சிக்கியுள்ளவர்களை அதிலிருந்து விடுவிக்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மன அழுத்தத்திலிருந்து வெளியில்வர எடுத்துக்கொள்ளப்படும் வழக்கமான மருந்துகளைவிட இவை அதிக செயலாற்றுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக 60 பேரின் மூளையை ஸ்கேன் செய்ததில் வெளியான இந்த ஆய்வு முடிவுகள் மூலம், சைலோசிபினை கொண்டு மன அழுத்தத்திற்கு தனித்துவமான வழியில் சிகிச்சை அளிக்க முடியும் என தெரியவந்துள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறுபட்ட மனநல பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க சைக்கேடெலிக் மயக்க மருந்துகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், நோயாளிகள் சைலோசிபின் ரசாயனத்தை தாங்களாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது என, ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மன அழுத்தத்திற்கு தீர்வா சைலோசிபின்?

தீவிரமான மருத்துவக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இந்த சைலோசிபின், சோதனை முயற்சியாக மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டது. இதனை எடுத்துக்கொள்வதற்கு முன்பும் பின்னரும் அவர்களுக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்த ஆய்வின் ஆசிரியரும் லண்டன் இம்ரியல் கல்லூரியின் சைக்கேடெலிக் ஆய்வு மையத்தின் தலைவருமான பேராசிரியர் டேவிட் நட், சைலோசிபின் குறித்த சமீபத்திய முடிவுகள் "ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும்" "முக்கியமானதாகவும்" அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது அவருடைய மூளை ஒரு சுழலுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு, குறிப்பிட்ட எதிர்மறையான எண்ண ஓட்டத்திலேயே பயணிக்கும் என அவர் தெரிவித்தார்.

ஆனால், சைலோசிபினை எடுத்துக்கொள்ளும்போது, மூன்று வாரங்களுக்குப் பின் மூளை அதிலிருந்து விடுவிக்கப்பட்டு "மிக நெகிழ்வானதாக" மாறும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நோயாளிகளின் மூளைகளை ஸ்கேன் செய்தபோது, மூளையின் பல்வேறு பகுதிகளுக்கிடையேயான இணைப்புகள் அதிகமாவது தெரியவந்துள்ளது. சில மாதங்களில் அந்த நோயாளிகள் தங்கள் மனநிலையில் முன்னேற்றத்தை உணர ஆரம்பிப்பார்கள்.

ஆனால், மன அழுத்தத்திற்கு வழக்கமான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களின் மூளைகளில் இத்தகைய மாற்றங்கள் தென்படவில்லை.

"எங்களின் ஆரம்பகட்ட அனுமானங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலும், மன அழுத்தத்திற்கான மாற்று சிகிச்சையாக சைலோசிபின் இருக்கும் என்பதையும் இந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன" என பேராசிரியர் நட் தெரிவித்தார்.

மூளையின் செயல்பாடு

ஒருவித மயக்கத்தை தரக்கூடிய சைக்கேடெலிக் ரசாயனம், அனைத்து உணர்வுகளின்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஒரு நபரின் எண்ண ஓட்டம், காலத்தை உணர்தல் மற்றும் மனித உணர்ச்சிகளை மாற்றவல்லது.

மன அழுத்தத்திற்கு வழக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் தினந்தோறும் எடுக்க வேண்டியவை, மாறாக அந்த மருந்துகளால் ஏற்படும் அதே விளைவை சைலோசிபினை ஒன்று அல்லது இருமுறை மட்டுமே எடுப்பதன் மூலம் ஏற்படுத்தலாம். ஆனால், அதிகமான நோயாளிகளிடையே இதனை அடுத்தக்கட்டமாக ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலமே இதனை உறுதிப்படுத்த முடியும்.

நேச்சர் மெடிசின் ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த முடிவுகள், இரண்டு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. முதல் ஆய்வில், ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்கள் சைலோசிபினை உட்கொண்டனர். இரண்டாவது ஆய்வில் ஒருசிலருக்கு சைலோசிபினும் மற்றவர்களுக்கு வேறுபட்ட மருந்துகளும் வழங்கப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர்கள் மூலம் அவர்கள் பேச்சு தெரபியும் எடுத்துக்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுவதற்கு முன்பும், தெரபிக்கு பின்னர் ஒரு நாள் அல்லது மூன்று வாரங்களுக்குப் பின்பும் அவர்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டன.

"இன்னும் அதிக ஆய்வுகள் தேவை"

இந்த ஆய்வின் மூத்த ஆசிரியரான பேராசிரியர் ராபின் கார்ஹர்ட் - ஹாரிஸ் கூறுகையில், "சைலோசிபின் சிகிச்சையால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. இதனை புரிந்துகொள்ள நாங்கள் இன்னும் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும், "சில நோயாளிகள் பழைய நிலைக்குத் திரும்புவதை நாங்கள் அறிகிறோம். இது அவர்களுடைய மூளைகள், மன அழுத்தத்தால் கடினமான அமைப்புகளின் செயல்பாடுகளில் சிக்கியதிலிருந்து பழைய நிலைக்குத் திரும்புவதால் இருக்கலாம்" என்றார் அவர்.

இந்த ஆய்வுகள் குறித்த முந்தைய முடிவுகளில், சைலோசிபின் சிகிச்சை மூலம் மன அழுத்தத்தால் ஏற்படும் அறிகுறிகளை குறைப்பதாக தெரியவந்தது. ஆனால், அது எப்படி, ஏன் நிகழ்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு அப்போது தெரியாமல் இருந்தது.

ஆனால், இப்போது அனோரெக்ஸியா போன்ற மனநல பிரச்னைகளில் மூளை இணைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தங்கள் கோட்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் சோதிக்க நினைக்கின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பீஸ்ட்’ இந்தி வசனம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!