Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா மீது மலேசியா உலக வர்த்தக நிறுவனத்தில் புகார் செய்கிறதா? மகாதீர் என்ன சொல்கிறார்?

Advertiesment
இந்தியா மீது மலேசியா உலக வர்த்தக நிறுவனத்தில் புகார் செய்கிறதா? மகாதீர் என்ன சொல்கிறார்?
, புதன், 23 அக்டோபர் 2019 (21:42 IST)
மலேசிய பாமாயிலைப் புறக்கணிக்க வேண்டும் என இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக சங்கம் ஒன்று அறைகூவல் விடுத்துள்ள நிலையில், இந்தியா குறித்து உலக வர்த்தக அமைப்பிடம் (WTO) புகார் ஏதும் தெரிவிக்கப் போவதில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் இது தொடர்பாக தம்மிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், மலேசியப் பாமாயிலைப் புறக்கணிக்குமாறு இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
 
"எனவே தற்போதைய சூழலில் இந்தியா குறித்து உலக வர்த்தக அமைப்பிடம் மலேசியா புகார் அளிக்காது," என்றும் மகாதீர் தெளிவுபடுத்தினார்.
 
மலேசிய பாமாயிலை புறக்கணிக்குமாறு கூறிய இந்திய வர்த்தக சங்கம்
இது எதிர்பார்த்த ஒன்றுதான்; எனினும் இவ்வளவு துரித கதியில் நடக்கும் என மலேசிய அரசு எதிர்பார்த்திருக்காது.
 
மலேசிய பாமாயில் இறக்குமதியை குறைப்பதற்கான வழிமுறைகளை இந்திய அரசு ஆராய்ந்து வருவதாக அண்மையில் வெளியான செய்தி சர்வதேச வர்த்தக தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
 
இந்நிலையில், மலேசிய பாமாயிலை புறக்கணிப்போம் என மும்பையில் அமைந்துள்ள எண்ணெய் விதைகள் சுத்திகரிப்பு ஆலைகள் சங்கம் அறைகூவல் விடுத்திருக்கிறது.
 
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான உறவில் தற்போது நெருடல், நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், இத்தகைய தருணத்தில் நாட்டின் இறையாண்மையைக் காக்க இந்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அச்சங்கத்தின் தலைவர் அதுர் சதுர்வேதி கேட்டுக் கொண்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
 
 
மலேசிய பாமாயில் இறக்குமதி குறித்து இந்திய அரசு உறுதியான ஒரு முடிவை எடுக்கும் வரை வர்த்தகர்கள் காத்திருக்க வேண்டும் என்றும், பாமாயில் இறக்குமதியை தற்போதைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் அதுல் சதுர்வேதி கேட்டுக் கொண்டுள்ளார்.
 
மலேசியாவுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்று கூறிய மகாதீர்
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மலேசிய பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் இந்திய அரசுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது. தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மலேசியா, துருக்கி அரசுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அண்மையில் அறிவுறுத்தியது.
 
இந்நிலையில் மலேசிய பாமாயில் மீதான இறக்குமதி வரியை இந்திய அரசு உயர்த்த இருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், கடந்த சில தினங்களாக மலேசிய பாமாயிலை இறக்குமதி செய்யும் அளவை இந்திய வர்த்தகர்கள் திடீரென குறைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
 
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மலேசிய பிரதமர் துன் மகாதீர் மொஹமத், இரு நாடுகளுக்கும் இடையே நடப்பது ஒரு வழி வர்த்தகம் அல்ல என்று சுட்டிக்காட்டி இருந்தார். மேலும், இரு தரப்புக்கும் இடையேயான உறவு மற்றும் வர்த்தகம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார்.
 
தென் சீனக்கடல் சர்ச்சை: 'அபோமினபிள்' படத்துக்கு மலேசியாவில் தடை
 
"மனிதகுல வரலாற்றில் பாலுறவு இன்றி பலர் வாழ்ந்தும் வளம் பெற்றும் உள்ளனர்" பிரகதி 
இதன் மூலம் அவர் இந்திய அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்பட்டது. தவிர, மலேசியப் பொருட்களையும், மலேசியாவையும் புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தால் மலேசியாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் மகாதீர் அண்மையில் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், மலேசிய பாமாயிலை இந்திய வர்த்தகர்கள் புறக்கணிக்க வேண்டும் எனும் கோரிக்கை பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.
 
வர்த்தகத்தில் எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்கிறது மலேசியா
 
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியானது வர்த்தகத்தை நம்பியுள்ளதாகவும், தங்களுக்கு வர்த்தகச் சந்தைகள் என்பன மிகவும் அவசியம் என்றும் அதில் எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் கூறுகிறார் மகாதீர்.
 
இந்திய வர்த்தக சங்கம் ஒன்று மலேசிய பாமாயிலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது குறித்து செவ்வாய்க்கிழமை (அக். 22) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது பிரதமர் மகாதீரிடம் இருந்து திட்டவட்ட பதில் வெளிப்பட்டது.
 
இத்தகைய புறக்கணிப்பால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து மலேசிய அரசு ஆராய்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், மலேசிய பாமாயிலைப் புறக்கணிக்குமாறு இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
"இந்த விவகாரத்தில் இந்திய அரசின் கொள்கை என்ன என்பது தெரிய வேண்டும். இந்திய அரசு இதுவரை ஏதும் கூறவில்லை. எனவே புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ள தரப்பினரை எவ்வாறு அணுகுவது, தொடர்பு கொள்வது என்பதைக் கண்டறிய வேண்டும். ஏனெனில், மலேசியா ஒரு வர்த்தக நாடு," என்றார் மகாதீர்.
 
அண்மையில் தாம் தெரிவித்துள்ள சில கருத்துக்களால் இந்தியா, மலேசியா இடையே வர்த்தகப் போர் ஏற்படாது என உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், மலேசிய அரசு புதுடெல்லியுடன் இது குறித்துப் பேசும் என்றார்.
 
"நாம் (மலேசியா) இனிமையானவர்கள். அதேசமயம் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியும் உள்ளது. நாம் கூறுவது சிலருக்குப் பிடிக்கும் எனில், சிலருக்குப் பிடிக்காமல் போகும்," என்றார் மகாதீர்.
 
இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படும் எனக் கருதுகிறீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
கடந்த 2018ஆம் ஆண்டு மட்டும் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாமாயிலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது மலேசியா என்பது குறிப்பிடத்தக்கது.
 
தின்பண்டங்கள் முதல் சாக்லெட் வரை அனைத்திலும் பாமாயில் பயன்படுத்தப்படுகிறது. 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட இத்துறைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றி உள்ள ஒரு தீர்மானத்தாலும் பாதிப்பு ஏற்படும் என்று மலேசியா கவலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொடர்புகளை முறித்துக் கொள்ள அந்நாடு விரும்பாது என்று கூறப்படுகிறது.
 
அமெரிக்கா, சீனா இடையே உலகின் இரண்டாவது பனிப்போர் வெடிக்கக்கூடும் - மகாதீர்
 
இதற்கிடையே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் உலகின் இரண்டாவது பனிப்போராக உருவெடுக்கக் கூடும் என்கிறார் மலேசிய பிரதமர்.
 
இந்த வர்த்தகப் போரில் இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே மலேசியா சிக்கிக் கொள்ள நேர்ந்தால் வர்த்தகத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் கவலையுடன் கூடிய ஆரூடம் தெரிவித்துள்ளார்.
 
"உலகின் மிகப்பெரிய இரு அதிகார மையங்களுக்கு இடையே வளர்ந்து வரும் பகைமையானது மிக மோசமாக ஏதோ நடக்கப் போவதற்கான அறிகுறியாக இருக்கக்கூடும். தடைகளற்ற மற்றும் சுதந்திரமான வர்த்தகத்துக்கு ஆதரவாக இருந்த நாடுகளே தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது வருத்தம் அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த விவகாரத்தில் மலேசியா இடையில் சிக்கிக் கொண்டுள்ளது.
 
"பொருளாதார ரீதியில் இரு சந்தைகளுடனும் நாங்கள் இணைந்துள்ளோம். மேலும், பூகோள ரீதியிலும் நாங்கள் இடையில் சிக்கியுள்ளோம்," என்று கோலாலம்பூரில் அக்டோபர் 22ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது மகாதீர் கவலையுடன் குறிப்பிட்டார்.
 
எதிர்வரும் நாட்களில் வர்த்தகத் தடைகளை விதிப்பதற்கான இலக்காக மலேசியா இருக்கக் கூடும் என்றும் சில தரப்பினர் கூறுவதாக அவர் தெரிவித்தார். எனினும், அடுத்து சிறப்பான விஷயங்களே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் மலேசியர்கள் செயல்பட வேண்டும் என்றும், அதே வேளையில் மிக மோசமானவற்றையும் எதிர்கொள்ள தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மகாதீர் அறிவுறுத்தினார்.
 
இரு வல்லரசுகளுக்கு இடையேயான மோதலால் ஏற்படக் கூடிய தாக்கத்தை, ஆசியானின் அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
 
"உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார சக்திகளுக்கு இடையேயான மோதல் என்பது உலக வர்த்தக அமைப்பில் முறிவுகளை ஏற்படுத்தும்," என்றார் பிரதமர் மகாதீர்.
 
அமெரிக்காவும் சீனாவும் தாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரிகளை பரஸ்பரம் உயர்த்தி வருவதாக வெளியான தகவலைச் சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது. அதேவேளையில், அவர் இந்தியாவை நேரடியாக குறிப்பிட்டு எந்தவித கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.
 
திடீர் வர்த்தகத் தடைகளுக்கான இலக்காக மலேசியா மாறும் என மகாதீர் ஆருடம் தெரிவித்துள்ள நிலையில், மலேசிய பாமாயிலைப் புறக்கணிக்க வேண்டும் எனும் அறைகூவல் இந்தியாவில் இருந்து பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.
 
யானைகள் மோதும்போது புற்கள் மிதிபடவே செய்யும்: பொருளாதார நிபுணர் லாய் யூ மெங்
இதற்கிடையே அமெரிக்கா, சீனா போன்ற யானை பலம் கொண்ட இரு நாடுகள் மோதிக் கொள்ளும்போது, மலேசியா போன்ற சிறிய நாடுகள் புற்களைப் போல் அவற்றின் காலில் சிக்கி மிதிபடத்தான் வேண்டியிருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
 
எனவே மலேசியா மோசமான தருணங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்கிறார் 'யூனிவர்சிட்டி மலேசியா, சபா'வைச் சேர்ந்த அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியரான லாய் யூ மெங்.
 
"அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தகப் போரினால் மலேசியாவின் பொருளாதாரச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத ஒன்று. இனி உள்நாட்டுத் திறனை வலுப்படுத்துவது, ஆசியான் நாடுகளுடன் இணைந்து செயல்படுவது, அமெரிக்காவையும் சீனாவையும் சார்ந்திருப்பதை குறைப்பது போன்ற நடவடிக்கைகள் அவசியம்," என்று லாய் யூ மெங் கூறியதாக மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், பாமாயில் சார்ந்துள்ள தொழில்களைக் கவனிக்கும் மலேசியாவின் முதன்மை தொ ழில்களுக்கான அமைச்சர் திரேசா கோக்கின் கருத்தைக் கேட்பதற்காக பிபிசி தமிழ் அவரது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டது. எனினும் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றிருந்ததால் அவரது பதில்களைப் பெற முடியவில்லை.
 
மலேசிய பாமாயில் இறக்குமதி தொடர்பாக இந்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை, காஷ்மீர் விவகாரத்துடன் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையோர்களுக்கான குத்துச்சண்டை போட்டி..3 பேர் தங்க பதக்கம் வென்று சாதனை