Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமைக்கும் முன் கோழிக் கறியை கழுவுவது நல்லதா?

சமைக்கும் முன் கோழிக் கறியை கழுவுவது நல்லதா?
, திங்கள், 26 டிசம்பர் 2022 (12:40 IST)
சமைப்பதற்கு முன் கோழி இறைச்சியை தண்ணீரில் கழுவுவது நல்லது என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால், கோழி இறைச்சியை தண்ணீரில் கழுவினால், ஃபுட் பாய்சன் ஏற்படும் ஆபத்து அதிகமாகிறது. 
 
கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் குழாய் தண்ணீரில் கழுவும்போது, அந்த நீர் தெறித்து நம்முடைய கைகள், ஆடை மற்றும் சமையலறை பாத்திரங்கள் ஆகியவற்றுக்கும் இறைச்சியில் உள்ள கேம்பிலோபாக்டர் (Campylobacter) எனும் பாக்டீரியா தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கிறது என்று பிரிட்டன் உணவு தர முகமை நீண்ட காலமாக  எச்சரித்து வருகிறது. இதனால், அந்த பாக்டீரியா நம் உடலுக்குள் செல்லும் அபாயம் ஏற்படுகிறது. ஆனாலும் பெரும்பாலானோர் கோழி இறைச்சியை தண்ணீரில் கழுவும் தவறை செய்துவருகின்றனர். 
 
இதுகுறித்து யாரும் சிந்திப்பதில்லை. பிரிட்டனில் உள்ள 44% பேர் கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் நீரில் கழுவுகின்றனர் என பிரிட்டன் உணவு தர முகமை தெரிவிக்கிறது. அழுக்கு அல்லது கிருமிகளை நீக்குவதற்காகவோ அல்லது எப்போதும் அவ்வாறே செய்வதாலும் கோழி இறைச்சியை நீரில் கழுவுவதாக பலரும் காரணங்களை தெரிவிக்கின்றனர். 
 
கேம்பிலோபாக்டர் பாக்டீரியா என்பது ஃபுட்-பாய்சன் ஏற்படுவதற்கான மிக முக்கியமான தொற்றாக உள்ளது. குறிப்பாக பயணம் செய்யும் போது ஃபுட்-பாய்சன் ஏற்படுவதற்கு இது காரணமாக அமைகிறது.  
webdunia
பொதுவாக சமைக்கப்படாத கோழி இறைச்சி, காய்கறிகள் அல்லது பதப்படுத்தப்படாத பால் ஆகியவற்றை உட்கொள்வதால் ஃபுட்-பாய்சன் ஏற்படுகிறது.
 
இத்தகைய உணவுகளை சாப்பிடுவதன் மூலமோ, குடிப்பதன் மூலமோ இந்த பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. இதனால், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும் என, மெட்லைன் பிளஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
கோழி இறைச்சியிலிருந்து பாக்டீரியாவை நீக்குவது எப்படி? 
"கோழி இறைச்சியில் இயற்கையாகவே குறிப்பிட்ட அளவு பாக்டீரியாக்கள் உள்ளன. அதனை சமையல் செயல்முறை மூலம் அகற்றுவதே சிறந்த வழி" என்று சாவோ பாலோ பல்கலைக்கழகத்தின் உணவு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல் பேராசிரியர் யூலின்டன் பின்டோ பிபிசி பிரேசிலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார். 
 
இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக சமைக்க வேண்டும் என, நிபுணர்கள் கூறுகின்றனர். சமைக்கப்படும்போது உணவின் வெப்பநிலை குறைந்தது 70 டிகிரி செல்சியசை எட்ட வேண்டும். இது பெரும்பாலான நுண்ணுயிரிகள் நீக்கப்படுவதை உறுதி செய்கிறது. உணவின் வெப்பநிலையை உறுதிசெய்ய குறிப்பிட்ட சமையல் வெப்பமானிகளைப் பயன்படுத்தலாம். 
 
கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவ விரும்பினால், அதை மிகவும் கவனமாக செய்ய வேண்டியது அவசியம். அதாவது, கோழி இறைச்சியை கழுவும்போது குழாய் நீர், அருகிலுள்ள பொருட்களின் மீது தெறிப்பதைத் தவிர்க்க, குழாயை அதிகமாகத் திறக்காமல் மெதுவாக திறந்துவிட வேண்டும். 
 
நோய்த்தொற்றின் விளைவுகள்
இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், பெரும்பாலானோர் சில நாட்கள் உடல்நலமின்றி இருப்பார்கள். ஆனால், அது நீண்ட கால உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். 
 
ஐபிஎஸ் (IBS) எனப்படும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி, புற நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஜிபிஎஸ் (GBS) எனப்படும் குயிலன் பாரே சிண்ட்ரோம் (Guillain-Barré syndrome) ஆகியவை இந்த பாக்டீரியா தொற்றால் ஏற்படலாம்.  
 
இது இறப்புக்கும் வழிவகுக்கலாம். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் அதிக பாதிப்பு ஏற்படுபவர்களாக உள்ளனர். 
 
நிறைய தண்ணீர் குடிப்பது, காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில் பெரிய அளவில் சாப்பிடுவதை விட, நாள் முழுவதும் சிறிய அளவிலான உணவை உண்பது, பொட்டாசியம் அதிகம் உள்ள உணவை உண்பது, உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது இந்த பாக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையாக உள்ளது. 
 
ஒவ்வொருவருக்கும் தொற்று பாதிப்பின் அளவு வேறுபடலாம். அதனால், மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின் இணைப்பு – ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பா? – அமைச்சர் தகவல்!