Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்? #BBCTamilExclusive

Advertiesment
தமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்? #BBCTamilExclusive
, திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (18:12 IST)
'இந்தி திணிப்பு' என்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சிக்குவது என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது முதல் முறையாக கூகுள் நிறுவனம் சிக்கியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவையாக விளங்கி வரும் இணைய தேடலின்போது, ஆங்கிலத்தில் பொருள் விளக்கத்திற்காக தேடல் மேற்கொள்ளும்போது, தங்களது அனுமதியில்லாமல், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் அதற்கான விளக்கம் தனியே கொடுக்கப்படுவதாக பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கூகுள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னென்ன? அது பரவலாக அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமா? உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிபிசி தமிழ், அதுகுறித்த விளக்கத்தை கூகுள் நிறுவனத்திடமிருந்து பிரத்யேகமாக பெற்றுள்ளது.

கூகுள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்ன?


கூகுள் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வரும் அதன் தேடுதல் சேவையின் மீதுதான் தற்போது 'இந்தி திணிப்பு' குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, கூகுள் நிறுவனத்தின் அலைபேசி இயங்குதளமான ஆண்ட்ராய்டில், கூகுளுக்கு சொந்தமான 'குரோம்' உலாவியில் (Browser) ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கான தேடலை மேற்கொள்ளும்போது, அதற்கான விளக்கம் ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும், பயன்பாட்டாளரின் ஒப்புதல் இல்லாமல் காட்டப்படுகிறது என்பதே அந்த குற்றச்சாட்டு.
webdunia
இதுகுறித்த தனது அனுபவத்தை ஃபேஸ்புக்கிலுள்ள தமிழ் மொழி ஆர்வலர்கள் குழு ஒன்றில் பதிவிட்ட முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளரான வசந்தன் திருநாவுக்கரசர், "ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் எனது அலைபேசியின் பயன்பாட்டு மொழியாக தமிழ் உள்ளது. பிரிட்டனில் மேற்கல்வி பயின்று வரும் நான் சமீபத்தில் சென்னை வந்திருந்தேன். அப்போது, எனது அலைபேசியில் ஆங்கில சொல் ஒன்றுக்கு கூகுளில் தேடல் மேற்கொண்டபோது கிடைத்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் தேடிய ஆங்கில சொல்லுக்கு ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இந்தியிலும் பதில் வந்தது. மீண்டும் எனது அலைபேசியில் மட்டுமின்றி குடும்பத்தினரின் அலைபேசியிலும் முயற்சித்தபோதும், அதே ஆங்கிலம் & இந்தி என்ற வகையிலேயே பதில் கிடைத்தது" என்று அவர் கூறுகிறார்.

தனது தினசரி பயன்பாட்டில் கூகுள் இருந்து வரும் நிலையில், இதுபோன்றதொரு திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று வசந்தன் கூறுகிறார். "எனது மொழிசார்ந்த பெரும்பாலான பயன்பாடுகளில் தமிழ் மொழிக்கே முன்னுரிமை அளித்து வரும் நிலையில், என்னை கேட்காமலே இதுபோன்ற ஒரு திணிப்பை கூகுள் மேற்கொண்டது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆங்கிலம் & இந்தி என்ற தெரிவை கொடுக்கும் கூகுள், கண்டிப்பாக ஆங்கிலம் & தமிழ் என்றொரு தெரிவையும் கொடுக்க வேண்டியது அவசியம்" என்று அவர் வலியுறுத்துகிறார்.

கூகுள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் சரியா?

webdunia
கூகுள் தேடுதல் சேவை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பிபிசி தமிழ் ஆராய்ந்தது. அதாவது, நீங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையோ அல்லது குரோம் உலாவியையோ அல்லது இரண்டையுமே தமிழ் மொழியில் பயன்படுத்தினாலும், நீங்கள் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்து ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கான விளக்கம் தொடர்பாக தேடல் மேற்கொண்டால் ஆங்கிலம் மட்டுமின்றி இந்தியிலும் பதில் வருவது அப்போது உறுதிசெய்யப்பட்டது.

ஆனால், அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கான அர்த்தத்தை பொதுவாக காட்டப்படும் ஆங்கிலம் & இந்தி எனும் தெரிவை, வெறும் ஆங்கிலமாக மாற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இதுவரை பயன்பாட்டாளர்களால் பெரியளவில் எழுப்பப்படாத, குரோம் உலாவிலுள்ள மற்றொரு இந்தி மொழி இணைப்பையும் பிபிசி தமிழ் உறுதிப்படுத்தியது. அதாவது, ஆங்கில மொழியில் குரோம் செயலியை பயன்படுத்துபவர் ஆங்கிலம் உள்பட எந்த மொழியில் தேடல் மேற்கொண்டாலும், அதற்கான பதில் ஆங்கிலம் மட்டுமின்றி, அதே திரையில் மற்றொரு உட்பக்கத்தில் இந்தி மொழியில் காட்டப்படுகின்றன.

அவ்விடத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை வரவழைப்பதற்கோ அல்லது இந்தியை மட்டும் நீக்குவதற்கோ எவ்வித வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

என்ன சொல்கிறது கூகுள்?

பிபிசி தமிழ் சார்பில் ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கூகுள் நிறுவனம், "ஆங்கிலத்தில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையின் பொருளை தேடும்போது, உடனுக்குடன் அதற்குரிய பதிலை கொடுப்பதற்காக 'ஒன் பாக்ஸ்' எனும் இந்த சேவையை தொடங்கியுள்ளோம். இந்தியாவை பொறுத்தவரை, இந்தி மொழியின் பயன்பாடு ஏனைய மொழிகளை காட்டிலும் அதிகளவில் இருப்பதாலும், உள்ளடக்கங்கள் மிகுந்து காணப்படுவதாலும் சோதனை ரீதியில் இதை முயற்சித்து வருகிறோம். விரைவில் தமிழ் உள்பட மற்ற மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுளோம்" என்று பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்துள்ளது.

அடுத்ததாக, ஆங்கிலத்துக்கு இணையாக மற்றொரு உட்பக்கத்தில் இந்தியில் அனைத்து தேடல் முடிவுகளையும் காட்டுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கூகுள், "ஆங்கிலத்தை தவிர்த்து மற்ற மொழிகளை பேசுபவர்களுக்கு ஏதுவான தேடல் முடிவுகளை கொடுப்பதற்கான எங்களது இந்த முயற்சி கடந்த 2016ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. தற்போதைக்கு இந்தி மொழி பெரும்பான்மையாக பேசப்படும் மாநிலங்களில் மட்டும் இந்த சேவையை வழங்கி வருகிறோம். இந்தி பேசப்படும் மாநிலங்களிலும், தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் பயன்பாட்டாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கு வேண்டிய மற்ற மொழிகளை தேர்வு செய்து கொள்ளும் வசதியை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

உதாரணமாக, குரல் மூலம் பேசி அதை எழுத்துகளாக மாற்றும் (Speech to text) வசதியை இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகளில் அறிமுகப்படுத்தி இருந்தோம். இவ்வாறாக எங்களது பல்வேறு சேவைகளையும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக மாற்றுவதற்கான வழிகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்" என்று அந்நிறுவனம் பிபிசி தமிழிடம் பதிலளித்துள்ளது.

"கூகுள் மட்டுமல்ல…"

webdunia
கூகுள் நிறுவனத்தின் இந்த செயல்பாடு தொடர்பாக மலேசியாவை சேர்ந்த கணினியியலாளர் முத்து நெடுமாறனிடம் பேசியபோது, "இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகையும், பல்வேறு மொழிகளும் பேசப்படும் நாட்டில், இந்தி என்ற ஒற்றை மொழிக்கான சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வசதிகளை நாடு முழுமைக்கும் பரிசோதனை செய்வது சரியான நடவடிக்கை அல்ல. இதுகுறித்து கூகுள் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறுகிறார்.

தொழில் நிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவில் அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் தமக்கு செயலி அடிப்படையிலான தனியார் மகிழுந்து சேவையை பயன்படுத்துபோது, இந்தி மொழியில்தான் தகவல்கள் வருவதாக அவர் மேலும் கூறுகிறார்.

"எனது திறன்பேசியின் பிரதான மொழியாக ஆங்கிலமும், தமிழும் உள்ளது. தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, நான் பயன்படுத்தும் தனியார் மகிழுந்து சேவை நிறுவனத்தின் செயலில் பெரும்பாலான வேளைகளில் இந்தி மொழியில்தான் அறிவிக்கைகள் வருகின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கான வசதி அந்த செயலில் கொடுக்கப்படவில்லை. இதுபோன்று தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் உள்ள மொழி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பி, அதை களைய வேண்டிய கடமை நமக்கு உள்ளது" என்று முத்து நெடுமாறன் கூறுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பால் விலை உயர்வை அடுத்து பேருந்து கட்டணம் உயருமா ? அமைச்சர் முக்கிய தகவல்