Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

கும்பல் கொலை செய்யப்பட்ட பெஹ்லு கான் மகன் பேட்டி: "உயிர் உள்ளவரை நீதிக்காக போராடுவோம்"

Advertiesment
Behlu Khan
, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (19:32 IST)
ஆகஸ்டு 14ஆம் தேதி, புதன்கிழமை மாலை ஐந்து மணியளவில், பெஹ்லு கானின் மகனது அலைபேசி ஒலித்தது.


 
இந்த ஒரு அழைப்புக்காகதான் அவர் கடந்த பல நாட்களாக தூங்க முடியாமல் காத்திருந்தார்.
 
அதாவது, 2017ஆம் ஆண்டு கும்பல் கொலை செய்யப்பட்ட தனது தந்தைக்கு நீதி கேட்டு தொடுக்கப்பட்ட வழக்கில் ராஜஸ்தான் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர் எதிர்நோக்கியிருந்தார்.
 
ஆனால், அலைபேசியை எடுத்த அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது கண்ணெதிரே கொடூரமாக தாக்கி தமது தந்தை கொல்லப்பட்டதற்குக் காரணமான ஆறு பேரை போதிய ஆதரமில்லாததால் நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டதாக வழக்கறிஞர் கூறியதை கேட்டு அவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.
 
தாங்கள் எதிர்பார்த்ததை போன்று தீர்ப்பு வராததால், சோர்வடைந்த பெஹ்லு கானின் குடும்பத்தினர் அன்று மாலை முதல் வீட்டில் சமைக்கவே இல்லை. எத்தனை நாள் சமைக்காமல் இருப்பார்கள்? நாங்கள் நேரில் சென்று பார்த்தபோது, மிகவும் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட இஷ்ராத், எப்போது வேண்டுமானாலும் கதறி அழுதுவிடுவதைப் போல காணப்பட்டார்.
 
"எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தோம். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது முதல், என்னால் வேறு எதையுமே யோசிக்க முடியவில்லை" என்று இஷ்ராத் கூறுகிறார்.

webdunia

 
என்ன நடந்தது?

2017ஆம் ஆண்டு ஹரியாணாவின் நூர்க்-ஐ சேர்ந்த பெஹ்லு கானை, ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் கும்பல் ஒன்று தாக்கியது. மாடுகளை ஏற்றிக்கொண்டு ஜெய்பூரில் இருந்து அவரது கிராமத்திற்கு பயணம் மேற்கொண்டபோதே, இந்த தாக்குதல் நிகழ்ந்தது.
 
இந்த தாக்குதல் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பின்னர், 55 வயதான பெஹ்லு கான் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
 
"பசு பாதுகாப்பாளர்கள்" என்று கூறப்படுவோரால் அவரது மகன்களும், பிறரும் தாக்கப்பட்டு காயமடைந்ததாக கூறப்படுகிறது.
 
பெஹ்லு கான் இறந்த பின்னர், காவல் துறை ஆறு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தது. மேலும், பெஹ்லு கானோடு இருந்தவர்கள் மீது பசு கடத்தல் வழக்கு பதியப்பட்டது.
 
அனைவரும் விடுதலை
பெஹ்லு கானை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட விப்பின் யாதவ், ரவீந்திர குமார், காலு ராம், தயானந்த், யோகேஷ் குமார், பீம்ராட்டி ஆகியோருக்கு எதிராக கடந்து இரண்டாண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் (புதன்கிழமை) வழங்கப்பட்டது.

webdunia

 
மேற்கூறியவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்ட காணொளி, நேரடி சாட்சியங்கள் போன்றவற்றை விசாரித்த நீதிமன்றம், அவை போதுமானதாக இல்லை என்று கூறி ஆறு பேரையும் விடுதலை செய்துவிட்டது.
 
அதிகரிக்கும் கும்பல் கொலைகள்
"2015ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் 12 மாநிலங்களில் 44 பேர் கும்பல் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் 36 பேர் முஸ்லிம்கள்" என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என்றால் அப்போது என்னுடைய தந்தையை கொலை செய்தது யார் என்பதை காவல்துறையினரும், நீதிமன்றமும் கண்டறிந்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும். எங்களது தந்தையையும், என்னையும், எனது சகோதரரையும் அவர்கள் தாக்குவது ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்ட காணொளியில் தெளிவாக இருந்தும், அவர்களை விடுதலை செய்துள்ளது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று இஷ்ராத் வலியுறுத்துகிறார்.
 
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வரை, தங்களது வீட்டிலிருந்த 7-8 மாடுகள் மற்றும் எருமைகளின் மூலமாக கிடைக்கும் பாலை விற்பனை செய்வதன் மூலம் பெஹ்லு கான் குடும்பத்தினருக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது.

webdunia

 
ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக, தங்களது பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளதாகவும், தற்போது தலா ஒரு மாடு மற்றும் எருது மட்டுமே வீட்டில் இருப்பதாகவும் கூறும் இஷ்ராத், இந்த வழக்கு தொடர்பாக போராட்டங்களில் பங்கேற்பதிலும், காவல் நிலையம், நீதிமன்றம் செல்வதிலுமே தனது நேரம் முழுவதும் விரயமாகியதாக கூறுகிறார்.
 
பெஹ்லு கான் குடும்பத்தினருக்கு நிதியுதவி என்ற வகையில் சுமார் 10-12 லட்சம் ரூபாய் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்தாலும், அவற்றை பெரும்பாலான தொகையை வழக்கு விசாரணைக்காக செலவிட்டதாக இஷ்ராத் கூறுகிறார்.
 
"எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இரண்டரை ஆண்டுகளாக போராடி வந்தோம். உறவினர்கள் மற்றும் கிராமத்தினரின் உதவியால்தான் நாங்கள் இரண்டரை ஆண்டுகளாக வாழ்க்கையை நடத்தி வந்தோம்."
 
பெஹ்லு கான் கும்பல் கொலை செய்யப்படும் காட்சி என்று கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பிறகே இந்த விவகாரம் குறித்து பலருக்கும் தெரியவந்தது. இந்த வழக்கிற்கு ஆதாரமாக அளிக்கப்பட்டிருந்த அந்த காணொளியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், நீதிமன்றம் காணொளியில் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யாமலேயே அதை நிராகரித்ததாக வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
"கடந்த இரண்டரை ஆண்டுகளில் எங்களது வாழ்க்கை மோசமான நிலையை அடைந்துவிட்டது. இதற்கு சாவதே மேல் என்று நினைக்க தோன்றுகிறது. நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நீதி எங்களுக்கு கிடைக்கவில்லை" என்று கூறுகிறார் பெஹ்லு கானின் மனைவியான ஜமுனா பேகம்
 
இந்நிலையில், ராஜஸ்தான் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர போவதாக உறுதியுடன் கூறும் இஷ்ராத், "எங்களுக்கு உயிர் இருக்கும்வரை நாங்கள் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம்" என்று கூறுகிறார்.
 
ஆனால், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு முன்னர், கீழமை நீதிமன்றத்தில் தோல்வியுற்றதற்கான காரணத்தை ஆராயும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார்.
 
இந்த வழக்கில் போதிய தெளிவில்லாமல் இருப்பதற்கு காவல்துறையினரே காரணமென்று வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
 
"பெஹ்லு கான் மருத்துவமனையில் உயிரிழந்த பிறகு அவரை உடற்கூறாய்வு செய்த இரண்டு மருத்துவர்களும் இருவேறு விதமான காரணத்தை தெரிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி, காணொளியின் உண்மைத்தன்மை குறித்தும் சரிவர விசாரிக்கப்படவில்லை. மேலும், முதலில் இந்த வழக்கை கையாண்ட ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் அளித்த விசாரணை அறிக்கைக்கும், அதன் பிறகு விசாரித்த குற்றப் புலனாய்வுத் துறையினரின் அறிக்கைக்கும் இடையே மிகுந்த வேறுபாடு உள்ளது" என்று கூறுகிறார் பெஹ்லு கான் தரப்பு வழக்கறிஞரான காசிம் கான்.
 
இதுதொடர்பாக, இந்த வழக்கை கையாண்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
இந்நிலையில், கும்பல் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையில் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதே பெரும்பாலான வேளைகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்வதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் மற்றொரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேடிஎம் வழங்கும் இலவச டிவிக்கள் – மேலும் பல சிறப்பம்சங்கள்