Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தோனீசிய காட்டுத்தீயால் மலேசியாவில் புகைமூட்டம்: 2,000 பள்ளிகள் மூடல்

Advertiesment
இந்தோனீசிய காட்டுத்தீயால் மலேசியாவில் புகைமூட்டம்: 2,000 பள்ளிகள் மூடல்
, வியாழன், 19 செப்டம்பர் 2019 (19:14 IST)
இந்தோனீசிய காட்டுத் தீயால் உருவாகும் புகைமூட்டம் அந்நாட்டை மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மேலும் சில நாடுகளையும் மிரள வைத்திருக்கிறது.

குறிப்பாக, மலேசியாவில் புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய காற்று மாசுபாட்டின் அளவானது மெல்ல அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் சாதாரண பாதிப்பு என்ற அளவில் தொடங்கி, தற்போது உடல்நலத்தைப் பாதிக்கும், உயிரையே காவு வாங்கும் என்கிற அளவுக்கு காற்று மாசுபாடு அதிகரித்து வருவது மலேசிய மக்களின் கவலையை அதிகரித்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் மூன்று நிலைகளில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், புகைமூட்டத்தால் விடுமுறை நீடிக்கும் பட்சத்தில் அத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விவசாய நடவடிக்கைகளுக்காக காட்டுப் பகுதிகளை தீ வைத்து அழிக்கின்றனர். இந்த சட்டவிரோதச் செயல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
தென்கிழக்கு ஆசியப் பகுதியைப் பொறுத்தவரை இந்தோனீசியாவில் தான் அதிகளவு காட்டுத் தீ உருவாகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

webdunia

அங்கு ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை காலத்தையொட்டி ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் காட்டுத்தீ அதிகம் மூள்கிறது. குறிப்பாக அந்நாட்டின் சுமத்ரா, கலிமந்தான் பகுதியில் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகம் பதிவாகின்றன.
இச்சமயத்தில் வறட்சி நிலவும்போது நிலைமை மேலும் மோசமடைகிறது. இந்தோனீசியாவில் உருவாகும் இந்தக் காட்டுத் தீயின் காரணமாக மலேசியா, சிங்கப்பூர், புரூனே என அண்டை நாடுகள் பலவும் பாதிக்கப்படுகின்றன.

'உதவ முற்படுவதே எங்கள் நோக்கம்'

இந்தோனீசியாவில் மூண்டுள்ள காட்டுத் தீயைக் கையாள்வது தொடர்பில் அந்நாட்டின் மீது குற்றம் சாட்டவில்லை என்றும், மாறாக அதனைக் கட்டுப்படுத்த உதவ முற்படுவதே தங்கள் நோக்கம் என்றும் இந்தோனீசியாவிற்கான மலேசிய தூதர் சைனால் அபிடின் பாகார் தெளிவுபடுத்தி உள்ளார்.

கடந்த ஜனவரி முதல், இந்தோனீசியாவின் ரியாவ், ஜாம்பி மற்றும் கலிமந்தான் பகுதிகளில் மட்டும் 42 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட வனம், வயல்கள் எரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டி உள்ளது.

சில மலேசிய நிறுவனங்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளே காட்டுத் தீ மூள்வதற்கு காரணம் எனக் கூறி, அந்நிறுவனங்களுக்கு தங்கள் நாட்டில் உள்ள நிலப்பகுதிகளை கையகப்படுத்துவதாக இந்தோனீசிய அரசு அறிவித்துள்ளது.

இரு உயிர்களைப் பலி வாங்கிய புகைமூட்டம்

இதற்கிடையே, புகைமூட்டம் காரணமாக இந்தோனீசியாவில் உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு பிறந்து நான்கு மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையும், 59 வயதைக் கடந்த முதியவர் ஒருவரும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர். சுமத்ராவிலும், பெக்கன்பாரு பகுதியிலும் இவ்விரு சம்பவங்கள் நிகழ்ந்தன.

சுமத்ராவிலும் கலிமந்தான் பகுதியிலும் காட்டுத்தீ கடுமையாகி உள்ளது. உடனடியாக இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்புகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளன.

தற்காலிக நிவாரணம் அளித்துள்ள செயற்கை மழை

மறுபக்கம் மலேசியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தற்காலிகத் தீர்வாக செயற்கை மழை பொழிவுக்கும் அந்நாட்டு ஏற்பாடு செய்துள்ளது. மழை பெய்யும்போது புகைமூட்டத்தின் தாக்கம் குறையும் என்பதே இதற்குக் காரணம்.
webdunia

அதன்படி நாடு முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளில் இவ்வாரம் செயற்கை மழை பொழிவு நடவடிக்கையை மேற்கொண்டதில் ஓரளவு பலன் கிட்டியுள்ளது.

அதேசமயம், சிலாங்கூர், சரவாக், கிள்ளான் பள்ளத்தாக்கு உட்பட மேலும் பல பகுதிகளில் செயற்கை மழைக்குப் பிறகும் தொடர்ந்து புகைமூட்டம் நிலவியதை அடுத்தே பள்ளிகளுக்கு இரு தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

'அலுவலகம் வரத் தேவையில்லை'

நாடு முழுவதும் பல்வேறு அரசு சாரா அமைப்புகளும், அரசாங்கத்தின் பல்வேறு துறைகளும் பொதுமக்களுக்கு முகக்கவசத் துணிகளை இலவசமாக விநியோகித்து வருகின்றன.

புகைமூட்டம் கடுமையாகும் பட்சத்தில் ஊழியர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பணிகளைக் கவனிக்கலாம் என மலேசிய இளையர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

காற்று மாசுபாடு அளவானது 200 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தால், ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டியதில்லை என்று அத்துறையின் அமைச்சர் சைட் சாதிக் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் மலேசியா

ஆயிரக்கணக்கானோரின் உடல்நலம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, காட்டுத்தீ மற்றும் புகைமூட்டம் காரணமாக மலேசியா பொருளாதார இழப்புகளையும் எதிர்கொள்கிறது.
webdunia

புகைமூட்டத்தால் விமானச் சேவை அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. விமானப் புறப்பாடு தாமதமடைவது அல்லது ரத்து செய்யப்படுவதால் விமான நிறுவனங்கள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன.

நேற்று முன்தினம் ஈப்போவில் இருந்து புறப்பட வேண்டிய 6 விமானங்களும், பினாங்கில் இருந்து புறப்பட வேண்டிய 19 விமானங்களும் ரத்தாகின.

இதேபோல், இதர வணிக, தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைகின்றன. இந்த வகையில் கடந்த 2013ஆம் ஆண்டில் மட்டும் 1.57 பில்லியன் ரிங்கிட் அளவிலான இழப்பை மலேசியா எதிர்கொண்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவிக்கின்றது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுரோட்டில் மயங்கி விழுந்த முதியவரை காப்பாற்றிய கலெக்டர்!!