Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை நண்பியை கரம் பிடிக்க வந்த இந்திய பெண் - மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

marriage
, சனி, 25 ஜூன் 2022 (23:44 IST)
ஒரு பாலின உறவு: இலங்கை நண்பியை கரம் பிடிக்க வந்த இந்திய பெண் - மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
 
இலங்கையில் உள்ள நண்பி ஒருவரை தேடி வந்த, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், இலங்கை நண்பியுடன் சேர்ந்து வாழப் போவதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறியதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
 
இந்திய தமிழ் பெண் (24 வயது) ஒருவருக்கும், இலங்கை அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பெண் (19) ஒருவருக்கும் இடையில் தொலைபேசி வழியாக நட்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பெண், தனது நண்பியைச் சந்திப்பதற்காக கடந்த 20ஆம் தேதி இலங்கை வந்துள்ளார். பின்னர் அவர் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்றிலுள்ள இலங்கை நண்பியின் வீட்டுக்குச் சென்று, அவரை இந்தியா அழைத்துச் செல்லப் போவதாகவும் அவருடனேயே வாழப் போவதாகவும் கூறியுள்ளார். இதற்கு இலங்கை நண்பியும் இணங்கியுள்ளார்.
 
தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த மேற்படி பெண், இலங்கை நண்பியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டதாகவும், அவ்வாறு செய்யாது விட்டால், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும், இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.
 
இதையடுத்தே அக்கரைபற்று காவல் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்ததாக இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
 
சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை பெண் - ஒன்றரை வயது பெண் குழந்தையொன்றின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கணவருடன் இவர் வாழ்ந்து வந்த நிலையிலேயே, இந்த முடிவை எடுத்துள்ளார் என அவரின் குடும்பத்தார் கூறுகின்றனர்.
 
"என் மார்பகங்கள் குறித்து பெருமை அடைகிறேன்" முன்னாள் இலங்கை எம்.பி. ஹிருணிகா
ஒரு பாலின திருமணத்துக்கு ஆஸ்திரேலிய மக்கள் அமோக ஆதரவு
சாஃபோ: லெஸ்பியன் உறவுக்காக கவிதையில் உருகிய பழங்கால கிரேக்க 
 
இலங்கை பெண்ணின் தோழியொருவர் இந்தியாவில் வசித்து வருகின்றார். அவர் மூலமாகவே, குன்னத்தூரைச் சேர்ந்த பெண்ணின் தொடர்பு - இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் சில காலம் தொலைபேசி, வாட்ஸ்ஆப் மூலமாகப் பேசி, நட்பு வளர்த்து வந்துள்ளனர்.
 
இந்த நிலையிலேயே இந்திய பெண் - தன்னுடைய இலங்கை தோழியின் வீடு தேடி வந்து, தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது விருப்பதற்கு சம்மதிக்காது விட்டால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, இந்தியப் பெண் தங்களை மிரட்டியதாக, இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
தனது கணவவரின் வீட்டிலிருந்து கிளம்பி வந்து, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றிலுள்ள தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டில் இலங்கைப் பெண் தங்கியிருக்கிறார். அங்கு அவரை இந்தியப் பெண் சந்தித்தார். இலங்கைப் பெண்ணின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி, அவரின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக உள்ளார்.
 
மனநல அறிக்கை பெற நீதிமன்றம் உத்தரவு
 
இலங்கை பாலினம்
 
காவல் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, குறித்த பெண்கள் இருவரையும் கடந்த புதன்கிழமை (22ஆம் தேதி) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
 
இதன்போது சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரின் விளக்கங்களையும் கேட்ட நீதவான் ,அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் தெரிவித்தமையினால், இருவரையும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநல வைத்தியரிடம் காண்பித்து, வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த அறிக்கையினை ஜூன் 27ஆம் தேதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
 
இதையடுத்து குறித்த இருவரும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.
 
இதன் பின்னர் மேற்படி பெண்கள் இருவரும் நீதிமன்றக் கட்டளையின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
"ஒரு பாலின விருப்பம் உளவியல் நோயல்ல"
 
தன் பாலின ஈர்ப்புக்கும் உளவியலுக்கும் இடையிலான தொடர்பு குறித்து அறிந்து கொள்ளும் பொருட்டு, மனநல வைத்தியர் யூ.எல். சறாப்டீனிடம் பிபிசி தமிழ் பேசியபோது; "தன்பால் ஈர்ப்பு என்பது உளவியல் பிரச்சினை அல்ல" என்றார்.
 
இலங்கை பாலினம்
படக்குறிப்பு,
யூ.எல். சறாப்டீன், மன நல வைத்தியர்
 
"ஒருபால் திருமணம் செய்து கொள்வோரை உலக அரங்கில் - உளவியல் பிரச்சினையுள்ளவர்களாகக் கருதுவதில்லை. எதிர் பாலினத்தவர்கிடையே ஏற்படும் ஈர்ப்ப்பு போலவே, தன் பாலினத்தவர்களிடையே ஏற்படும் ஈர்ப்பும் உள்ளது ஆனால், இதனை சமூகங்களும், சமயங்களும் ஏற்பதில்லை".
 
"இதனை உளவியல், ஒரு நோயாகவோ பிரச்சினையாகவோ பார்க்கவில்லை. இது தனி நபர்களின் உரிமை சார்ந்த விடயமாகவே பார்க்கப்படுகிறது.
 
ஆனால், ஒருபாலின திருமணத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு, சமூக ரீதியிலான நெருக்குவாரங்களினாலும் வெளிக் காரணிகளாலும் உளவியல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
 
ஒரு பாலினத்தவர்கள் சேர்ந்து வாழ்வது சட்ட விரோதமான செயற்பாடு அல்ல. அவர்கள் திருமணம் செய்வதற்கான சட்ட அங்கிகாரம் இலங்கையில் இல்லை.
 
திருமணத்துக்கு வெளியே உறவு - சட்டப் பிரிவு 497: அன்று முதல் இன்று வரை
பாலியல் நாட்டம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமாக அமையும். யாருக்கு யார் மீது நாட்டம் உள்ளது என்பது, அவரவரின் பாலியல் நாட்டத்தைப் பொறுத்ததாகும்" என்கிறார் டாக்டர் சறாப்டீன்.
 
"தன் பாலின நாட்டத்தை முன்னொரு காலத்தில் 'பாலியல் ரீதியான வழி தவறல்' என கூறினர். இவ்வாறான நாட்டம் கொண்டவர்களை பாலியல் வக்கிரம் (Pervers) கொண்டோர்' என்றும் குறிப்பிடப்பட்டனர்.
 
தன் பாலின நாட்டம் என்பது சமூக, மத ரீதியாக பிழையான விடயமாக கருதப்படுகிறது ஆனாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் அதில்தான் நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அது அவர்களின் விரும்பமாகும். உலக வளர்ச்சியில் இவ்விடயமானது சம்பந்தப்பட்டவர்களின் மானிட உரிமையாகக் கருதப்படுகிறது".
 
"உயிரினங்கள் எல்லாவற்றிலும் மாறுபட்ட பாலியல் நாட்டங்கள் உள்ளன. குரங்குகளிடையே சுய இன்பம் காணும் பழக்கம் உள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.
 
"தன்னைத் தானே காதலித்து திருமணம் செய்து கொள்கின்றவர்களும் உள்ளனர். இவ்வாறானவர்கள் 'நாசீசிஸ்ட்' (Narcissist) என்று அழைக்கப்படுகின்றனர். 'நாசீசிஸ்ட்' என்பது கிரேகக்கத்தில் அறியப்படும் காதல் கடவுளின் பெயர். சுய காதலை ஆங்கிலத்தில் 'நாசீசிசம்' என்பர்.
 
ஒருவரின் அனைத்து விதமான நாட்டங்களுக்கும் விருப்பங்களுக்கும் சுய சிந்தனைகளுக்கும் - எல்லா சந்தர்ப்பங்களிலும் சமூகத்தில் இடமளிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவரவர் வாழும் சமூகங்களிலுள்ள விழுமியங்கள், விதிமுறைகள், மதிப்புக்கள் மற்றும் அமைப்புகள் அவற்றுக்கு அனுமதிப்பதில்லை" என்றும் மனநல மருத்துவர் சறாப்டீன் கூறினார்.
 
தண்டனைக்குரிய குற்றம்
 
இது இவ்வாறிருக்க ஒரு பாலின திருணத்துக்கு இலங்கையில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எவையும் இல்லை என்கிறார் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ்.
 
இலங்கை பாலினம்
படக்குறிப்பு,
எம்.எம். பஹீஜ், சட்டத்தரணி
 
"அதேவேளை தண்டனைச் சட்டக் கோவை ஏற்பாடுகளின் கீழ், ஒரு ஆணும் ஆணும் பாலியல் உறவு கொள்வதும், பெண்ணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வதும் அல்லது மிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் புணர்ச்சி கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும்" எனவும் அவர் கூறினார்.
 
இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 365 மற்றும் 365A ஆகியவை, 'இயற்கை விதிக்கு மாறான பாலியல் புணர்வு' மற்றும் 'பாரதூரமான இழிசெயல்' ஆகியவற்றினை குற்றமாக வரையறை செய்கிறது என்றும், இந்தப் பிரிவுகளின் கீழ் தன்பால் உறவின் அடிப்படையிலான பாலியல் உறவு குற்றமாகும் என்றும் கூறிய சட்டத்தரணி பஹீஜ்; "இந்தக் குற்றத்தைப் புரிவோருக்கு 10 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்க முடியும்" எனவும் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீனாட்சி அம்மன் கோயில் வழிபாடு செய்த இளையராஜா!