Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'கொரோனா வைரஸ் பரவல் முடிந்தபின் சீனாவுக்கான முதலீடுகளை இந்தியா ஈர்க்கும்; புவி அரசியல் மாறும்'

Advertiesment
'கொரோனா வைரஸ் பரவல் முடிந்தபின் சீனாவுக்கான முதலீடுகளை இந்தியா ஈர்க்கும்; புவி அரசியல் மாறும்'
, வியாழன், 30 ஏப்ரல் 2020 (16:13 IST)
உலகம் முழுவதும் கோவிட்- 19 பெருந்தொற்று பரவலின் காரணமாக சர்வதேச பொருளாதாரம் பெருமளவில் சரிந்துள்ள நிலையில், தங்களின் உற்பத்திச் சாலைகளை சீனாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அந்த நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகின்றன.

சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் சர்வதேச நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் பெருமளவில் முதலீட்டைப் பெற நாம் தயாராக இருக்க வேண்டும் என்று ஏப்ரல் 27-ஆம் தேதி அன்று மாநில முதல் அமைச்சர்களுடன் நடந்த காணொலிக் காட்சி வாயிலான கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியிருந்தார் என்று இந்திய ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்து துறைக்கும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கும் அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி கோவிட்- 19 நோய்த்தொற்று காரணமாக சீனாவுக்கு உண்டாகியுள்ள இந்த சிக்கல் தொழில் உற்பத்தி மையமாக இந்தியா உருவாவதற்கான வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது பின்பு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த நிறுவனங்கள் சீனாவில் இருக்கும் தங்கள் உற்பத்திக் கூடங்களை வேறு நாடுகளுக்கு மாற்ற விரும்புவதாகவும், அப்படி மாற்ற விரும்பினால் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கும் என்றும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி ஏப்ரல் 21ஆம் தேதி வெளியான செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.

செல்போன் தயாரிப்பு, மின்னணு உபகரணங்கள், மருத்துவ சாதனங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி மையங்களை நிறுவ மும்முரமாக திட்டமிட்டு வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டது.

''புவி அரசியலிலும் மாற்றம்''

தங்கள் தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவ சுமார் 1000 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், "சர்வதேச நிறுவனங்களால் அதிகம் விரும்பப்பட்ட தொழில் மையம்" எனும் அந்தஸ்தை சீனா இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று ஏப்ரல் 22ஆம் தேதி என்று பிசினஸ் டுடே எனும் வர்த்தக நாளிதழின் இணையதளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நிறுவனங்கள் இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளை திறக்க விரும்புகின்றனரா அல்லது சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு மாற்ற விரும்புகின்றனரா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.

அமெரிக்க - இந்திய ஸ்ரேடஜிக் அண்ட் பார்ட்னர்ஷிப் ஃபோரம் எனும் லாப நோக்கமற்ற அமைப்பு ஒன்றின் தலைவர் முகேஷ் ஆகி என்பவர், வெளிநாட்டு உற்பத்தியை ஈர்த்து சீனாவுக்கு மாற்றான சர்வதேச உற்பத்தி மையமாக மாறுவதற்கு இந்தியாவுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு உள்ளதாக ஏப்ரல் 23ஆம் தேதியன்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சீனா மற்றும் உலக நாடுகள் இடையே இருக்கும் மோதல் வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும், இந்தியா சரியாக காய்களை நகர்த்தினால் பெருமளவிலான நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்புண்டு என்றும் முகேஷ் ஆகி கூறியுள்ளார்.

கோவிட்- 19 தோற்று பரவல் முடிவடைந்த பின்னர் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை கட்டமைப்பை கொண்ட நாடு எனும் அந்தஸ்தை சீனா இழக்க நேரிடலாம் என்று இந்தியா டுடே இதழின் இணையதளத்தில் சாய் கிரண் கண்ணன் எனும் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருக்கும் நில அமைப்பு மற்றும் மிகப்பெரிய நுகர்வோர் சந்தை சீனாவுக்கு உகந்த மாற்றாக இருக்க உதவி செய்யும் என்று அவர் அந்தக் கட்டுரையில் கூறியுள்ளார்.
webdunia

தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் ஆசிய பிராந்தியம் மற்றும் பிற பகுதிகளில் புவி அரசியலிலும் இது மாற்றத்தை உண்டாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு இந்திய அரசு பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக ரிபப்ளிக் செய்தித் தொலைக்காட்சி தனது செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

பெரு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்ப்பரேட் வரியை 25. 27 சதவிகிதமாக குறைப்பது மட்டுமல்லாமல், புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரியும் 17 சதவீதமாக குறைக்கப்பட உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. அப்படி விதிக்கப்பட்டால் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே இதுதான் மிகவும் குறைவான வரி விகிதமாக இருக்கும்.

இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன?

தங்கள் தொழில் கூடங்களை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மாற்றினாலும் அதே அளவுக்கு குறைந்த செலவில் பொருட்களை உற்பத்தி செய்வது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இடையே ஏற்கனவே 10 முதல் 12 சதவீதம் வரை உற்பத்தி செலவில் வேறுபாடு உள்ளது.

வெவ்வேறாக உள்ள தொழிலாளர் சட்டங்களை ஒன்றாக்குதல், கட்டாயமாக உள்ள விதிமுறைகள் சிலவற்றை தளர்த்துதல் ஆகியவை இந்தியாவை முதலீட்டாளர்களின் விரும்பத்தக்க நாடாக மாற்றும் என்று இந்தியாவின் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளதாக தைனிக் பாஸ்கர் எனும் இந்தி செய்தித்தாள் ஏப்ரல் 25 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிஷி கபூர் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி !