Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் இந்தியா

Advertiesment
BBC Tamil
, சனி, 10 ஆகஸ்ட் 2019 (19:02 IST)
தண்ணீர் பஞ்சம் தீவிரமாக உள்ள சௌதி அரேபியா, பஹ்ரைன் போன்ற பாலைவன நாடுகள் இடம்பெற்றுள்ள உலகின் 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்று உலகளாவிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. பாகிஸ்தானில் இரண்டு மாகாணங்களில் இந்த நிலைமை இருக்கிறது.
இந்தியாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பிபிசி உலக சேவையின் சுற்றுச்சூழல் பிரிவு செய்தியாளர் நவீன் சிங் காட்கா பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவின் வடக்குப் பகுதியில் ஹரியானா மாநிலத்தில் தரோடி கிராமத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதில் காரணத்துடன் கூடிய கோபம் காணப்பட்டது.

ஹரியானா மாநிலத்தில் அந்தப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மாதங்களாக சுத்தமான குடிநீர் வராததால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் கேட்டு முழு ஆவேசமாக ராஜ்பதி பன்வாலா என்ற விதவை முழக்கம் எழுப்பியபோது, நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் கூடாரத்தின் கீழ் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

webdunia

''அரசாங்கம் வாரம் இருமுறை தரும் தண்ணீரை எங்களுடைய கால்நடைகள் கூட குடிக்க முடியாது,'' என்று போராட்டக் களத்தில் அவர் தெரிவித்தார்.

''நான் விலை கொடுத்து குடிநீர் வாங்குகிறேன். அதற்கு மாதம் 500 ரூபாய் செலவாகிறது,'' என்று நம்மிடம் கூறிய அவர், விலைகொடுத்து தண்ணீர் வாங்கிய கோப்பையைக் காட்டினார்.

போராட்டக் களத்தில் இருந்து, நம்மிடம் பேச வந்த அவருடைய தோழி நீலம் தின்ட்ஷா, தன்னால் விலை கொடுத்து தண்ணீர் கோப்பையை வாங்க முடியவில்லை என்று கூறினார்.
``தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாத கிராமவாசிகள் பலர் இருக்கிறார்கள்'' என்று முகத்தை மூடிய துணியை அகற்றியபடி அவர் குறிப்பிட்டார்.

பொது குழாயில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு, தலையில் வைத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்ட அவர், ''எங்களுக்கு அளிக்கப்படும் இந்த நிலத்தடி நீர், நோய்களை ஏற்படுத்துகிறது'' என்று கூறினார்.

''என் வீட்டு வேலைகளை முடிக்கவும், விவசாய நிலத்தில் வேலை பார்க்கவும் காலையில் நான் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்றாலும், இந்தக் காரணத்தால்தான் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன்.''

உலக ஆதாரவள இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள உலகளாவிய தகவல் தொகுப்பில், மிக மோசமாக தண்ணீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்துள்ள இந்தியாவின் 9 மாநிலங்களின் பட்டியலில் ஹரியானாவும் ஒன்று.
webdunia

அருகில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது குறித்து விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

நிலத்தடி நீரை எடுப்பதற்கு அமைத்த ஆழ்துளைக் கிணற்றில் போர்வெல் இயந்திரம் அமைக்கப்படுவதை இளம் விவசாயி நரேந்தர் சிங் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

''20 ஆண்டுகளுக்கு முன்பு முதலாவது ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது நாங்கள் 150 அடி தோண்டினோம்'' என்று விவசாயி நரேந்தர் சிங் தெரிவித்தார்.

'' சுமார் 10 ஆண்டுகள் கழித்து நாங்கள் 300 அடி ஆழம் வரை தோண்ட வேண்டியிருந்தது. இப்போது நிலத்தடி நீரைப் பெறுவதற்கு இந்த இயந்திரம் 500 அடி வரை தோண்டியுள்ளது.''

'' விவசாயத்தை விடுங்கள், விரைவில் குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காது. எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது'' என்கிறார் அவர்.

பூமிப்பரப்பில் இருந்த தண்ணீரும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.
webdunia

பஞ்சாப் மற்றும் சண்டிகரில் நகரமயமாக்கல் காரணமாக ஆக்கிரமிக்கப்பட்ட குளங்கள், சதுப்பு நிலங்கள் இருந்த இடங்களை அங்கிருந்த மூத்த குடிமக்கள் சிலர் காட்டினர்.

``பஞ்சாபில் சுமார் 140 ஒன்றியங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கருப்பு மண்டலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது காலியாகிவிட்ட நிலத்தடி நீரை நம்மால் மீண்டும் உருவாக்க முடியாது. ஏனெனில் திறந்தவெளிப் பகுதிகளை நகரமயமாக்கல் காரணமாக ஆக்கிரமித்துவிட்டார்கள்'' என்று சண்டிகரைச் சேர்ந்த உணவு மற்றும் நீர்வள நிபுணர் தேவிந்தர் சர்மா கூறினார்.

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்சினை அதிகம் நிலவும் பகுதிகளில் சண்டிகரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களுக்கு 4 முதல் 5 புள்ளிகளுக்கு இடைப்பட்டவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

தண்ணீர் பிரச்சினை அளவின் அடிப்படையில் நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாகாணங்களை 0 முதல் 5 வரை என மதிப்பெண் கொடுத்து உலக ஆதாரவள இன்ஸ்டிடியூட் அறிக்கை தயாரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்த நிலையில், 13வது இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

கிடைக்கிற நீர் ஆதாரத்தை, பயன்படுத்தும் அளவால் வகுத்து இந்தக் கணக்கீடு உருவாக்கப்பட்டதாக, இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

உலகளவில் கிடைக்கும் தண்ணீரில் 70 சதவீதம் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுவதாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறியுள்ளது.

இந்தியாவில் தண்ணீர் மேலாண்மைக்கான உச்ச அதிகாரம் பெற்ற அமைப்பான மத்திய நீர்வள ஆணையம், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓர் அறிக்கை தயாரித்தது. நாடு முழுக்க 20 மில்லியனுக்கும் அதிகமான கிணறுகளில் இருந்து தண்ணீர் பம்ப் செய்து வெளியே கொண்டு வரப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``இந்தியா நீர்வளம் குறைந்த நாடு அல்ல. ஆனால் தீவிர அலட்சியம் மற்றும் நீர்வளங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை சரியாக கண்காணிக்காத காரணத்தால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது'' என்று அறிக்கையின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், இந்தத் துறையில் இனியும் அலட்சியம் காட்டினால் எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.
webdunia

உலகில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்வளம் வேகமாகக் குறைந்து வருகிறது என்று கடந்த காலங்களில் நாசா உள்பட பல அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

உலகில் 10-ல் 4 பேர் ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உலகளாவிய அறிக்கையில் இந்தியாவுக்கு கவலை தரக் கூடிய இன்னொரு விஷயம், எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானிலும் இதே நிலை இருக்கும் என்பதுதான்.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய மாநிலங்கள் அனைத்திலும் தீவிர தண்ணீர் பிரச்சினை உள்ளதாக உலகளாவிய அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும், பாகிஸ்தானில் - பஞ்சாப் மற்றும் சிந்து - என இரண்டு மாகாணங்களிலும் இதே நிலைதான் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
webdunia

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிந்து நதி நீர் பகிர்வு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் உள்ள நிலையில் சமீபத்திய முரண்பாடுகளின்போது தண்ணீர் பிரச்சினை முக்கியமானதாக முன்வைக்கப்பட்டது.

தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ள பல பகுதிகள் முரண்பாடுள்ள மண்டலங்களில் அமைந்துள்ளன. வன்முறை ரீதியிலான மோதல் ஏற்படுவதற்கு தண்ணீரும் ஒரு பிரச்சினையாக உருவாகலாம் என்று உலகளாவிய அறிக்கை குறிப்பிடுகிறது.

``இஸ்ரேல், லிபியா, ஏமன், ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் ஆகியவையும் இதில் அடங்கும்.''

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவை புரட்டி போட்ட சூறாவளி.. 13 பேர் பலி