Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா - சீனா எல்லை சிக்கல்: லே, லடாக் பகுதியில் தற்போது என்ன நிலவரம்?

இந்தியா - சீனா எல்லை சிக்கல்: லே, லடாக் பகுதியில் தற்போது என்ன நிலவரம்?
, திங்கள், 22 ஜூன் 2020 (11:10 IST)
இந்தியாவில் இம்மலைப்பகுதியில் உள்ள லடாக்கின் லே நகரில் கடும் அமைதி நிலவுகிறது. கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியை அறிந்த பிறகு இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் இந்த மாத்தில் சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருக்கும் லே பகுதியில், கொரோனா வைரஸ் காரணமாக எந்த சுற்றுலாப் பயணிகளும்  வரவில்லை. சாலைகளில் வெகு சில மக்களே காணப்படுகின்றனர். ஜூன் 21-ம் தேதி வரை லே பகுதியில் 212 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே கொரோனா அச்சத்துக்கு மத்தியில் இருந்த மக்கள், தற்போது இந்தியச் சீன ராணுவ மோதல்களால் மேலும் பீதியடைந்துள்ளனர்.
 
இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகக் கடந்த வியாழக்கிழமை, ஒரு உள்ளூர் புத்த குழு பேரணி நடத்தியது. ஆனால், கொரோனா ஊரடங்கு  காரணமாக அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
 
கல்வான் பள்ளத்தாக்குக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் அதிகாரிகள் தடை செய்துள்ளனர். ஊடகத்தினருக்குக் கூட அனுமதி இல்லை. கொரோனா  ஊடரங்கு காரணமாக அந்த சாலைகளில் செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
ஆனால், ஊடகங்களில் தேவையில்லாத ஊகங்கள் வெளியாவதைத் தவிர்க்க, ஊடகத்தினருக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என லே பகுதியின் பா.ஜ.க  தலைவர் டோர்ஜே அங்சக் கூறுகிறார்.
 
மோதியின் கருத்துக்கு எதிர்ப்பு
 
இந்தியப் பகுதிக்குள் யாரும் நுழையவில்லை என அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோதி கூறியது லடாக் உட்பட இந்தியா முழுக்க பலத்த விவாதங்களை  எழுப்பியுள்ளது.
 
கல்வான் பள்ளத்தாக்குக்கு அருகில் உள்ள டுர்போக் பகுதியின் முன்னாள் கவுன்சிலரான நம்கயால், `` சீனர்கள் நமது பிராந்தியத்திற்குள் நுழையவில்லை என்றால்,  ஏன் இவ்வளவு ராணுவத்தினர் இங்குக் குவிக்கப்பட்டுள்ளனர்`` எனக் கேட்கிறார்.
 
மேலும் அவர், "சீனர்கள் நமது பகுதிக்குள் நுழையவில்லை எனப் பிரதமர் கூறுகிறார். ஆனால், ஊடுருவல் நடந்துள்ளது என்பது கிராம மக்கள் அனைவருக்கும் தெரியும். கல்வான் பள்ளத்தாக்கில் முன்பெல்லாம் எங்களது குதிரைகளை மேய்ப்போம். ஆனால், இப்போது அந்த பகுதியைச் சீனர்கள் கட்டுப்பாட்டில்  வைத்துள்ளனர்`` என்கிறார்.
 
"மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் இரு நாட்டு ராணுவத்தினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சில நேரம் நமது ராணுவத்தினர்  எல்லைத்தாண்டி சென்றுவிடுவர்கள். அதேபோல அவர்களும் இங்கு வந்துவிடுவார்கள். இது நடக்கும்போதெல்லாம் கைகலப்பு ஏற்படும். அதேபோல இப்போதும்  மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் மோதல் நடந்துள்ளது. ஆனால், சீனர்கள் இந்தியாவிற்கு ஊடுருவவில்லை`` என்கிறார் லே பகுதியின் பா.ஜ.க தலைவர் டோர்ஜே  அங்சக்.
 
இந்தியப் பிரதமர் மோதியின் கருத்து சர்ச்சையான நிலையில்,`` கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து கட்டுமானங்களை  எழுப்ப சீனா முயன்றது; அந்த நடவடிக்கைகளை நிறுத்தவும் மறுத்தது; அதனால்தான் ஜூன் 15 அன்று எல்லையில் மோதல் நடந்தது," என்று இந்திய அரசு பின்னர்  விளக்கம் அளித்தது.
 
வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்
 
மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை சுற்றி வாழும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்குக் கால்நடைகளை நம்பியே வாழ்கின்றனர். ஆனால், சீன ஊடுருவலால் தங்களது மேய்ச்சல் நிலங்களை இழந்துவிடுவோம் என அவர்கள் அச்சப்படுகின்றனர்.
 
``சீனா பல ஆண்டுகளாக நமது நிலங்களை ஆக்கிரமித்து வருகிறது. இது குறித்து புகார் அளித்தபோது யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது நாங்கள்தான்  கஷ்டப்படுகிறோம்`` என்கிறார் முன்னாள் கவுன்சிலரான நம்கயால்.
 
இங்குள்ள ஒவ்வொரு பகுதியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த கவுன்சிலர்களின் சபை, லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நடக்கும் அனைத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளையும் இந்த கவுன்சில்தான் செய்கிறது.
 
இந்திய சீன ராணுவ மோதலால் இந்த பிராந்தியத்தில் பல கிரமங்களில் தொலைத் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் தொலைத்தொடர்பு வசதிகளை அளிக்கக் கோரி பல கவுன்சிலர்கள் அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
 
குறிப்பாக 17 கிராமங்களில் கடந்த 20 நாட்களாகவோ தொலைத் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
 
"இது குறித்து ராணுவத்திடம் பேசியுள்ளோம். அவர்கள் முடிவெடுப்பார்கள்" என்கிறார் லடாக் பகுதியின் ஆணையர் சவுகத் பிஸ்வாஸ்.
 
1962-ல் இந்தியச் சீனப் போரின் போது இந்திய ராணுவத்தில் பணியாற்றிய எலிஹுட் ஜார்ஜ் லடாக் பகுதியைச் சேர்ந்தவர். தற்போது இவரது இளைய மகனின் இந்திய ராணுவத்தில் உள்ளார்.
 
"சமீபத்தில் இந்தியச் சீன எல்லைப்பிரச்சனை துவங்கிய உடன் எல்லையில் உள்ள பங்காங் பகுதியில் பாதுகாப்புக்கு என் மகன் அனுப்பப்பட்டான். ஆனால். தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாததால் அவனுடன் என்னால் பேச முடியவில்லை" என்கிறார் எலிஹுட் ஜார்ஜ்.

webdunia
ராணுவத்திற்கு உள்ளூர் மக்கள் உதவி
 
20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்ட பிறகு இந்தியப் பகுதி எல்லையில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன் லே பகுதியில் இந்திய ராணுவத்தின் போர் விமானங்களையும் காண முடிந்தது.
 
இப்பகுதியில் உள்ள உள்ளூர் வாசிகள் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக இருப்போம் என அவர்கள் கூறுகின்றனர்.
 
"லடாக் பகுதியில் பல போர் சூழ்நிலைகளைப் பார்த்திருக்கிறோம். நாங்கள் எப்போதும் இந்திய ராணுவத்தின் பக்கம் நிற்போம். எங்களது பகுதியைச் சேர்ந்த 400-500  தொழிலாளர்கள் ராணுவத்துடன் இப்போது வேலை செய்து வருகின்றனர்" என்கிறார் முன்னாள் கவுன்சிலரான நம்கயால்.
 
1999-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையிலான கார்கில் போரின் போதும், லடாக் மக்கள் தாமாக முன்வந்து ராணுவத்துக்குப் பல உதவிகளைச் செய்தனர். அதில் உள்ளூர் செய்தியாளரான நிசார் அகமதும் இடம்பெற்றிருந்தார்.
 
"உள்ளூரைச் சேர்ந்த 25 பேர் ராணுவத்திற்கு உதவச் சென்றிருந்தோம். கார்கில் போர் துவங்கியபோது, மலைப்பகுதியில் உள்ள ராணுவ சாவடிகளுக்கு உணவுப்  பொருட்களையும், வெடி மருந்துகளையும் கொண்டு செல்ல உதவினோம்" என்கிறார் நிசார்.
 
இந்தியா சீனா இடையிலான மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் மலைகளும், நதிகளும் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 14.000 அடி உயரத்தில் இந்த எல்லைப்  பகுதிகள் உள்ளன. இத்தகைய நிலப்பரப்பில் பணியாற்றுவதற்கு ராணுவ வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் தேவைப்படுகிறது. ஒரு மாத பயிற்சிக்குப் பின்னரே ராணுவ வீரர்கள் இந்த மலைப்பகுதியில் பணியமர்த்தப்படுவார்கள்.
 
"லடாக்கின் இந்த உயரங்களில் குறைந்த காற்றே இருக்கும். வளிமண்டலம் வறண்டு காணப்படும். அதிக உயரத்தில் நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எனவே சண்டை வந்தால் அதைச் சமாளிக்க ராணுவ வீரர்கள் உடல் தயாராக இருக்க வேண்டும்" என்கிறார் கார்கில் போரில் பங்கேற்ற இந்திய ராணுவத்தின்  கர்னல் சோனம்.
 
"அதிக உயரமுள்ள மலைப்பகுதியில் சண்டையிடுவதால், விரைவாக ராணுவ வீரர்கள் சக்தியை இழந்துவிடுவார்கள். மேலும் ஆயுதங்களின் செயல்திறனும் குறைகிறது. ஹெலிகாப்டர்களால் அதிக எடைகளைச் சுமந்து செல்ல முடியாது. எனவே, போர் வந்தால் இவை அனைத்தையும் நாம் சமாளிக்க வேண்டியிருக்கும்"  என்கிறார் சோனம்
 
"1962-ல் சீனாவுடனா போரில் நாம் தோற்றுப்போனோம். அப்போது நாம் போருக்குத் தயாராக இல்லாததும், போதிய ஆயுதங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் இல்லாததுமே நம் தோல்விக்குக் காரணம்" என்கிறார் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய எலிஹுட் ஜார்ஜ்.
 
"இப்போது 20 ராணுவ வீரர்களை நாம் இழந்தது என்னை வருத்தமடைய வைத்துள்ளது. என்னை பொறுத்தவரையில் இந்தியா பதில் தாக்குதல் நடத்த வேண்டிய நேரம் இது. இல்லையென்றால் சீனா தொடர்ந்து நமது பகுதிக்குள் ஊடுருவிக்கொண்டிருக்கும்" என்கிறார் அவர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

41 ஆயிரத்தை தாண்டிய சென்னை பாதிப்புகள்; மண்டலவாரி நிலவரம்!