Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா - சீனா எல்லை மோதல்: “இந்திய எல்லையில் 60,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது” - மைக் பாம்பேயோ

Advertiesment
இந்தியா - சீனா எல்லை மோதல்: “இந்திய எல்லையில் 60,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது” - மைக் பாம்பேயோ
, சனி, 10 அக்டோபர் 2020 (23:42 IST)
இந்தியாவின் வடக்கு எல்லைப்பகுதியில் 60,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
 
மேலும், சீனாவின் "மோசமான நடத்தை" குவாட் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
இந்திய - பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய குவாட் என்ற குழுவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு பிறகு இந்த நாடுகள் நேரடியாக சந்தித்துக்கொள்வது இதுவே முதல் முறை.
 
இந்திய - பசிபிக் பிராந்தியத்திலும், தென் சீன கடல் மற்றும் இந்தியாவுடனான லடாக் எல்லைப்பகுதி உள்ளிட்டவற்றில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிய பாம்பேயோ தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், "தங்களது வடக்கு எல்லைப்பகுதியில் 60,000 சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதை இந்திய தரப்பு அறிந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
"பெரிய ஜனநாயக நாடுகளாகவும், சக்திவாய்ந்த பொருளாதாரத்தை கொண்டதாகவும் உள்ள இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளை கொண்ட குவாட் என்றழைக்கப்படும் குழுவை சேர்ந்த நாடுகளின் சக வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்தேன். இந்த நாடுகள் அனைத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து அச்சுறுத்தல்கள் நிறைந்த உண்மையான ஆபத்தை எதிர்கொண்டுள்ளன" என்று அவர் ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது அவர் கூறினார்.
 
எல்லையில் ராணுவ வீரர்கள் - சீனாவின் ஆலோசனையை நிராகரித்த இந்தியா
'துப்பாக்கியால் சுட்டால் தாங்க முடியாத விளைவுகள்' - இந்தியாவை எச்சரிக்கும் சீனா
டோக்கியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் இந்திய வெளியுறத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை பாம்பேயோ சந்தித்தார். அப்போது இந்திய - பசிபிக் பிராந்தியம் மட்டுமின்றி உலகெங்கிலும் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் கலந்துரையாடினர். ஜெய்சங்கருடனான தனது சந்திப்பு "பயனுள்ளதாக" இருந்ததாக பாம்பேயோ குறிப்பிட்டுள்ளார்.
 
இதே விவகாரம் தொடர்பான மற்றொரு நேர்காணலில் பேசிய பாம்பேயோ, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சக வெளியுறவு அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தின்போது, சீன கம்யூனிஸ்ட் கட்சியால் தங்களது நாடுகள் எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தலை தடுப்பதற்கு ஒன்றிணைந்து செயல்பட தேவையான கொள்கைகளை உருவாக்கும் பணி தொடங்கியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
 
"இந்த போராட்டத்தில் அமெரிக்கா அவர்களின் கூட்டாளியாகவும் பங்காளியாகவும் இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
 
"அனைத்து நாடுகளும் இந்த அச்சுறுத்தலை உணர்ந்துள்ளன. குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்துடன் நேரடியான மோதலை மேற்கொண்ட சீனர்கள், இப்போது வடக்கில் இந்தியாவுக்கு எதிராக பெரும் படைகளைத் திரட்டத் தொடங்கியுள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்.
 
இந்த ஆண்டு மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருவது, இருதரப்பு உறவுகளை கணிசமாக சிதைத்துள்ளது.
 
இந்த பிரச்சனையை தீர்க்க இரு தரப்பினரும் தொடர்ச்சியான ராஜாங்க மற்றும் ராணுவரீதியிலான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இருப்பினும், பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருவதில் எவ்வித பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.
 
குவாட் குழு எப்போது உருவாக்கப்பட்டது?
 
ஆங்கிலத்தில் நால்வர் குழு என்று பொருள்படும் 'குவாட்' (Quad) எனும் பெயரில் இந்த அலுவல்பூர்வமற்ற குழு 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 
தற்பொழுது 'குவாட்ரிலேட்டரல் இனிஷியேடிவ்' என்று அழைக்கப்படும் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இக்குழுவை உண்டாக்க பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த கூட்டத்தில் 2007ஆம் ஆண்டு மே மாதம் முடிவு செய்யப்பட்டது.
 
இந்தக் குழுவை அமைப்பதற்கு முன்முயற்சி எடுத்து, உந்துதலாக இருந்தவர் சமீபத்தில் பதவி விலகிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.
 
சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த குழு நிறுவப்பட்டதாக அப்போது வல்லுநர்கள் கருதினார்கள்.
 
இது அலுவல்பூர்வமான குழுவாக இல்லாவிட்டாலும், சீனா இதற்கு அலுவல்பூர்வமாக எதிர்ப்பை வெளியிட்டது.
 
எனினும் தங்களுக்குள் இருக்கும் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவதே தங்கள் நோக்கம் என்றும் எந்த ஒரு நாட்டையும் இலக்குவைப்பது அல்ல என்றும் இந்த குழுவினர் தெரிவித்தனர்.
 
அதன்பின்பு இந்த குழுவின் நடவடிக்கைகள் பெரிய அளவில் எதுவும் இல்லாமல் இருந்த சூழலில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நான்கு நாடுகளும் மீண்டும் அணி சேர்ந்து இயங்கத் தொடங்கின.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று மேலும் 5,242 பேருக்கு கொரோனா உறுதி ! 67 பேர் பலி