Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா மற்றும் சீனா அமைதி காக்க வேண்டும் - நேபாள தூதரக அதிகாரிகள்

Advertiesment
இந்தியா மற்றும் சீனா அமைதி காக்க வேண்டும் - நேபாள தூதரக அதிகாரிகள்
, புதன், 17 ஜூன் 2020 (22:50 IST)
லடாக் பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற கைகலப்பு குறித்து நேபாளத்தில் உள்ள பழம்பெரும் ராஜீயத் துறை அதிகாரிகள் மற்றும் சர்வதேச விவகார நிபுணர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனை பிராந்தியம் முழுவதும் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால் அது மேலும் தொடராது என நம்புவதாக அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

செவ்வாயன்று இரவு வரை நேபாள வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. காத்மாண்டுவிலிருந்து பிபிசி ஹிந்தி சேவையிடம் பேசிய பழைய தூதரக அதிகாரிகள், கேந்திர விவகாரத்துறை ஆய்வாளர்கள், மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள், பதற்றம் நிறைந்த இந்திய சீன எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என கோருகின்றனர்.

இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுமே அமைதியை காக்க வேண்டும் என்றும், அமைதியான வழியில் விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

முன்னாள் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான சுஜாதா கொய்ராலா, இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் தங்களின் எல்லைப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள ராஜீயப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தும் என நம்புவதாக தெரிவிக்கிறார்.

"எங்களுக்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் நல்ல உறவு உள்ளது. அந்த இருநாடுகளின் நட்பு வளர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே சண்டை ஏற்பட்டால், அது ஆசிய பிராந்தியம் முழுவதையும் பாதிக்கும்," என்கிறார் கொய்ராலா.

நேபாளத்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் ராஜீயத் துறை அதிகாரியுமான பேக் பஹதூர் தாப்பா, சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே நடைபெற்ற சமீபத்திய பேச்சுவார்த்தையை வரவேற்றுள்ளார். மேலும் இரு தரப்பும் நீண்டகாலமாக உள்ள எல்லைப் பிரச்சனைக்கு அமைதியான தீர்வை எட்டும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"லடாக் மற்றும் பிற பகுதிகளில் நடைபெறும் இந்திய சீன எல்லை பிரச்சனை, கடந்தகால போரின் தொடர்ச்சியாகும். இதற்கான தீர்வு பல சந்திப்புகள் மூலமும், ராஜீயத் தொடர்புகள் மற்றும் அரசியல் ரீதியாகவும் எட்டப்பட வேண்டும்," என்கிறார் அவர்.
லிம்பியாதுரா லிபுலேக் பகுதியில் நடைபெறும் இந்திய நேபாள எல்லை சர்ச்சையும் தொடர்ச்சியான ராஜீயப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படலாம் என்றும் பேக் பஹதூர் தாப்பா தெரிவிக்கிறார்.

கேந்திர விவகார ஆய்வாளரும், நேபாள ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலுமான பினோஜ் பஸ்நியாட், சமீப காலங்களில், இருநாடுகளும் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இமாலய எல்லைப் பகுதிகளான லடாக், காஷ்மீர், சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தில் தங்களின் இருப்பை வலுவாக்க கட்டமைப்புகளை உருவாக்கி வந்தன என்கிறார்.
ஆனால் இந்த கட்டமைப்புகள், இமாலய எல்லையில் இந்தியா மற்றும் சீனாவால் குவிக்கப்பட்ட ராணுவம் ஆகியவற்றால், சமீபத்தில் நடைபெற்ற ராணுவ மோதல் தீவிரமடையாது என அவர் நம்புகிறார்.

"லடாக் பிராந்தியத்தில், இருதரப்பும் போதுமான தயாரிப்புகளை மேற்கொண்டன. அது, அடிப்பையில் போரைத் தவிர்ப்பதற்கான இலக்காகும். இந்த சமீபத்திய மோதலுக்கு பிறகும் அந்த பகுதியில் உள்ள கமாண்டர்கள் பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டனர். இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் தங்களின் ராஜீயப் பேச்சுவார்த்தையை மேலும் தீவிரப்படுத்தும் எனவும், வெளியுறவு அமைச்சக அளவில் இந்த பிரச்சனையை முடிக்கும் எனவும் நான் நம்புகிறேன்." என்றார்.

மூத்த பத்திரிகையாளரும், ஹிமல் சவுத் ஏசியன் கனக் பத்திரிகையின் ஆசிரியருமான மனி தீக்‌ஷித் மற்றும் பிற தெற்காசிய பத்திரிகையாளர்கள், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கைகலப்பு குறித்து சமூக வலைதளங்களில் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான ராணுவப் பதற்றம் மேலும் அதிகரிக்காது என தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மூத்த பத்திரிகையாளரும், தேஷ்சன்சார் டாட் காமின் ஆசிரியருமான யுபராஜ் கிமிரீ, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து இமாலய எல்லைகளில் அமைதியை உருவாக்கும் என நம்புகிறார்.

"அந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என தீவிரமாக நம்புகிறோம் ஏனென்றால், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே பதற்றம் எழுந்தால் அது நேபாளத்தையும் பாதிக்கும். இந்தியா மற்றும் சீனா தங்களின் ராஜீய வழி முறைகளின்படி தற்போதைய பதற்றத்தை குறைத்தால் அது அந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நல்லதொரு நடவடிக்கையாக இருக்கும்." என்கிறார்.

காத்மாண்டு போஸ்டின் முன்னாள் முதன்மை ஆசிரியரும், காத்மாண்டு திங்டாங் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இண்டிகிரேடட் டெவலப்மண்ட் ஸ்டடிஸின் மூத்த ஆய்வாளருமான அகிலேஷ் உபத்யாய் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என கோருகிறார்.

1975க்கு பிறகு இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே இவ்வாறான மோதல் ஏற்பட்டுள்ளது குறித்து அதிர்ச்சி தெரிவித்த அவர், நேபாளத்தின் பெரும் அண்டை நாடுகள் அமைதி காக்க வேண்டும் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

"இருபெரும் நாடுகளும் சண்டையிட்டால், இழப்புகள் ஏற்படும், அந்த பிராந்தியத்தில் உள்ள நேபாளம் போன்ற சிறு நாடுகளும் இதனால் பாதிப்படையும். நல்ல வேளையாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது அமைதி ஏற்படும்வரை தொடர வேண்டும்." என்கிறார் உபத்யாய்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல கோடி மோசடி செய்த பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு !