Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இம்ரான் கான்: பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கேப்டனின் அரசியல் பயணம்

இம்ரான் கான்: பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கேப்டனின் அரசியல் பயணம்
, புதன், 6 ஏப்ரல் 2022 (00:12 IST)
இம்ரான் கான் ஒரு 'க்ரெளட் புல்லர்', அதாவது கூட்டத்தை தன் பக்கம் இழுப்பவர் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் அவர் பாகிஸ்தானின் அரசியலை நன்கு அறியாதவர் என்று பொருள்.
 
இம்ரான் கானுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. 1992 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது முதல் 2022ல் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து அசைத்தது வரை, அந்த ரசிகர்கள் அவரது மாயாஜாலத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர், அவரின் ஒரு குரலுக்காக காத்திருக்கின்றனர், கேப்டன் சொல்வதே உண்மை என்று நம்புகின்றனர்.
 
நான் களத்தில் உறுதியாக நின்று கடைசி பந்து வரை விளையாடுவேன் என்று கிரிக்கெட் சொற்களில் இம்ரான் கான் சொல்கிறார். ஆனால், கடைசி பந்தில் 172 ரன்கள் எடுத்திருக்க முடியுமா? மேலும், அவரது சொந்த மட்டையே விக்கெட்டைத் தொட்டிருந்தால் என்ன செய்வது?
 
இம்ரான் கானின் கதையும் பெவிலியன் முதல் ஆடுகளம் வரையிலான கதையைப் போலவே உள்ளது. இதற்கிடையில், அவருடன் விளையாடிய இன்னிங்ஸை ஒருபோதும் மறக்க முடியாத அளவுக்கு தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அவர் சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
 
இம்ரான் கான் பிரதான அரசியலில் நுழைந்தது ஒரு திடீர் நிகழ்வு அல்ல. இதற்காக பல ஆண்டுகள் காத்திருந்து கடுமையாக உழைத்ததாக அவர் குறிப்பிடுகிறார். 1987 உலகக் கோப்பைக்குப் பிறகு இம்ரான் கான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தபோது, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ஜியா-உல்-ஹக், அவரை மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பச் சொன்னார். சில மாதங்களுக்குப் பிறகு இம்ரான் ஓய்வு பெறும் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
 
இதேபோல், ஜெனரல் ஜியா, அவரை அரசியலில் சேருமாறு பின்னர் கேட்டுக் கொண்டார். ஆனால், இம்ரான் கான் அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பும் இதேபோன்ற அழைப்பை விடுத்தார். ஆனால், அரசியலில் சேருவதில்லை என்ற தனது முடிவில் கேப்டன் உறுதியாக இருந்தார்.
 
ஆனால், இறுதியில் இம்ரான் கான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.
 
முப்படை உளவு அமைப்பு ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவரான ஜெனரல் ஹமீத் குல்லின் ஜிஹாதி சித்தாந்தத்தை இம்ரான் கான் விரும்பினார். அவருக்கு வாய்ப்பு கிடைத்ததும், ஜெனரல் ஹமீத் குல் மற்றும் முகமது அலி துரானியின் சமூகக் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 'பாஸ்பான்' என்ற அமைப்பில் இம்ரான் சேர்ந்தார். ஹமீத் குல் மற்றும் முகமது அலி துரானியும், இதை ஒரு 'pressure group' அல்லது 'மூன்றாவது சக்தி' என்று அழைத்தனர். அரசியல்வாதிகள் தங்கள் சொந்த லாபங்களுக்காக நாட்டை சூறையாடுகிறார்கள் மற்றும் அவர்களின் பரஸ்பர சண்டையில் மக்கள் நசுக்கப்படுகின்றனர் என்பதால், இது பாகிஸ்தானுக்கு மிகவும் தேவையான ஒன்று அவர்கள் நினைத்தனர்.
 
 
உலக கோப்பையை வென்றபிறகு கோப்பையை உயர்த்திக்காட்டும் இம்ரான் கான்
 
அரசியலை விட சமூக மாற்றத்திற்கான முதல் படி இது என்று பாஸ்பான் அமைப்பின் நிறுவனர்கள் குறிப்பிட்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு இம்ரானின் மாற்றத்தின் சுனாமி அலையில் இது மேலெழும்பி வந்தது.
 
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் ஹமீத் குல்லின் திட்டவட்டமான யோசனைகள், ஜமாத்-இ-இஸ்லாமில் இருந்து வந்த துரானியின் சிறந்த நிர்வாகத் திறமை மற்றும் உலகக் கோப்பை ஹீரோ இம்ரான் கானின் கவர்ச்சியான ஆளுமை ஆகியவற்றை தன்னுள் கொண்டுள்ள இது, மிகவும் பயனுள்ள 'முயற்சி'யாக இருந்தது. இந்த அமைப்பும், அதன் இரு தலைவர்களும் இம்ரானின் அரசியல் சித்தாந்தத்தின் முதிர்ச்சியில் பெரும் செல்வாக்கு செலுத்தினார்கள்.
 
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெனரல் முஷாரஃப்பும் இம்ரானுடன் நெருக்கமாகிவிட்டார். இம்ரான் அவருடன் ஏறக்குறைய இணைவதாக இருந்தார். பிடிஐ தலைவர், கட்சியின் செயல்திறனை விட அதிக இடங்களைக் கேட்டார் என்று ஜெனரல் முஷாரஃப் குறிப்பிட்டார்.
 
புற்றுநோய் மருத்துவமனை
 
பாகிஸ்தானில் அப்துல் சத்தார் ஈதிக்குப் பிறகு இம்ரான் கான் சந்தேகத்திற்கு இடமின்றி மக்கள் நலப்பணிகளை மேற்கொண்ட மிக முக்கியமான ஒருவராக கருதப்படுகிறார். அவர் தனது தாயின் பெயரிடப்பட்ட ஷௌகத் கானம் புற்றுநோய் மருத்துவமனையின் மூலம் பாகிஸ்தானின் பெரும்பாலான மக்களுக்கு சேவை செய்துவருகிறார்.
 
ஷௌகத் கானம் மருத்துவமனையில் நடந்த விழாவில் இம்ரான் கான் தனது முன்னாள் மனைவி ஜமைமா கான் மற்றும் மறைந்த பிரிட்டிஷ் இளவரசி லேடி டயானாவுடன்.
 
ஆனால், இங்கும் 'பாஸ்பான்' அமைப்பின் பங்களிப்பை குறிப்பிட வேண்டும். முகமது அலி துரானி, ஜமாத் ஆர்வலர்கள் மற்றும் வணிக சமூகத்துடனான தனது தொடர்புகளைப் பயன்படுத்தி இம்ரான் கானுக்காக பெரும் நிதி திரட்டினார்.
 
அத்தகைய ஒரு நிதி திரட்டும் நிகழ்வில் இம்ரான் கான், கோடீஸ்வர தொழிலதிபர் அப்துல் ஹலிம் கானை சந்தித்தார். அவர் அதே இடத்தில் ஷௌகத் கானம் மருத்துவமனைக்கு 6 கோடி ரூபாயை நன்கொடையாக அறிவித்தார்.
 
இந்நிகழ்ச்சியில் பிடிஐ கட்சியின் செய்திகளை எழுதும் டான் நாளேட்டின் பத்திரிகையாளர் மன்சூர் மல்லிக்கும் இருந்தார். "பிடிஐ உருவாவதற்கு முன்பு, இம்ரான் கானின் மிகப்பெரிய திட்டம் ஷௌகத் கானம் புற்றுநோய் மருத்துவமனையை அமைப்பதுதான். அதற்காக இம்ரான் இரவும் பகலும் உழைத்தார், ஷௌகத் கானம் மருத்துவமனை திட்டம் பாகிஸ்தான் மக்களிடமிருந்து அவருக்கு பேராதரவை பெற்றுத்தந்தது. இளைஞர்கள், பெண்கள், வணிக வகுப்பினருடன் கூடவே பின்னர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்பின் 'ஏடிஎம்' என அழைக்கப்படும் ஹலிம் கானும் அதில் சேர்ந்தார்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
ஹலிம் கான் அளித்த நன்கொடை மற்றும் சேவையின் காரணமாக, லாகூரில் உள்ள ஷௌகத் கானம் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வார்டுக்கு அவரது தந்தை அப்துல் ரஹீம் கானின் பெயரும், பெஷாவரில் உள்ள ஷௌகத் கானம் மருத்துவமனையில் உள்ள ஒரு மாடிக்கு அவரது தாய் நசீம் கானின் பெயரும் சூட்டப்பட்டது. ஹலிம் கான் 'அப்துல் ஹலிம் கான் அறக்கட்டளை'யின் கீழ் தொண்டு மற்றும் நலப் பணிகளைச் செய்து வந்தார்.
 
 
ஷௌகத் கானம் நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி திறக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1996, ஏப்ரல் 25 ஆம் தேதி இம்ரான் கான் தனது சொந்த அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) ஐ நிறுவினார். அதன் அறிக்கை' பாஸ்பான்' அமைப்பின் சித்தாந்தங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது.
 
இதில் 'இஸ்லாமிய நலன்புரி அரசை நிறுவுதல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்குதல்' என்ற முழக்கம் முதன்மையானதாக இருந்தது. ஆரம்பத்தில் இது 'ஒன் மேன் ஷோ' என்று அழைக்கப்பட்டாலும், பின்னர் பலர் இந்த அணியில் சேர்ந்தனர்.
 
கட்சி 1996 இல் உருவாக்கப்பட்டாலும், அதன் பெரிய அளவிலான செயல்திறனை 2011 இல் பார்க்க முடிந்தது. கட்சியின் முதல் பெரிய பேரணி நவம்பர் 30 அன்று லாகூரில் உள்ள மினார்-இ-பாகிஸ்தானில் நடைபெற்றது என்று மன்சூர் மல்லிக் கூறினார்.
 
ஒத்த கருத்தியல் கொண்டவர்கள் அதில் இணைந்தனர். 2002 தேர்தலில் பிடிஐ, ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இம்ரான் கான் மியான்வாலி தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் 2013 தேர்தல் வந்தது. அந்த நேரத்தில், பிடிஐ தனது வேட்பாளர்கள் யார், யார் பணத்தை செலவிடுவார்கள், யாரால் முடியும், யாரால் முடியாது என்று அடிமட்ட அளவில் தன்னை ஒழுங்கமைக்கத் தொடங்கியது.
 
 
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கிளர்ச்சி உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளின் அதிருப்தி பற்றி இந்த நேரத்தில் முக்கியமாக பேசப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள், சில சமயங்களில் 'தேச துரோகிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். சில சமயங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகின்றனர். ஆனால், பிடிஐயில் இது முதல் முறையாக நடக்கிறதா? அது உண்மையல்ல. கட்சி உருவாக்கப்பட்டு தேர்தலில் பங்கேற்றது முதல், கட்சியின் பல்வேறு குழுக்கள் கோபமடைந்துள்ளன. பலர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.
 
1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) என்ற தனது அரசியல் கட்சியை இம்ரான் கான் தொடங்கியபோது, 11 வீரர்கள் கொண்ட கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருப்பதிலும், தேசிய அளவில் அரசியல் கட்சியை நடத்துவதிலும் உள்ள வித்தியாசம் அவருக்கு ஒருவேளை தெரியாமல் இருந்திருக்கலாம்.
 
அவருக்கு மிக அருகில் வருபவர் சில காலம் கழித்து அவரிடமிருந்து விலகிச் செல்வதும் இம்ரான் கானின் ஆளுமையில் அடங்கும் என்று கூறப்படுகிறது. ஹமீத் கான் முதல் ஓய்வுபெற்ற நீதிபதி வஜிஹுதீன் வரையிலும், ஜஹாங்கீர் கான் முதல் ஹலிம் கான் வரையில், பிடிஐயில் கோபமடைந்த உறுப்பினர்களின் பட்டியல் மிக நீளமானது.
 
பெரும்பாலும் இம்ரான் கானின் சொந்த முடிவுகளே இந்த நிலைக்குக் காரணம். உதாரணமாக, 2013 தேர்தலுக்கு முன்னதாக, அடிமட்ட நிலையில் அமைப்பை வலுப்படுத்த 'நியமனம் செய்வதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு வர வேண்டும்' என்று திடீரென முடிவு செய்யப்பட்டது. இது கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகும்.
 
2018 ஆம் ஆண்டு வந்தவுடன் இம்ரான் கான் தான் முன்பு நம்பாத' ஸ்தாபனத்துடன்' (ராணுவம்) கைகோர்த்தார். பிறகு ஸ்தாபனம் அவருக்கு ஆட்களை அளிக்கத் தொடங்கியது.
 
"கட்சியில் மீண்டும் சர்ச்சை ஆரம்பமானது. கட்சிக்காரர்களுக்கு சீட்டு கிடைக்கவில்லை, வெளியில் இருந்து வருபவர்களுக்கு கட்சியின் டிக்கெட் கிடைக்கிறது. இதற்கு மிகப்பெரிய உதாரணம் உஸ்மான் பஸ்தார். முஸ்லீம் லீக்-கியூ மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-(நவாஸ்)ல் முன்பு இருந்த அவர், பிடிஐயில் சேர்க்கப்பட்டு முதலமைச்சராக்கப்பட்டது கட்சி உறுப்பினர்களை கோபப்படுத்தியது. ஆனால் இம்ரான் உறுதியாக நின்றார்."
 
இம்ரான், எர்துக்ருல் மற்றும் இளைஞர்கள்
 
2018 தேர்தலில் PTI நாடாளுமன்றத்தில் 116 இடங்களை வென்றது. பாகிஸ்தான் வரலாற்றில் ஐந்து இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் அரசியல்வாதியாக இம்ரான் கான் ஆனார்.
 
 
இந்த வெற்றிக்குப் பிறகு இம்ரான் கான் ஆற்றிய உரையில், தனது வருங்கால அரசின் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து, நாட்டை முழு நலன்புரி நாடாக மாற்ற விரும்புவதாகவும், மதீனா அரசின் கொள்கைகளின் அடிப்படையில் அதை நடத்த விரும்புவதாகவும் கூறினார்.
 
பிரபல துருக்கிய தொடரான 'டிரிலிஸ்: எர்துக்ருல்லை' பாகிஸ்தான் மக்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று 2020 ஆம் ஆண்டில் இம்ரான் கான் ஒரு நேர்காணலில் கூறினார். இது ஒரு வலுவான இஸ்லாமிய அரசின் அடித்தளத்தை நோக்கிய இம்ரான் கானின் சிமிஞ்சையாக இருக்கலாம் அல்லது ஒருவேளை அவர் தன்னை அதே வடிவத்தில் பார்த்திருக்கலாம்.
 
ஒட்டோமான் வரலாற்று கதாபாத்திரம் எர்துக்ருல். இவர் ஒட்டோமான் பேரரசை நிறுவிய உஸ்மான் காஜியின் தந்தை ஆவார். மங்கோலியர்கள், துரோகிகள் மற்றும் சிலுவைப்போர் நடத்தும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தனது வாழ்நாளைக் கழித்தார். அவரது மகன் பின்னர் 600 ஆண்டுகள் நீடித்த ஒட்டோமான் பேரரசை நிறுவினார்.
 
பழைய அரசியலை வெளியில் தள்ளி புதிய அரசியலைக் கொண்டு வருவேன் என்பது இம்ரான் கானின் வாக்குறுதி. ஆனால் அது நடக்கவில்லை என்று பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநரும் மூத்த பத்திரிகையாளருமான ஃபரா ஜியா கருதுகிறார். " நீதி பற்றி அவர் ஆரம்பித்தார். ஆனால் நீதியின் நிலையை உங்களால் இப்போது பார்க்க முடிகிறது. உண்மையில் அவரால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியவில்லை. இஸ்லாமிய சித்தாந்தங்கள் அல்லது எர்துக்ருல் நாடகத்திலோ மக்களை திசைதிருப்ப வைப்பதே எளிதான வழியாக இருந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.
 
இஸ்லாமியம் மற்றும் தேசியவாதம்
இம்ரான் கான் பாகிஸ்தானை மதீனா ஆட்சிமுறையில் பார்க்க விரும்புகிறார். ஆனால் அவர் ஸ்காண்டிநேவிய பொதுநல கட்டமைப்புகள், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஜனநாயகங்கள் மற்றும் சீனா பாணி அதிகார அமைப்பு ஆகியவற்றையும் எதிர்பார்க்கிறார்.
 
அதே நேரத்தில், துருக்கியின் ரிசெப் தயீப் எர்துவான் மற்றும் மலேசியாவின் மஹாதிர் முகமது ஆகியோரின் உதாரணத்தைக் காட்டி, அவர்களைப்போன்ற தலைமையையும் விரும்புகிறார். சர்வாதிகாரம், ஜனநாயகம், பாசிசம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் என்று எல்லாமே இதில் இருப்பதால், இது கடினம் மட்டுமல்ல, சாத்தியமற்றது என்று அரசியல் படிக்கும் எந்தவொரு மாணவருக்கும் தெரியும். அவை அனைத்தும் ஒரு காந்தத்தின் ஒத்த முனைகளைப் போல ஒன்றையொன்று விலக்கித்தள்ளுகின்றன.
 
 
ஆனால் இம்ரானுக்கு இவை பற்றிய தனிப்பட்ட கண்ணோட்டம் இருக்கலாம். இவை அனைத்திலிருந்தும் சில விஷயங்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொள்ள நினைக்கலாம் அல்லது இவற்றை ஒரே விஷயமாக அவர் கருதலாம்.
 
இம்ரான் கானின் அமெரிக்கா பற்றிய கொள்கை மற்றும் அறிக்கையைப் புரிந்து கொள்ள, வரலாற்று பின்னணியைப் பார்க்க வேண்டும் என்று இஸ்லாமாபாத்தில் உள்ள காய்த்-இ-ஆசாம் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பள்ளியின் உதவிப் பேராசிரியர் டாக்டர் சையத் கந்தீல் அப்பாஸ் கூறினார்.
 
"பாகிஸ்தானின் முதல் பிரதமரான லியாகத் அலி கான் காலத்திலிருந்தே பிரச்சனை என்னவென்றால், பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை 'இந்தியாவை மையமாகக் கொண்டது'. இந்தியா குறித்த அணுகுமுறையில் பாகிஸ்தானை ஆதரிக்கும் நாடுகள், நட்பு நாடுகள் என்று உறுதியாக நம்பப்படுகிறது. முன்பு லியாகத் அலிகான் ரஷ்யா பயணத்தை விட்டுவிட்டு அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது."
 
"பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைக்கு இங்குதான் அடித்தளமிடப்பட்டது. பாகிஸ்தான் மேற்கத்திய நாடுகளுடன் கைகோர்த்தது. ஆனால் 1965 மற்றும் 1971 போர்களில், பாகிஸ்தானுக்கு அமெரிக்காவிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை. பாகிஸ்தானில் ,மேற்கத்திய மற்றும் அமெரிக்க-எதிர்ப்பு உணர்வுகள் எழுந்தன. சுல்ஃபிகர் அலி புட்டோ பதவிக்கு வந்தபோது அவர் 'இஸ்லாமிய குழு' பற்றிப் பேசியதும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் அவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். புட்டோவின் மரணதண்டனைக்கு அமெரிக்காவே பொறுப்பு என்று கூட சிலர் நினைக்கும் நிலை ஏற்பட்டது," என்று கந்தீல் சுட்டிக்காட்டினார்.
 
 
ரஷ்ய பயணத்தின் போது மாஸ்கோவில் அதிபர் மாளிகையில் பிரதமர் இம்ரான் கான்.
 
இம்ரான் கான் சீனா மற்றும் ரஷ்யாவின் பக்கம் சாய்ந்திருப்பதாகவும், அவர் பாகிஸ்தானை மேற்குப் பிரிவிலிருந்து கிழக்குப் பிரிவுக்கு மாற்ற விரும்புவதாகவும், அவர் இஸ்லாமியப் பிரிவைப் பற்றியும் சிந்திக்கிறார் என்றும் டாக்டர் கந்தீல் கூறுகிறார். "ரஷ்யா யுக்ரேன் மீது போர் தொடுத்த அதே நாளில் அவர் சீனா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு உடனடியாக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டார் என்பது உண்மைதான். சுற்றுப்பயணங்கள் முன்கூட்டியே திட்டமிடப்படுவதால் அது தற்செயல் நிகழ்வாகவும் இருக்கலாம்."
 
ஆனால் பாகிஸ்தானின் எந்த அரசும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க முடியவில்லை என்று ஃபரா ஜியா கூறுகிறார். "அரசுகள் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருப்பதை ஸ்தாபனம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. உண்மையில் வெளியுறவுத் துறையும் அவர்களிடம்தான் உள்ளது. முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஃஜர்தாரி முயற்சி செய்து இரானுக்குச் சென்றார். ஆனால் அதைத் தாண்டி எதையும் செய்ய அவர் அனுமதிக்கப்படவில்லை. தனது வெளியுறவுக்கொள்கையை உருவாக்கும் அளவிற்கு இம்ரானுக்கு சுதந்திரம் இருந்ததா என்பதே எனது கேள்வி," என்கிறார் ஃப்ரா ஜியா.
 
"புவிசார் அரசியலில் இருந்து விலகி, புவிசார் பொருளாதாரத்தை பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒருவேளை இம்ரானும் அதையே செய்ய விரும்புகிறார். வலுவான பொருளாதாரம் இல்லாமல் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை சாத்தியமில்லை," என்று டாக்டர் கந்தீல் குறிப்பிட்டார்.
 
2014ல் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக இம்ரான் கான் வீதியில் இறங்கி, தனக்கு ஆதரவாக இருக்கும் இளைய தலைமுறையின் சுனாமி, 'ஊழல்' அரசியல்வாதிகளை அழித்துவிடும் என்று கூறியபோது, சுனாமிக்குப் பிறகு அழிவின் அதிகப்படியான அழுக்குகள் வெளிவரும் என்பதையும், அதை ஒன்று திரட்டுவது மிகவும் கடினம் என்பதையும் பலர் உணரவில்லை. இம்ரானின் சுனாமியிலும் இதேபோலத்தான் நடந்தது.
 
இம்ரானை யார் எதிர்த்தாலும், இம்ரான் கானின் ஆதரவாளர்களும், இம்ரானும் அவர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் சாடுவார்கள். இன்று கட்சியில் அவருக்குப் பிடித்தமானவர் ஒருவர் இருந்து, நாளை அவர் இம்ரானை விமர்சித்தால் அவர் 'துரோகி' என்றும் 'விலை போனவர்' என்றும் அழைக்கப்படுவார். இங்கு கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லை. இதுதான் பிடிஐயின் மிகப்பெரிய பின்னடைவாகத் தெரிகிறது.
 
இம்ரான் கான் ஒரு அரசியல்வாதியா?
 
இம்ரான் கான் எப்போதுமே அரசியல்வாதிகளை மோசமான வார்த்தைகளால் வர்ணிப்பார். சில சமயங்களில் நாடாளுமன்றத்தையும் பொருட்படுத்துவதில்லை. சில நேரங்களில் பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவைத் தவிர கடந்த கால அரசியல்வாதிகள் யாரும் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாகக் கருதுவதில்லை.
 
இதற்குக் காரணம் இம்ரான் ஒரு அரசியல் வாதி அல்ல என்று ஃபரா ஜியா கூறுகிறார். "அவரது பயிற்சி அப்படி இருக்கவில்லை. 'தான் ஒரு அரசியல் மாணவன்' என்று தனது உரைகளில் அவர் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால் உண்மையில் அவர் அரசியல் மாணவன் அல்ல. அவர் ஒரு கிரிக்கெட் வீரர், அதுவும் ஓய்வு பெற்ற வீரர். அவர் கடந்த காலத்தில் மட்டுமே வாழ்கிறார். அரசியலானது கொடுக்கல் வாங்கல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அதற்கு நெகிழ்வுத்தன்மை அதிகம் தேவைப்படுகிறது. அது இம்ரான் கானிடம் இல்லாத ஒன்று. 'காப்பாற்ற வந்தவர்' என்று தன்னைக்கருதும் நபர் அவர்," என்கிறார் ஃபரா ஜியா.
 
காபாற்ற வந்தவரோ, கிரிக்கெட் வீரரோ அல்லது அரசியல்வாதியோ, இம்ரான் தனது இரண்டாவது இன்னிங்ஸில் தற்காப்பு வியூகத்தை கடைப்பிடிப்பாரா அல்லது தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா.