Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழர் இனப் பிரச்னைக்கு தீர்வு வழங்கும் முயற்சியை கைவிடமாட்டேன்: ரணில் விக்ரமசிங்க

தமிழர் இனப் பிரச்னைக்கு தீர்வு வழங்கும் முயற்சியை கைவிடமாட்டேன்: ரணில் விக்ரமசிங்க
, புதன், 8 பிப்ரவரி 2023 (23:37 IST)
பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் இலங்கை இனப்பிரச்னைக்கு நிலைபேறான தீர்வொன்றை இம்முறை தான் நிச்சயம் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கிறார்.
 
9வது நாடாளுமன்றத்தின் 4வது அமர்வில் கலந்துகொண்டு கொள்கை பிரகடன உரையை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
1977ம் ஆண்டு தான் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான சந்தர்ப்பத்திலிருந்து இனப்பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அது இன்று வரை வெற்றியளிக்கவில்லை என அவர் கூறுகிறார்.
 
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராக ஆர்.சம்பந்தனும், தானும் 1977ம் ஆண்டு ஒரே சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்றத்திற்கு தெரிவானதாக கூறிய அவர், தம் இருவருக்கும் அன்று முதல் இன்று வரை கனவொன்று இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
 
இனப்பிரச்னைக்கு நிலைபேறான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதே தமது கனவு என அவர் கூறுகின்றார்.
 
இதுவரை நடத்தப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்காத போதிலும், இம்முறை எவ்வாறாயினும், அதனை வெற்றியடையச் செய்வதே தமது எதிர்பார்ப்பு எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
 
''ஆர்.சம்பந்தன் அவர்களும், நானும் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோம். நம் இருவருக்கும் பொதுவான ஒரு கனவு உண்டு. நம் இருவரும் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்னைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்குதல் ஆகும். அக்கனவு பற்றி அன்று முதல் இன்று வரை நாம் கலந்துரையாடுகிறோம். முயற்சி செய்கிறோம்.
 
முன்னைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். அதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் நாம் எதிர்பார்க்கிறோம்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
 
 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கைப்பற்றப்பட்ட காணிகள் குறித்தும் ஜனாதிபதி தனது உரையில் கவனம் செலுத்தியிருந்தார்.
 
"அநீதியை சரிசெய்ய நடவடிக்கை"
''வடக்கில் காணி தொடர்பாக தீர்க்கப்படாத மேலும் பிரச்னைகள் உள்ளதை நாம் அறிவோம். பலாலி முகாமுக்காக கையேற்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன. மேலும் பல ஏக்கர் காணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பாக ராணுவம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. ஏனைய பாதுகாப்பு முகாம்களை அண்மித்த காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் காணிகள் தொடர்பில் பாரதூரமான பிரச்னை காணப்படுகிறது.
 
இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காடுகள் பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் விமானப்படை அடிப்படையாக கொள்ளப்பட்டது. யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் காடுகளாக்கப்பட்ட கிராமங்களின் பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டன. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் தமக்கு உரித்தான பல காணித் துண்டுகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
 
மொனராகலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை மக்கள் இப்பிரச்னையை எதிர்கொண்டுள்ளார்கள். 1985 ஆம் ஆண்டின் வரைபடத்தின் பிரகாரம் காடுகள் மற்றும் காணிகளை மீண்டும் வர்த்தமானியில் வெளியிட்டு இந்த அநீதியை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 
 
காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு
 
எந்தவொரு விசாரணையும் இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறுகின்றார்.
 
''காணாமல் போன நபர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான முறைமையினை நாம் முறைமைப்படுத்தி துரிதப்படுத்துவோம். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றியும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். படிப்படியாக இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
 
"போலீஸ் அதிகாரங்களில் மாற்றம் கிடையாது"
 
''பிரதி போலீஸ்மா அதிபர் பிரிவு எல்லைகள் தற்பொழுது மாகாண எல்லைகளின் பிரகாரம் காணப்படுவதில்லை. இதன் காரணமாக பிரயோக ரீதியான பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. ஆகவே மாகாணங்களின் பிரகாரம் பிரதி போலீஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
 
போலீஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் இடம் பெறமாட்டாது" என ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.
 
மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் விசேட கவனம்
 
மலையக மக்கள்
இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தொடர்பில் தான் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
 
மலையக மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பில் எஞ்சியுள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து, மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதனை தீர்த்து வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
''பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் நாம் விசேட கவனம் செலுத்துவோம். இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார்கள். பெருந்தோட்டத் துறைக்காக பாரியளவு சேவையாற்றிய செளியமூர்த்தி தொண்டமான் அவர்களும், நானும் ஒன்றாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டோம். நாம் இருவரும் பெருந்தோட்ட மக்களின் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட்டோம். தற்போது பெருந்தோட்ட மக்களின் சட்ட ரீதியான அனைத்து உரிமைகளையும் நாம் வழங்கியுள்ளோம்.
 
ஆனாலும் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் பெருந்தொட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். 200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை வளம்பெறச் செய்வதற்கு பாடுபடும் அவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை மக்களின் ஒரு பிரிவினராக மாற்றப்பட வேண்டும்." என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 
முஸ்லிம்களில் பிரச்னைக்கு விரைவில் தீர்வு
 
''நான் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் எனது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக திரு. ஏ.சீ.எஸ்.ஹமீட் தெரிவு செயற்பட்டார். இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் விசேடமான நிலைமை பற்றி அவர் எனக்கு விளக்கம் அளித்துள்ளார். அடிக்கடி முஸ்லிம் மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வதனை நாம் அறிவோம். அது தொடர்பாகவும் நாம் முழு அவதானம் செலுத்துகின்றோம்." என அவர் கூறுகின்றார்.
 
இதேவேளை, இலங்கை வாழ் சிங்கள மக்களும் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளதாக கூறிய அவர், அந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
 
''விசேடமாக சாதி வேறுபாடுகள் காரணமாக சமூகத்தில் ஓரம் கட்டப்பட்டுள்ள சமூகங்கள் தொடர்பில் முழு அவதானம் செலுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்" என ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.
 
இந்த அனைத்து விதமான பிரச்னைகளுக்கும், ஒற்றையாட்சி அரசில் உயர்ந்தபட்ச அதிகாரங்களை பகிர்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.
 
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை பிரிப்பதற்கு தான் துணை நிற்க போவதில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
 
அந்நிய செலாவணி 500 மில்லியன் டாலராக உயர்வு
 
பூஜ்ஜியம் வரை வீழ்ச்சி கண்ட இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பானது, தற்போது 500 மில்லியன் அமெரிக்க டாலர் வரை தற்போது அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
 
 
''நான் ஜனாதிபதியாக ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது நாட்டின் பணவீக்கம் 70 வீதமாகும். எமது செயற்பாடுகள் காரணமாக 2023 ஜனவரி மாதமளவில் அதனை 54 சதவீதமாக குறைப்பதற்கு எம்மால் முடிந்தது. இந்த ஆண்டு இறுதியில் அதனை தனி இலக்கத்திற்கு கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். 2022 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அதிகரிப்பதற்கு எம்மால் முடிந்தது. அதற்காக உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள் பெருமளவு பாடுபட்டார்கள். அதே போல் இறக்குமதி செலவினத்தை 18 பில்லியன் டாலர்கள் வரை மட்டுப்படுத்த எமக்கு முடிந்தது. வெளிநாடுகளில் தொழில் புரியும் நபர்கள் இந்த இக்கட்டான நிலையில் தாய் நாட்டுக்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்குகிறார்கள். 2022 ஆம் ஆண்டு இறுதியளவில் 4 பில்லியன் டாலர் அந்நிய செலாவணியை அவர்கள் எமக்கு வழங்கினார்கள்.
 
எமது தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள், அவர்களுக்கு பல்வேறு வகையான அழுத்தங்களைப் பிரயோகித்த ஒரு பின்னணியிலேயே இந்த அர்ப்பணிப்பினை நாட்டுக்காக மேற்கொண்டார்கள்.
 
ஆனாலும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்புவது நாட்டுக்காக அன்றி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிக்காக அல்ல என்பதனை அவர்கள் நிரூபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரையும் நாம் கௌரவிக்கிறோம். பெரும்பாலும் பூஜ்ஜியத்துக்கு வீழ்ந்த எமது அந்நிய செலாவணி ஒதுக்கினை 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அதிகரிப்பதற்கு எமக்கு தற்பொழுது முடிந்துள்ளது. சுற்றுலாக் கைத்தொழிலை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது.
 
வீதிகள் முழுவதும் குறுகிய அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட தடைகளுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்தார்கள். உலகின் சிறந்த 10 சுற்றுலா இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டது. இந்த சனவரி மாதத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளார்கள். அது ஒரு சாதனையான எண்ணிக்கை ஆகும். இவ்வாறு அனைத்து துறைகளிலும் நாம் முன்னேற்றம் கண்டு வருகின்றோம்." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடற்கல்வி இயக்குநரால் பெருமை பெற்றது கரூர் அரசு கலைக்கல்லூரி.