Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை" - உண்மையை உடைத்த பிரியங்கா சோப்ரா!

, வியாழன், 30 மார்ச் 2023 (09:18 IST)
இந்தியாவில் முக்கிய நடிகையாக வலம்வந்த பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் அவர், ”பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் சமாளிக்க முடியவில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
 
அவருடைய இந்த வார்த்தைகள் பாலிவுட் சினிமாவில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இதுகுறித்து பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறிவருகின்றனர். குறிப்பாக நடிகை கங்கனா ரனாவத், “ஒரு சிறந்த நடிகையை பாலிவுட்டிலிருந்து ஒதுக்கி வைத்ததற்கு கரண் ஜோஹர்தான் காரணம்” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா, 2002ஆம் ஆண்டு தமிழில் எடுக்கப்பட்ட ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து பாலிவுட்டிற்கு சென்ற அவர், ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். ஃபேஷன், பர்ஃபி, பாஜிராவ் மஸ்தானி என பல முக்கிய திரைப்படங்களில் நடித்தார். அதேசமயம் அவர் இசைத்துறையிலும் கவனம் செலுத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின் ஹாலிவுட்டிற்கு சென்ற அவர், பல கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றதுடன், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவிலேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.
 
பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரியங்கா பேசியது என்ன?
டாக்ஸ் ஷெப்பர்ட் மற்றும் மோனிகா பாட்மன் என்னும் அமெரிக்க நடிகர்களால் “Armchair expert” என்னும் பாட்காஸ்ட் நிகழ்ச்சி வார்ந்தோறும் நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் மிக பிரபலமான இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திரை நட்சத்திரங்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள் கடந்த வாரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, பாலிவுட் சினிமாவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
webdunia
பாட்காஸ்ட்டில் பேசிய அவர், “நான் பாலிவுட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன். அங்கிருந்தவர்கள் யாரும் எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு தரவில்லை. அங்கிருக்கும் சிலருடன் எனக்கு பிரச்னைகள் இருந்தன. இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்கும் அளவிற்கு அப்போது எனக்கு திறன் இல்லை. அங்கு நடந்த அரசியல்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை, நான் சோர்வடைந்துவிட்டேன். எனக்கு ஓய்வு தேவைப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
 
“நான் ஏன் அமெரிக்காவில் வசிப்பதற்கும், அங்கேயே தொடர்ந்து வேலை செய்வதற்கும் ஆர்வம் காட்டுகிறேன் என்பது குறித்து நான் கூறப்போகிறேன். அமெரிக்காவில் இருந்துகொண்டு இதுகுறித்து உங்களுடன் உரையாடுவதை நான் பாதுகாப்பாக உணர்கிறேன்” எனவும் அவர் டாக்ஸ் ஷெப்பர்டிம் குறிப்பிட்டார்.
 
தொடர்ந்து பேசிய அவர், “என்னுடைய மேலாளர் அஞ்சுலா ஆச்சார்யா என்னை அழைத்து, அமெரிக்காவில் உங்களது இசை வாழ்க்கையை தொடர்வதற்கு ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். பாலிவுட்டிலிருந்து ஒரு இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் நினைத்துக்கொண்டிருந்த காலம் அது. எனவே பாலிவுட்டை விட்டுவிட்டு, வேறு ஒரு உலகத்திற்கு செல்ல வேண்டுமென முடிவு செய்தேன். அதனால் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
 
“ஹாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு கிடைப்பதை நினைத்தும், நான் அமெரிக்காவிற்கு செல்லப்போகிறேன் என்பதை நினைத்தும் நான் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். ஹாலிவுட் இசைத்துறையில் எனது பயணத்தைத் துவங்கி, அப்படியே படங்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். இங்கு எனக்கு அமைந்த வாய்ப்புகள் நல்ல அனுபவங்களை கொடுத்துள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
ஹாலிவுட்டில் நுழைந்த பிரியங்கா முதலில் இசையிலும், பாடல்களிலும் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் ஹாலிவுட் படங்களிலும், தொடர்களிலும் நடிக்க துவங்கினார். குறிப்பாக குவாண்டிகோ தொடரில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது, பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் பயணத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது. அதனை தொடர்ந்து பே வாட்ச், மேட்ரிக்ஸ் ரெவல்யூசன்ஸ் போன்ற படங்களிலும் அவர் நடித்தார். குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு இந்தியாவை கதைகளமாக வைத்து எடுக்கப்பட்ட `ஒயிட் டைகர்` என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.
 
கரண்ஜோகரை சாடும் கங்கனா
webdunia
 
“Armchair expert” பாட்காஸ்ட்டில் பிரியங்கா தெரிவித்த கருத்துக்களுக்கு, பாலிவுட் நட்சத்திரங்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
 
இதுகுறித்து பேசியிருக்கும் நடிகை கங்கனா ரனாவத், ‘பிரியங்காவின் இந்த நிலைக்கு கரண் ஜோகர்தான் காரணம்’ என கூறியுள்ளார்.
 
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
 
“பாலிவுட்டில் தன்னை அனைவரும் ஒதுக்கி வைத்தது குறித்து பிரியங்கா பேசியுள்ளார். சுயமாக தன்னுடைய வாழ்வில் முன்னேறி வந்த ஒரு பெண், இந்தியாவை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது இந்த நிலைக்கு கரண் ஜோஹர்தான் காரணமென அனைவருக்கும் தெரியும்.
 
ஷாருக்கானுடன் அவருக்கு இருந்த நட்பின் காரணமாகவும், பாலிவுட்டின் சில மாஃபியா கும்பல்களாலும் பல பிரச்னைகளை அவர் சந்திக்க வேண்டியிருந்தது” என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார்.
 
கங்கனா ரனாவத்தின் ட்விட்டை பகிர்ந்திருக்கும் நடிகை மீரா சோப்ரா, ”பிரியங்கா சோப்ராவின் இந்த மிகப்பெரும் வெற்றி, அவருக்கு எதிராக செயல்பட்டவர்களின் முகத்தில் ஓங்கி அறைந்தது போல் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கரண் ஜோஹர், பாலிவுட்டில் வாரிசு நடிகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வருகிறார் என்றும் வெளியாட்களின் வளர்ச்சிக்கு அவர் முட்டுக் கட்டையாக உள்ளார் என்றும் கங்கனா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில்தான் பிரியங்காவின் கூற்று வெளியான பிறகு கரண் ஜோஹர் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார் கங்கனா.
 
தற்போது பிரியங்கா சோப்ராவின் ‘சிடாடெல்’ என்ற ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர் வெளிவரயிருக்கிறது. அதேபோல் இயக்குனர் ஃபர்ஹான் அக்தர் படத்தில் பிரியங்கா ஒப்பந்தம் ஆகியிருப்பதன் மூலம், பாலிவுட்டில் மீண்டும் அவர் கால்பதிக்கவிருக்கிறார் என கூறப்பட்டு வருகிறது. 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி கீழ் பெர்த் கேட்டு அலையத் தேவையில்லை! - முதியவர்கள், பெண்களுக்கு ரயில்வே அசத்தல் ஏற்பாடு!