Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தம்?

ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தம்?

Arun Prasath

, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (18:57 IST)
1948இல் பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராக இருந்த ஹபீப் இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன் வங்கிக் கணக்கில் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாமின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த நவாப் மொயின் நவாஸ் ஜங் என்பவரால் பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு மில்லியன் பவுண்டுகள் தற்போது 35 மில்லியன் பவுண்டுகளாக வளர்ந்துள்ளது. அது இன்னமும் கூட ரஹிம்தூலாவின் நாட்வெஸ்ட் வங்கி கணக்கில்தான் இருந்து வருகிறது.

இவ்வளவு பெரிய தொகையாக வளர்ந்துள்ள அந்த பணப்பரிமாற்றத்துக்கு நிஜாம் மற்றும் பாகிஸ்தானின் வாரிசுகள் காலங்காலமாக சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நீண்டகாலமாக இந்த வழக்கை விசாரித்து வரும், நீதிபதி மார்கஸ் ஸ்மித் தனது தீர்ப்பை அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் லண்டன் ராயல் நீதிமன்றத்தில் அறிவிக்க உள்ளார்.

இந்நிலையில், நிஜாம் குடும்பத்தின் வாரிசுகளுக்கும், பாகிஸ்தான் தரப்புக்கும் இடையே பல்லாண்டு காலமாக நீடித்து வரும் இந்த பணப்பரிமாற்றத்தின் வரலாற்றுப் பின்னணியை விளக்குகிறார் பிபிசியின் தெற்காசிய செய்தியாளர் ககன் சபர்வால்.

1948ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி வரை இது நிஜாம் பேரரசின் ஒரு சுதேச அரசாகவே இருந்தது. அதன் பிறகு, 'ஆபரேஷன் போலோ' எனப்படும் இந்திய ராணுவ நடவடிக்கைக்கு பிறகே ஹைதராபாத் இந்திய யூனியனுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

இந்த ஒரு மில்லியன் பவுண்டுகளின் கதையானது, இந்திய யூனியனுடன் ஹைதராபாத் இணைக்கப்பட்ட காலத்திலிருந்து துவங்குகிறது.
webdunia

பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில், உலகின் மிகப் பெரிய பணக்காரராக விளங்கியவராக கருதப்படும் நவாப் மிர் உஸ்மான் அலி கான் சித்திக், அசாப் சான் VII என்பவரின் ஆட்சியின் கீழ் ஹைதராபாத் இருந்தது.
'ஆபரேஷன் போலோ' நடவடிக்கையின் கீழ், இந்தியாவுடன் ஹைதராபாத் இணைக்கப்பட்ட அந்த சமயத்தில் ஹைதராபாத்தின் ஏழாவது மற்றும் கடைசி நிஜாமாக அவர் விளங்கினார்.

ஆபரேஷன் போலோ நடவடிக்கையின்போது, தங்களது அரசின் வசம் உள்ள ஒரு மில்லியன் பவுண்டுகளை பாதுகாப்பாக வைக்கும் எண்ணத்தில், அப்போது நிதி அமைச்சராக இருந்த நவாப் மொயின் நவாஸ் ஜங், அதை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஹபீப் இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
webdunia

அந்த பணப்பரிமாற்றம்தான் தற்போது நடந்து வரும் மிக நீண்டகால பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது.

ஏழாவது நிஜாமின் பேரன்களில் ஒருவரான இளவரசர் முகார்ரம் ஜா VIII சார்பில் இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள, விதர்ஸ் வேர்ல்ட்வைடு எனும் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த பால் ஹெவிட் கருத்துப்படி, இந்த வழக்கின் வரலாறு இவ்வாறு செல்கிறது:
webdunia

"தனது பணம் பாகிஸ்தானுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதை அறிந்தவுடனேயே, ஏழாவது நிஜாம் உடனடியாக பணத்தை திரும்ப வழங்குமாறு பாகிஸ்தானிடம் கேட்டார். ஆனால், பணத்தை திரும்ப அளிப்பதற்கு மறுப்புத் தெரிவித்த ரஹிம்தூலா, அது தற்போது பாகிஸ்தானுக்கு சொந்தமான பணம் என்று தெரிவித்தார்.

இதுதான் இருதரப்பினருக்குமிடையேயான நீண்டகால சட்டப்போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது. பாகிஸ்தானின் நிலைப்பாட்டை எதிர்த்து, நிஜாம் தரப்பில் 1954ஆம் ஆண்டு பிரிட்டனின் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் வெற்றிபெற, மேல் முறையீட்டு நீதிமன்றத்தை நாடிய நிஜாம் தரப்பு அதில் வெற்றிபெற்றது. அந்த தீர்ப்பை எதிர்த்து, அப்போது பிரிட்டனின் உட்சபட்ச நீதிமன்றமாக கருதப்பட்ட ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் பாகிஸ்தான் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சாதகமாக, அதாவது இறையாண்மையுள்ள நாடான பாகிஸ்தானை எதிர்த்து நிஜாம் தரப்பு வழக்கு தொடர முடியாது என்று தீர்ப்பு வெளிவந்தது. இருப்பினும், அந்த நீதிமன்றம் பாகிஸ்தானின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு மில்லியன் பவுண்டு பணத்தை முடக்கியது.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்ட நாட்வெஸ்ட் வங்கி நிர்வாகம், இந்த பணப்பரிமாற்றத்தோடு தொடர்புடைய இருதரப்பினரில் யாருக்கு இது சொந்தமாகும் என்ற கேள்விக்கு சட்டரீதியிலான பதில் கிடைக்கும் வரை, அதை யாருக்கும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் நடந்தது முதல் இப்போது வரையிலான 60 ஆண்டுகாலத்தில், அந்த பணத்தின் மதிப்பு, வட்டியுடன் சேர்த்து 35 மில்லியன் பவுண்டுகளாக பல்கி பெருகியுள்ளது.

இடைப்பட்ட காலத்தில், இந்த விவகாரத்தில் உடன்பாட்டை எட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை.
இந்த பணப்பரிமாற்றம் செய்யப்பட்டபோது, ஆட்சியில் இருந்த ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம் 1967இல் உயிரிழந்ததையடுத்து, அவரது வழித்தோன்றல்கள் அந்த பணத்தை பாகிஸ்தானிடம் இருந்து பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

2013ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் வங்கிக்கு எதிராக பாகிஸ்தான் சார்பில் வழக்கு தொடரப்பட்ட சமயத்தில்தான் தற்போது நிஜாம் தரப்பிற்காக வாதாடும் பால் ஹெவிட் முதல் முறையாக இந்த வழக்கில் இணைந்தார்.
அப்போது, நிஜாமின் இரண்டு வாரிசுகள் மட்டுமல்ல, மூன்றாவதாக இந்திய அரசாங்கத்தையும் நாட்வெஸ்ட் வங்கி அணுகியது.

இந்த பணத்திற்கு ஒரு கட்டத்தில் உரிமை கோர ஆரம்பித்த இந்திய அரசாங்கத்துடன், நிஜாமின் வாரிசுகளான சகோதரர்கள் சமீபத்தில் கைகோர்த்துள்ளதாக பால் ஹெவிட் கூறுகிறார்.

நிஜாமின் வாரிசுகளுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த அதிகாரபூர்வ ஆவணம் எதுவும் இல்லை.
இதுகுறித்து நிஜாமின் வாரிசுகளிடம் பேசுவதற்கு பிபிசி முற்பட்டபோது, அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

ஆபரேஷன் போலோ'வின்போது தங்களது வசம் இருந்த பணத்தை பாதுகாப்பதற்காகவே பாகிஸ்தானிடம் பணத்தை அளித்ததாக நிஜாம் தரப்பு வாதிடுகிறது. ஆனால், 1948இல் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட சமயத்தில், தங்களுக்கு பாகிஸ்தான் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏழாவது நிஜாம் பரிசாக வழங்கிய தொகையே இது என்று பாகிஸ்தான் தரப்பு கூறுகிறது.

"1947-1948களில் ஹைதராபாத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தாங்கள் அனுப்பிய படைகளுக்காக வழங்கப்பட்ட தொகையே இந்த ஒரு மில்லியன் பவுண்டு என்ற புதியதொரு வாதத்தை 2016இல் பாகிஸ்தான் முன்வைத்தது" என்று பால் ஹெவிட் கூறுகிறார்.

இந்த வழக்கில் பாகிஸ்தான் சார்பில் வாதிட்டு வரும் வழக்கறிஞரான காவர் குரேஷி கியூசி, இந்த வழக்கு தொடர்பான எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று கூறினார்.

பாகிஸ்தான் முன்வைக்கும் வாதம் தொடர்பான ஆவணத்தின் நகல் பிபிசிக்கு கிடைத்தது. அதில், "ஏழாவது நிஜாமுக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவுக்கும், இந்தியாவின் கைகளில் தங்களது பணம் சிக்குவதை தவிர்க்கும் வகையிலும் ஹைதராபாத், ரஹிம்தூலாவின் வங்கிக் கணக்கில் அந்த பணம் செலுத்தப்பட்டது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

"இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக, ஹைதராபாத் முன்னெடுத்த தற்காப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக, ஹைதராபாத்திற்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ஏழாவது நிஜாமிற்கு பாகிஸ்தான் உதவியது."

1948ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதியிலிருந்து இந்த பணம் ரஹிம்தூலாவின் வங்கிக் கணக்கில் இருந்து வருவதாக அந்த ஆவணம் மேலும் கூறுகிறது.

பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதற்கான காரணம் குறித்து இரண்டு தரப்பினருக்குமிடையே ஏதாவது ஆவணம் உள்ளதா என்று பாலிடம் கேட்டபோது, "தனக்கு தெரியாமலேயே இந்த பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக ஏழாவது நிஜாம் வாதிட்டதற்கான சான்றுகள் உள்ளன" என்று கூறுகிறார்.

தனது வாழ்நாளில் இந்த பணம் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை அறிந்த ஏழாவது நிஜாம், இதை நிர்வகிப்பதற்கு அறங்காவலரையும், வாரிசுகளின் விவரங்களையும் அறிவித்ததாக பால் மேலும் கூறுகிறார்.
இந்த விவகாரம் குறித்து டெக்கான் ஹெரிடேஜ் சொசைட்டியின் தலைவர் முஹம்மத் சபியுல்லாவிடம் பேசினார் பிபிசி தெலுங்கு சேவையின் செய்தியாளர் தீப்தி பத்தினி.

"1948ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-17ஆம் தேதிக்கு இடையில், ஹைதராபாத்தை கைப்பற்றும் நோக்கில் இந்திய ராணுவம் ஆபரேஷன் போலோ எனும் பெயரில் படையெடுப்பை நடத்தியது. சுமார் 40,000 இந்திய ராணுவ வீரர்கள் இந்த படையெடுப்பில் ஈடுபட்டனர். அதையடுத்து போர் நிறுத்த அறிவிப்பை செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வெளியிட்ட ஹைதராபாத், இந்திய யூனியனிடம் சரணடைந்தது" என்று அவர் கூறுகிறார்.
webdunia

1948-ம் ஆண்டு பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு மில்லியன் பவுண்டு தற்போது 35 மில்லியன் பவுண்டுகளாக, அதாவது சுமார் 350 கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது என்றும் அதை இந்த விவகாரத்துடன் தொடர்புடைய இந்திய அரசு, நிஜாமின் வாரிசுகள் மற்றும் பாகிஸ்தானுக்கு சரிசமமாக பங்கிட்டு கொடுப்பதே சரியான மற்றும் மூன்று தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவாக இருக்குமென்று சபியுல்லா கூறுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொம்மை நாய்க்குட்டியை தூக்கிக் கொஞ்சிய நிஜ நாய் : வைரலாகும் வீடியோ