Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'இலங்கையில் மனித உரிமை மீறல்கள்' - பயிற்சியை நிறுத்த ஸ்காட்லாந்து போலீஸ் முடிவு

'இலங்கையில் மனித உரிமை மீறல்கள்' - பயிற்சியை நிறுத்த ஸ்காட்லாந்து போலீஸ் முடிவு
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (13:05 IST)
இலங்கையில் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால், இலங்கை காவல்துறைக்கு அளித்து வரும் பயிற்சிகளை முடித்துக்கொள்ள இருப்பதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் இந்தப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

இலங்கை காவல்துறைக்கு ஸ்காட்லாந்து காவல்துறை தொடர்ந்து பயிற்சியளித்து வருவதை எதிர்த்து மனித உரிமைகளுக்கான பிரசாகர்கள் எதிர்ப்பு வெளியிட்டபின் இப்பயிற்சி இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து இடையிலான பயிற்சி ஒப்பந்தம் வரும் மார்ச் மாதம் முடிவடையவுள்ள நிலையில் அது மீண்டும் புதுப்பிக்கப்படாது என்று ஸ்காட்லாந்து காவலர்களுக்கான தலைவர் (Chief Constable) ஐயான் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்தப் பயிற்சி சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டது என்று ஸ்காட்லாந்து காவல் ஆணையத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றங்கள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் கையாள்வது தொடர்பாக இலங்கை காவல்துறைக்கு ஸ்காட்லாந்து காவல்துறை பயிற்சி அளித்து வந்தது. இதற்காக ஸ்காட்லாந்து காவல் அதிகாரிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு வந்தனர்.

இந்த ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்கும் நடவடிக்கைகள் தங்கள் தரப்பில் எடுக்கப்படாது என்று இலங்கை அரசிடம் தெரிவிக்குமாறு கொழும்பில் உள்ள பிரிட்டன் உயர் ஆணையத்திடம் ஸ்காட்லாந்து காவல்துறை கடிதம் வாயிலாகக் கூறியுள்ளது.

பிரிட்டன் வெளியுறவுத் துறையின் அறிக்கை

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மோசமடையத் தொடங்கியது என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் இலங்கை காவல் படையினரால் கண்காணிக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. பயங்கவரவாதத் தடைச் சட்டத்தின்கீழ், முறையான காரணமின்றி மேற்கொள்ளப்படும் கைதுகள் அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

''தீவிரவாத சிந்தனைகள் உடையவர்கள்'' என்று இலங்கை அரசு கருதுபவர்களைக் கைது செய்து, ''சீர்திருத்த'' மையங்களுக்கு அனுப்ப வழிவகை செய்ய இலங்கை அரசு கொண்டு வந்த புதிய விதிமுறைகள் குறித்தும் அந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனித உரிமைகளை மேம்படுத்தவும் செயல்படுத்தவும் உலகெங்கிலும் உள்ள காவல் சேவைகளின் வளர்ச்சிக்கு உதவ ஸ்காட்லாந்து காவல்துறை உறுதிபூண்டுள்ளதாக ஐயான் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை: சாலைகளில் வெள்ளநீர்!