Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் பங்களிப்பு எப்படி இருக்கும்?

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (22:42 IST)
ஐசிசியின் டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியிருக்கும் நிலையில், இத்தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் மெல்போர்ன் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

 
இது, இந்தத் தொடரில் இரு அணிகளுக்கும் முதல்போட்டி. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்பே வெறும் 10 நிமிடங்களில் இணையத்தில் விற்றுத் தீர்ந்தன.

 
இந்த மைதானத்தில் 90,000 பார்வையாளர்கள் அமர முடியும். இவ்வளவு வேகத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது மைதானத்தில் பணியாற்றும் நபர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது.

 
இரு அணிகளின் செயல்பாடு எப்படி?

 
இந்தியாவின் இரு முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாடவில்லை. டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் இந்தாண்டு செயல்பாடு சிறப்பாகவே உள்ளது.

 
இந்தாண்டில் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, 23 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.
 

 
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை, அந்த அணி கடந்த மூன்று ஆண்டுகளாக பாபர் ஆசம் தலைமையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. டி20 போட்டிகளில் அந்த அணியின் வெற்றி-தோல்வி அளவு 36-18 என்ற கணக்கில் உள்ளது.

 
இரு அணிகளும் ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக 2015ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் எதிர்கொண்டன. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 107 ரன்கள் குவித்தார். இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

 
ஆனால், இரு அணிகளும் இந்தாண்டு இரண்டு டி20 போட்டிகளில் மோதின. அதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றன.

 
இந்திய அணியின் பலம் என்ன?
 
இந்தியாவின் பலம் பேட்டிங் வரிசைதான் என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும் விமர்சகருமான சாரதா.
.
 
"கே.எல். ராகுல் பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாக ஆடி இருக்கிறார். சூர்ய குமார் யாதவும் விராட் கோலியும் பார்மில் இருப்பது இந்தியாவுக்குச் சாதகமான அம்சம். சூர்ய குமார் யாதவின் ஸ்ட்ரைக் ரேட் குறைந்தது 140-க்கும் அதிகமாவே இருக்கிறது. ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் ஃபினிஷர் பணியை தினேஷ் கார்த்திக்கும், ஹர்திக் பாண்ட்யாவும் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் "
 
 
 
ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டிருந்தாலும். நீண்ட காலக் காத்திருப்புக்குப் பிறகு விராட் கோலி சதம் அடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது அவர் பார்முக்குத் திரும்பியதை உணர்த்தும் விதமாகவும் அமைந்திருக்கிறது. உலகக் கோப்பை போட்டிகளிலும் விராட் கோலியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
 
"விராட் கோலி இரட்டைப் பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கும். ஒன்று அதிரடி ஆட்டம், மற்றொன்று பாதுகாப்பு ஆட்டம். அவர் ஆட்டத்தின் எந்த ஓவரில் களமிறங்குகிறார் என்பதைப் பொறுத்து அந்தப் பங்களிப்பைத் தீர்மானிக்கலாம். பேட்டிங் நுட்பத்தில் தேர்ந்தவர் என்பதால் இந்த வகையில் அவர் இந்தியாவுக்கு உதவுவார்" என்கிறார் சாரதா.
 
 
இந்திய அணியைப் பொறுத்தவரை தற்போதைய புள்ளி விவரங்களின் அடிப்படையில் பாகிஸ்தானை விட பலமான அணியாகவே கருதப்பட்டாலும். சில பலவீனங்களையும் கொண்டிருக்கிறது.

 
பும்ரா இந்திய அணியில் இல்லாதது மிகப் பெரிய குறை என்கிறார் சாரதா. "ஷமி பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசினாலும். வரும் போட்டிகளில் டெத் ஓவர்களில் எப்படிப் பந்துவீசுவார் என்பது முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறும் "

 
ஆஸ்திரேலிய மைதானங்களில் ஸ்விங் பந்துவீச்சு பலனளிக்கவில்லை என்று இதுவரை நடந்திருக்கும் போட்டிகளைக் கொண்டு தீர்மானத்துக்கு வரமுடிகிறது. அதனால் இந்தியா ஸ்விங் பந்துவீச்சை மட்டுமே நம்பியிருக்க முடியாது
 
 
"புவனேஸ்வர் குமார் ஸ்விங்கை அதிகம் பயன்படுத்தக்கூடியவர் என்பவர். அவரை இந்திய அணி கவனமாகப் பயன்படுத்த வேண்டியிருக்கும்"

 
பாகிஸ்தான் அணியின் பலம் என்ன?


 
பாகிஸ்தான் அணியின் இப்போதைய பலம் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள்தான். காயத்தில் இருந்து அணிக்குத் திரும்பியிருக்கும் ஷாகின் ஷா அப்ரிடி அந்த அணிக்கு பெருமளவு உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
"ஆஸ்திரேலிய விக்கெட்டுகளில் ஸ்விங் பந்துவீச்சு பயன்படவில்லை என்றாலும் வேகப் பந்துவீச்சில் பவுன்சர்கள் மூலமாக திணறடிக்க முடியும். இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்" சாரதா.
 
 
ஆனால், ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம், ஞாயிற்றுக்கிழமை கனமழைக்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளதால் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
 
மெல்போர்ன் நகரில் வெள்ளிக்கிழமை இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. இன்று காலையும் அதே நிலை தொடர்கிறது.
 
எனினும், வெள்ளிக்கிழமை பிற்பகல் மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் சிறுதூரல் மட்டுமே இருந்தது. அதனால், இரு அணி வீரர்களுமே வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
 
விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபடுவதை பயிற்சியாளர் ட்ராவிட் மேற்பார்வை செய்தார். மாலை நேரத்தில் பயிற்சியைத் தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள், தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
 
 
தொடரின் லீக் போட்டிகள் பாதிக்கப்பட்டால் அந்தப் போட்டியை மற்றொரு நாளில் நடத்த கூடுதல் நாட்கள் திட்டமிடப்படவில்லை. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு மட்டுமே அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
 
வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளபடி, ஞாயிறு பிற்பகல் முதல் 10 முதல் 25 மில்லிமீட்டர் மழை தொடர்ந்து பெய்தால், இரு அணிகளும் ஐந்து ஓவர்கள்கூட பந்து வீசுவது கடினம். எனவே போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

 
போட்டியில் வென்றால் இரு புள்ளிகள் கிடைக்கும் என்பதால், இது இரு அணிகளுக்குமே பாதிப்பான விஷயம். மேலும், பி பிரிவில் உள்ள பிற அணிகளுக்கு இது சாதகமாக அமைந்துவிடும்.

 
பாகிஸ்தான் தவிர்த்து, தென்ஆப்ரிக்கா. பங்களாதேஷ், ஜிம்பாவே ஆகிய அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது.

 
தொடரின் முதல் சுற்றிலேயே முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை அயர்லாந்து அணி வீழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments