Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளத்தை உறிஞ்சும் சீனாவின் 'ஸ்பாஞ்ச் நகரம்' கட்டமைக்கப்படுவது எப்படி?

வெள்ளத்தை உறிஞ்சும் சீனாவின் 'ஸ்பாஞ்ச் நகரம்' கட்டமைக்கப்படுவது எப்படி?
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:06 IST)
ஆற்றில் மூழ்கி கிட்டத்தட்ட இறந்து போகவிருந்த நாள் யூ கோங்ஜியனுக்கு நினைவிருக்கிறது.

மழையால் கரைபுரண்டிருந்த வெள்ளை மணல் ஆறு, சீனாவில் உள்ள யூ-வின் நெல் பயிரிட்டிருந்த நிலங்களை மூழ்கடித்தது. அப்போது யூவுக்கு வயது 10. கரைபுரண்ட ஆற்றைக் காண அதன் கரைக்கு ஓடினார்.
 
திடீரென அவரது கால்களுக்குக் கீழே இருந்த நிலம் சரிந்தது. வெள்ள நீர் அவரை நோக்கி வந்தது. நொடியில் அவரை இழுத்துச் சென்றது. ஆனால் அலரிச் செடிகளும், நாணல்களும் நிறைந்திருந்த கரைகள் ஆற்றின் ஓட்டத்தை மெதுவாக்கின. செடிகளைப் பிடித்து இழுத்தார் சிறுவனாக இருந்த யூ. பின்னர் கரையேறித் தப்பித்தார்.
 
"ஆறு இன்று இருப்பது போல், கான்கிரீட் வெள்ளத் தடுப்புச் சுவர்களால் அடக்கப்பட்டிருந்தால் நான் நிச்சயமாக மூழ்கியிருப்பேன் " என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
 
அது அவரது வாழ்க்கையை மட்டுமல்ல, மற்ற சீனாவையும் கட்டமைக்கும் ஒரு தீர்க்கமான தருணமாக மாறியது.
 
இப்போது யூ கோங்ஜியான் வளர்ந்துவிட்டார். சீனாவின் மிக முக்கியமான நகர்ப்புற வடிவமைப்பு சிந்தனையாளர்களில் ஒருவர் அவர். மதிப்புமிக்க பீக்கிங் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை கல்லூரியின் தலைவர். ஏராளமான சீன நகரங்களில் வெள்ளத்தை நிர்வகிப்பதற்கான ஸ்பாஞ்ச் நகரக் கருத்துருவின் பின்னணியில் இருப்பவர்.
 
மற்ற இடங்களுக்கும் இந்த யோசனை பொருந்தும் என்று அவர் நம்புகிறார். ஆனால் பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தீவிர வெள்ளத்தின் போது, ​இதுபோன்ற ஸ்பாஞ்ச் நகரங்கள் உண்மையிலேயே தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வியை சிலர் எழுப்புகிறார்கள்.
 
'நீருடன் சண்டை வேண்டாம்'
 
ஒரு வெள்ளம் என்பது பயமுறுத்துவதாக இல்லாமல், நாம் அரவணைத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தால் எப்படியிருக்கும்? யூவின் ஸ்பாஞ்ச் நகரத்தின் மையக் கரு இதுதான்.
 
வழக்கமான வெள்ள நீர் மேலாண்மை என்பது குழாய்கள் அல்லது வடிகால்களை உருவாக்குவது, முடிந்தவரை விரைவாக தண்ணீரை வெளியேற்றுவது, அல்லது ஆற்றின் கரைகளை கான்கிரீட் மூலம் பலப்படுத்துவது, அவை நிரம்பி வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வது போன்றவைதான்.
 
ஆனால் யூவின் ஸ்பாஞ்ச் நகரம் அதற்கு நேர் மாறாக இருக்கிறது. மழை நீரை ஆங்காங்கே ஆங்காங்கே ஊறவிட்டு, மேற்பரப்பு ஓட்டத்தை மெதுவாக்க முயல்கிறது. அதாவது பஞ்சு போல வெள்ளத்தை ஆங்காங்கே பூமியை உறிஞ்சவிட வேண்டும். அவ்வளவுதான்!
 
அது மூன்று பகுதிகளாகச் செய்யப்படுகிறது. முதலாவது நீர் ஆதாரங்கள். பல துளைகளைக் கொண்ட ஸ்பாஞ்ச் போல, நகரத்தில் பல குளங்களை ஏற்படுத்தி நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி நடக்கிறது.
 
இரண்டாவது, நீரோடும் பகுதிகள். ஆற்றில் இருந்து வெளியேறும் நீரை நேர் கோட்டில் கொண்டு செல்வதற்குப் பதிலாக வளைந்து நெளிந்த கால்வாய்கள் மூலம் அனுப்புவதால், ஓட்டம் மெதுவாகிறது. அவரது உயிரைக் காப்பாற்றிய நதியைப் போலவே.
 
இதனால் பசுமையான இடங்கள் பெருகும். பூங்காக்கள், விலங்குகளின் வாழ்விடங்களை உருவாக்க முடியும். தாவரங்கள் மூலம் மேற்பரப்பு நீரை சுத்தப்படுத்த முடியும்.
 
மூன்றாவது நீர் சென்று சேரும் இடம். நதியானது ஏரி அல்லது கடலில் சென்று சேருகிறது. இதைச் சுற்றியுள்ள நிலத்தை ஆக்கிரமிக்கக்கூடாது, தாழ்வான பகுதிகளில் கட்டுமானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் யூ.. "நீங்கள் தண்ணீருடன் சண்டையிட முடியாது, நீங்கள் அதை அதன் போக்கிலேயேவிட வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
 
இதே போன்ற கருத்துக்கள் வேறு பகுதிகளில் இருந்தாலும், நகரத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க இயற்கையான செயல்முறைகளைப் பயன்படுத்துவதில் ஸ்பாஞ்ச் நகரம் குறிப்பிடத்தக்கது என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நீடித்த வடிவமைப்பு நிபுணர் நிர்மல் கிஷ்னானி கூறுகிறார்.
 
"இப்போது நமக்கு இயற்கையுடன் பெரிய தொடர்பு இல்லை... ஆனால் இயற்கையின் ஒரு பகுதியாக நம்மைப் பார்ப்பதற்கான வழியைத் தேட வேண்டும் என்பதுதான் இப்போதைய யோசனை"
 
யூவின் பெரும்பாலான கருத்துகளில் பழைய விவசாய நுட்பங்களின் பாதிப்பு இருக்கிறது. பயிர்களுக்காக குளத்தில் நீரைச் சேமிப்பது போன்றவை அதில் அடங்கும். சீனாவின் கிழக்கு கடலோர மாகாணமான ஜெஜியாங்கில் வளரும்போது இவற்றை யூ கற்றுக் கொண்டார்.
 
"பருவமழைக் காலத்தில் கூட யாரும் நீரில் மூழ்க மாட்டார்கள். நாம் தண்ணீருடன் வாழ்ந்தோம். வெள்ளம் வந்தபோது நாம் தண்ணீரை ஏற்றுக் கொண்டோம்" என்கிறார் அவர்.அவர் 17 வயதில் பெய்ஜிங்கிற்குச் சென்றார், அங்கு அவர் நிலவமைப்பு கற்றார். பின்னர் ஹார்வார்டில் வடிவமைப்பு படித்தார்.
 
1997ல் அவர் தாய்நாட்டிற்குத் திரும்பியபோது, ​​சீனா இன்றும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கட்டுமான மோகத்தில் மூழ்கியிருந்தது.
 
இதைக் கண்டு யூவுக்கு திகைப்பு ஏற்பட்டது. "உயிரற்ற உள்கட்டமைப்பு" முறையை அவர் ஏற்கவில்லை. பாரம்பரிய சீன முறைகளின் அடிப்படையில் நகர்ப்புற வடிவமைப்பு தத்துவத்தை உருவாக்கத் தொடங்கினார்.
 
உதாரணமாக, ஸ்பாஞ்ச் நகரங்களைத் தவிர, இயற்கையான வடிமைப்பு அல்லது "பெரிய அடி புரட்சி"க்கு அவர் அழைப்பு விடுக்கிறார். பார்த்துப் பார்த்துச் செதுக்கப்படும் சீர்மிகு நவீனப் பூங்காக்களை எதிர்க்கிறார். பெண்களின் கால்களைக் கட்டும் காலாவதியான சீன நடைமுறையுடன் அதை அவர் ஒப்பிடுகிறார்.
 
சீனாவின் கடலோர நகரங்களும் அதே மாதிரியான காலநிலையைக் கொண்ட பிற நகரங்களும் நீடித்திருக்கும் தன்மை இல்லாத வகையில் வடிமைக்கப்பட்டிருக்கின்றன என்று அவர் கூறுகிறார்.
 
"ஐரோப்பிய நாடுகளில் உருவான நுட்பத்தை பருவமழை கொண்ட காலநிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியாது. மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் அவற்றின் உள்கட்டமைப்பு, நகர்ப்புற மாதிரியை நகலெடுப்பதால் இந்த நகரங்கள் தோல்வியடைகின்றன," என்று அவர் கூறுகிறார்.
 
தொடக்கத்தில் அரசுத் தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்பு வந்தது. முப்பள்ளத்தாக்கு அணை உள்ளிட்ட பெருமைக்குரிய சீனத் திட்டங்களை அவர் விமர்சித்ததால் பலர் எரிச்சலடைந்தனர்.
 
அவரது ஹார்வர்ட் பின்னணியும் மேற்கத்திய நாடுகளில் இருந்து அவருக்குக் கிடைக்கும் பாராட்டுகளும் சேர்ந்ததால் சிலர் அவரைத் துரோகி என்றார்கள், "மேற்கத்திய உளவாளி" என்று குற்றம்சாட்டினார்கள்.
 
இந்தக் குற்றச்சாட்டுகளை நகைப்புடன் அணுகும் யூ, தம்மை பண்பாட்டுப் புரட்சியின் குழந்தை என்று கருதுகிறார்.
 
"நான் ஒரு மேற்கத்தியர் அல்ல, நான் ஒரு சீன பாரம்பரியவாதி," என்று அவர் புன்னகையுடன் கூறுகிறார். "எங்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டு கால அனுபவம் உள்ளது, நீங்கள் புறக்கணிக்க முடியாத தீர்வு எங்களிடம் உள்ளது. நாம் நமது சீன வழிகளைப் பின்பற்ற வேண்டும்."
 
சமீபத்திய ஆண்டுகளில் பெய்ஜிங் மற்றும் வுஹானில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளைத் தொடர்ந்து அவரது கருத்துக்களை ஊடகங்களில் ஒளிபரப்பின.
 
அதற்கு பலன் கிடைத்தது. 2015 ஆம் ஆண்டில், அதிபர் ஜின்பிங்கின் ஒப்புதலைத் தொடர்ந்து, அரசாங்கம் பல மில்லியன் யுவான் திட்டத்தை அறிவித்தது. 2030 வாக்கில், சீனாவின் 80% நகரப் பகுதிகளில் ஸ்பாஞ்ச் நகரத்தின் கூறுகள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 70% மழையை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்ற இலக்குகள் அறிவிக்கப்பட்டன.
 
இது மந்திரத் தோட்டாவா?
உலகெங்கிலும் அதிக மழைப்பொழிவைச் சமாளிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதை விஞ்ஞானிகள் பருவநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். புவி வெப்பமடைதலுடன் வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​அதிக ஈரப்பதம் வளிமண்டலத்தில் ஆவியாகி, கனமழையை ஏற்படுத்துகிறது.
 
"எதிர்காலத்தில், மழைப்பொழிவு முன்பு எதிர்பார்த்ததை விட மிகவும் தீவிரமாகவும் கடுமையாகவும் இருக்கும்" என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் கடுமையான புயல்களுக்கு ஸ்பாஞ்ச் நகரம் உண்மையில் தீர்வாக இருக்குமா? சில நிபுணர்கள் இதில் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
 
"ஸ்பாஞ்ச் நகரங்கள் லேசான அல்லது சிறிய மழைப்பொழிவுகளுக்கு மட்டுமே நல்லது, ஆனால் இப்போது நாம் காணும் மிக மோசமான வானிலையைச் சமாளிக்க வேண்டுமானால், வடிகால், குழாய்கள் போன்ற உள்கட்டமைப்புகளுடன் அதை இணைக்க வேண்டும்" என்று வெள்ள மேலாண்மை நிபுணர் ஃபெய்த் சான் கூறுகிறார்.
 
மக்கள் தொகை அடர்த்தியான நகரங்களுக்கு யூவின் திட்டத்தைச் செயல்படுத்துவது கடினமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
 
கோடிக்கணக்கில் செலவழித்தாலும், சீனாவால் இன்னும் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ள நிகழ்வுகளைச் சமாளிக்க முடியவில்லை. கடந்த கோடை காலத்தில் தொடர்ச்சியான வெள்ளத்தில் 397 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. மதிப்பிடுகிறது.
 
ஆனால் பண்டைய சீன அறிவு தவறாக இருக்க முடியாது என்று யூ வாதிடுகிறார். மேலும் உள்ளூர் அதிகாரிகள் தனது யோசனையை தவறாகவோ அல்லது துண்டு துண்டாகவோ செயல்படுத்தியதால் தோல்விகள் ஏற்பட்டதாக அவர் கருதுகிறார்.
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெங்ஷுவில் ஏற்பட்ட வெள்ளம், ஒரு சிறந்த உதாரணம் என்று அவர் கூறுகிறார். நகரம் அதன் குளங்களுக்கு மேல் நடைபாதை அமைத்ததால், போதுமான தண்ணீரை மேல்நிலையில் சேமிக்க முடியவில்லை என்கிறார் அவர்.
 
ஸ்பாஞ்ச் நகரம் என்ற கருத்துருவை உண்மையிலேயே வேறு நாடுகளிலும் செயல்படுத்த முடியுமா என்பது மற்றொரு கேள்வி.
 
வங்கதேசம், மலேசியா, இந்தோனீசியா போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் இந்த நுட்பத்தால் பயனடையலாம் என்றும், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற சில இடங்கள் இதே போன்ற கருத்துக்களை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன என்றும் யூ கூறுகிறார்.
 
ஆனால் சீனா முழுவதும் ஸ்பாஞ்ச் நகரத்தின் வெற்றிக்கு, அதன் அதிகாரம் குவிந்த மைய அரசாங்கமே காரணம் என்று வாதிடப்படுகிறது. சரியாகச் செய்தால், ஒரு ஸ்பாஞ்ச் நகரத்துக்கு வழக்கமான திட்டங்களைவிட கால் பகுதி மட்டுமே செலவாகும் என்று யூ கூறுகிறார்.
 
வெள்ளத்தை நிர்வகிப்பதற்கு கான்கிரீட் பயன்படுத்துவது "தாகத்தைத் தணிக்க விஷம் குடிப்பது போன்றது... இது ஒரு குறுகிய பார்வை" என்று அவர் கூறுகிறார்.
 
"காலநிலைக்கு ஏற்றவாறு நாம் வாழும் முறையை மாற்ற வேண்டும். அவர்கள் எனது தீர்வைப் பின்பற்றாவிட்டால், அவர்கள் தோல்வியடைவார்கள்." என்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மூடப்பட்டுள்ள 7 சுரங்கப்பாதைகள் எவை எவை?