Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை மகாராஷ்டிராவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது எப்படி?

Webdunia
புதன், 30 மே 2018 (13:17 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது.
 
இப்போது தூத்துக்குடியில் நிகழ்ந்தது எல்லாம் மராட்டிய மாநிலம் ரத்னகிரியில் நடந்து இருக்க வேண்டியவை.
 
ஆனால், இந்த ஆலைக்கான திட்டம் முன்மொழியப்பட்ட தொன்னூறுகளில், கொங்கனி மக்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். அதனால், அந்த நிறுவனத்தை ரத்னகிரியில் தொடங்க முடியவில்லை.
 
26 ஆண்டுகளுக்கு முன்பு
 
ஸ்டெர்லைட் நிறுவனம் கொங்கன் பகுதிக்கு 26 ஆண்டுகளுக்கு முன் வந்தது. ஒரு லட்சம் பேருக்கு வேலை தருகிறோம், இந்த நகரத்தை செழுமை அடைய செய்கிறோம் என நிறைய வாக்குறுதிகளை கொடுத்தது.
 
ஸ்டெர்லைட் நிறுவனம், 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி ரத்னகிரி அருகே அந்த நிறுவனத்திற்கு, 20,80,600 சதுர மீட்டர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு தரப்பட்டது. தாமிர உருக்காலை அமைக்க வேண்டும் என்பதுதான் அந்த நிறுவனத்தின் நோக்கம்.
 
ஆனால், இந்த தாமிர உருக்காலையால் சூழலியல் கேடு ஏற்படும் என்று குற்றஞ்சாட்டி, ரத்னகிரி மக்கள், திட்டம் கைவிடப்படும் வரை போராட முடிவு செய்தனர். போராடவும் செய்தனர்.
 
"இந்த திட்டத்தால் எங்கள் ரத்னகிரி நகரம் பாதிக்கப்படும் என்று அஞ்சினோம். அல்போன்ஸா, முந்திரி மற்றும் இங்குள்ள கடற்கரைகள் எல்லாம் எங்கள் பெருமைகள்.குறிப்பாக அல்போன்ஸா மாம்பழத்திற்கென்று உலகளவில் புகழ் இருக்கிறது. அது கெடும் என்று கவலை உற்றோம். எங்களில் ஐந்து பேர் முன் வந்து ஏதேனும் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டோம். எப்படியாவது இதனை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்." என்று தனது நினைவுகளை திரட்டி பிபிசி மராத்தியிடம் பேசுகிறார் சங்கர்ஷ் சமிதியின் செயலாளர் சுதாகர் சவந்த்.
 
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவானது நிலம், நீர், காற்று என அனைத்தையும் மாசாக்குகிறது. இந்த மாசானது மக்களின் உடல் நலத்தையும் பாதிக்கிறது. இதனால் பலர் இறந்திருக்கிறார்கள். அதனால்தான், இந்த ஆலை மூடப்பட வேண்டும் என்கிறோம் என்கிறார்கள் இந்த திட்டத்தை எதிர்க்கும் தூத்துக்குடி மக்கள்.
 
ஸ்டெர்லைட் நிறுவனமோ இந்த குற்றச்சாட்டெல்லாம், ஆதாரம் இல்லாத வீண்பழி என்கிறது. வேதாந்தாவின் துணை நிறுவனம்தான் ஸ்டெர்லைட், மக்கள் விரும்பினால் இந்த ஆலையை தொடர்ந்து இயக்க விரும்புவதாக டிவிட்டரில் கூறி உள்ளார் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால்.
 
"சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சூழலியல் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி உள்ளது வேதாந்தா நிறுவனம். மத்திய அரசு மற்றும் மாநில அரசு விதித்துள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுகிறது. உச்ச நீதிமன்றமே ஸ்டெர்லைட் நிறுவனத்தால் நிலத்தடி நீர் மாசாகவில்லை என்று கூறி உள்ளது. நிறுவனத்தின் கழிவுகள் அதற்காக வடிவமைக்கப்பட்ட இடத்தில்தான் வெளியேற்றப்படுகிறது" என்கிறார் அனில் அகர்வால்.
 
மீண்டும் ரத்னகிரி போராட்ட களத்திற்கே செல்வோம். ரத்னகிரியில் இந்த திட்டம் செயல்பட இருக்கிறது என்று தெரிந்த உடனே, 1993 ஆம் ஆண்டு, ஏறத்தாழ 50,000 பேர் திரண்டு மாபெரும் பேரணியை நடத்தினார்கள். அவர்களது கோரிக்கை இந்த திட்டம் வேறு ஏதாவது ஒரு பகுதிக்கு மாற்றப்பட வேண்டும் என்பதுதான். இந்தப் புள்ளியிலிருந்து போராட்டம் விரிவடைய தொடங்கியது.
 
சுதாகர், "நானும், கிரண் சல்வி, சந்தோஷ் சவந்த், அஷொல் லஞ்சேகர், தீபக் ராத் உள்ளிட்டோரும் இந்த போராட்டத்தை எப்படி எடுத்து செல்வது என்று விவாதித்தோம். அதன்பின் 'ரத்னகிரி பச்சோ ஸ்டெர்லைட் ஹத்ஹோ சங்கர்ஷ் சமிதி' போராட்டத்தின் தலைவராக கேதன் காக் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்." என்கிறார்.
 
நாங்கள் ஒரு பக்கம் தீவிரமாக போராடிக் கொண்டிருக்க, ஸ்டெர்லைட் தங்களது நிறுவனத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கியது. அதுமட்டுமல்லாமல், நிறுவனத்தை தொடங்குவதற்கு தேவையான பொருட்களையும் உள்ளே எடுத்து வர தொடங்கியது" என்கிறார் சங்கர்ஷ் சமிதி போராட்டக் குழுவை சேர்ந்த கிரண் சல்வி.
 
மேலும் அவர், "எங்களுக்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. இந்த நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட இயந்திரம் மற்றும் பிற பொருட்கள் எதுவும் தரமான பொருட்கள் அல்ல. 1957 - 1977 ஆம் ஆண்டு வரை சிலியில் இயங்கிய ஒரு தாமிர உருக்காலையின் இயந்திரங்களைதான் ஸ்டெர்லைட் வாங்கி இருக்கிறது என்பது தெரியவந்தது. எப்படியாவது ஸ்டெர்லைட் நிறுவனத்தை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்ற எங்கள் குறிகோளை இந்த தகவல்கள் வலுப்படுத்தின."
 
வெற்றியின் ரகசியம்
 
சங்கர்ஷ் சமிதியின் தலைவர் கேத்தனுக்கு இப்போது 83 வயதாகிறது. அவர்களின் போராட்டத்தின் வெற்றியை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
 
"என்னை தலைவராக அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுத்தபோது, நான் ஒரே ஒரு நிபந்தனையை விதித்தேன். அதாவது நமது போராட்டத்தில் அரசியல் கட்சிகள் பங்கு கொள்ள கூடாது. நாங்கள் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்திய போது, ரத்னகிரி பகுதியில் உள்ள அனைவரின் நம்பிக்கையையும் பெற்றோம்" என்கிறார்.
 
"சிலர் தங்கள் சுயநலத்திற்காக இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். அவர்களை எல்லாம் அடையாளம் கண்டு போராட்டத்திலிருந்து விலக்கி வைத்தோம். இது ரத்னகிரி நகரத்தின் பிரச்சனை மட்டும் அல்ல, இந்த மாவட்டத்தின் பிரச்சனை புரிய வைத்தோம். நாங்கள் மட்டும் அப்போது தீவிரமாக போராடி இருக்கவில்லை என்றால், இப்போது தூத்துக்குடியில் நிகழ்ந்தது, இங்கு ரத்னகிரியில் நிகழ்ந்து இருக்கும்" என்கிறார் கேத்தன்
 
துணை நின்ற பத்திரிகை
 
வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்வீட்டர் என எதுவும் இல்லாத அக்காலத்தில் ஒரு உள்ளூர் பத்திரிகை இந்த போராட்டத்திற்கு துணை நின்றிருக்கிறது.
 
"ரத்னகிரி வரலாற்றிலேயே ஒரு மாபெரும் பேரணியை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒருங்கிணைத்தோம். அந்த சமயத்தில் 'ரத்னகிரி டைம்ஸ்' என்ற உள்ளூர் பத்திரிகைதான் எங்கள் போராட்டத்திற்கு துணை நின்றது."
 
"'ரத்னகிரி டைம்ஸ்' பத்திரிகையின் உரிமையாளர் உல்ஹாஸ் கோசல்கர் போராட்டக்காரர்களின் கரங்களை வலுப்படுத்தியதாக கூறுகிறார் சல்வி.
 
"அரசியல் கட்சிகளை உள்ளே விடாதவரை, நம்மால் போராட முடியும். எங்களுக்கு சூழலியலாளர் ராஷ்மி மயூர் தொழிற்நுட்பம் சார்ந்து பல தகவல்களை அளித்தார். அவர் மட்டும் அந்த தகவல்களை அளிக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் சரியான திசையில் சென்று இருக்காது" என்கிறார் கேத்தன்.
 
சங்கர்ஷ் சமிதி போராட்ட குழுவை சேர்ந்தவர்களை சரத் பவார் சந்தித்து இந்த பிரச்சனை குறித்து விவாதித்தார்.
 
இந்த ஆலைக்கு எதிரான மக்களின் கோபத்தை கண்ட சரத் பவார், இந்த திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
 
இந்த சமயத்தில்தான் மத்திய அரசிலிருந்து திரும்பி மாநில முதல்வராக பொறுப்பு ஏற்று இருந்தார் சரத் பவார்.
 
எங்கள் நிலை மோசமாகி இருக்கும்
 
மக்கள் போராட்டம் தீவிரமடைய, ஜூலை 15, 1993 ஆம் ஆண்டு அரசு இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இப்போது கூட அந்த ஆலையின் கட்டுமானங்களை இங்கு காணலாம்.
அதன் பின், 2010 ஆம் ஆண்டு, மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகம், தாமிர உருக்காலைக்கு பதிலாக வேறு ஏதேனும் தொழிற்சாலையை தொடங்கி கொள்ளலாம் என்று கடிதம் அனுப்பியது. ஆனால், இன்றுவரை அந்த கடிதத்திற்கு ஸ்டெர்லைட் பதில் அளிக்கவில்லை.
 
மீண்டும் ஜுலை 9, 2013 ஆம் ஆண்டு இன்னொரு கடிதத்தை மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகம், தொழில் தொடங்காவிட்டால் மீண்டும் நிலத்தை அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. ஆனல், அதற்கும் ஸ்டெர்லைட் பதில் அளிக்கவில்லை.
 
அதன் பின், ஜூலை 31, 2014 நிலம் தொடர்பாக இன்னொரு நோட்டீஸை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மஹராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகம் அனுப்ப, உடனே நீதிமன்றத்தை அணுகி அதற்கு இடைக்கால தடை வாங்கியது ஸ்டெர்லைட் நிறுவனம்.
 
இப்போது இந்த விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது. மஹராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகம் அளித்த தகவலின்படி, ஸ்டெர்லைட் நிறுவனம் அந்த நிலத்திற்கான வரியை செலுத்தி வருகிறது.
 
"ரத்னகிரி பகுதியின் சாமானிய மக்கள் சரியான நேரத்தில் போராடி ஸ்டெர்லைட் திட்டத்தை முறியடித்து தங்கள் பகுதியிலிருந்து வெளியேற்றினர். அப்போது மட்டும் நாங்கள் போராடாமல், அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளில் வீழ்ந்து இருந்தால், எங்களது நிலை தூத்துக்குடி மக்களின் நிலையைவிட மோசமாக ஆகி இருக்கும்," என்று அன்றைய நிலையையும் இப்போது தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள நிலையையும் ஒப்பிட்டு விளக்குகிறார் கேத்தன்.
 
இது தொடர்பாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விளக்கத்தைப் பெற ஸ்டெர்லைட் அதிகாரிகளை தொடர்பு கொண்டோம். ஆனால், எங்கள் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளித்தால், அதனை பிரசுரிக்க தயாராகவே இருக்கிறோம்.
 
அதே நேரம் ரத்னகிரியில் இயாங்காத ஆலையின் கட்டடங்களை கவனித்துவரும் மிலிந்த் காந்தியை தொடர்பு கொண்டோம். ஆனால், தான் அந்த நிறுவனத்தின் ஊழியர் இல்லை என்றும் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டவர் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments