Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனாவின் இந்த ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது? உலக நாடுகள் பதற்றமடைவது ஏன்?

Advertiesment
China Missile

Prasanth Karthick

, வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (12:37 IST)

கண்டம் தாண்டிய இலக்குகளை நோக்கித் தாக்குதல் நடத்தும் தொலைதூர ஏவுகணைகளை (intercontinental ballistic missile - ICBM) வைத்துச் சோதனை நடத்தியுள்ளதாகக் கூறியிருக்கிறது சீனா. சர்வதேச கடல்பரப்பில் சீனா இத்தகைய சோதனையை மேற்கொண்டது அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கடந்த நாற்பது ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த புதன்கிழமை அன்று (செப்டம்பர் 25) இத்தகைய சோதனையை சீனா மேற்கொண்டுள்ளது. இது ஒரு வழக்கமான சோதனை ஓட்டம் தான் என்று கூறிய சீன அரசு, எந்த ஒரு தனி நாட்டையும் இலக்காக வைத்து இத்தகைய சோதனையை நடத்தவில்லை என்றும் கூறியுள்ளது. தொடர்புடைய நாடுகளுக்கு ஏற்கனவே இது சம்பந்தமான அறிக்கையை சீன அரசு அளித்துவிட்டதாகச் சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

ஆனால், ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஜப்பானும், இது போன்ற அறிக்கை எதையும் தாம் பெறவில்லை என்று கூறியதோடு, சீனாவின் இந்தச் செயலுக்குக் கவலை தெரிவித்துள்ளது.

 

சீனாவின் இந்தச் செயல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிபுணர்கள் சீனாவின் அணு ஆயுதங்களின் திறனை இந்தச் சோதனை ஓட்டம் மேற்கோள்காட்டியுள்ளது என்று கூறுகின்றனர்.

 

'அசாதாரணமான சோதனை'
 

சீனா கடந்த ஆண்டு பாதுகாப்புத் தேவைக்காக அணு ஆயுதக் கிடங்கு ஒன்றை உருவாக்கியதற்கு எதிராக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தச் சூழலில், தற்போது நடந்திருக்கும் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட ICBM ஏவுகணைகள் 5,500கி.மீ., தூரம் பயணித்து இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை எனத் தெரியவந்துள்ளது. இது அமெரிக்காவின் பிராதன பகுதியையும் ஹாவாயையும் தாக்கும் எல்லைக்குள் சீனாவைக் கொண்டு வந்துவிடும் திறனைக் கொண்டதாக உள்ளது.

 

ஆனால் பெய்ஜிங்கில் உள்ள அணு ஆயுதக்கிடங்கானது, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஆயுதக்கிடங்குகளைக் காட்டிலும் அளவில் ஐந்து மடங்கு சிறியது. மேலும் சீனா தன்னுடைய அணு ஆயுதப் பராமரிப்பு தொடர்பாகக் குறிப்பிடும் போது இது வெறும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் பணிகள் என்றே தெரிவித்து வருகிறது.

 

செப்டம்பர் 25-ஆம் தேதி தொலைதூர ஏவுகணை ஒன்று உள்ளூர் நேரப்படி 08:44 மணி அளவில் சோதிக்கப்பட்டது என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது. அந்தச் சோதனை ஓட்டத்தின் போது ஏவப்பட்ட ஏவுகணையின் இலக்கு தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

 

ஆனால், இந்தச் சோதனை ஓட்டம், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பயிற்சியின் ஒரு அங்கமாக வழக்கமாக நடைபெறும் நிகழ்வு தான் என்று சீனாவின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

ஆனால், 1980-களுக்கு பிறகு கடந்த நாற்பது ஆண்டுகளில், தொலைதூர ஏவுகணையை சீனா ஏவியிருப்பது இதுவே முதல்முறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இதற்கு முன்பு இத்தகைய ஏவுகணைகளை சீனாவின் மேற்கே ஜின்ஷியாங் பிராந்தியத்தில் உள்ள தக்லமகான் பாலைவனத்தில் தான் ஏவப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தச் சோதனைகள் அசாதாரணமானவையல்ல. சீனாவுக்கு தான் இது அசாதாரணமானது என்று பிபிசியிடம் கூறுகிறார் ஏவுகணை ஆய்வாளர் அங்கித் பாண்டா.

 

சீனாவில் தற்போது அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும் நிகழ்வுகள் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்று தெரிவிக்கிறார் அவர். சீனாவின் அணுகுமுறையிலும் இத்தகைய மாற்றம் ஏற்பட்டிருப்பதை இந்தச் சோதனை ஓட்டம் உறுதி செய்கிறது என்று கூறுகிறார் அவர்.

 

பதற்றத்தில் உலக நாடுகள்
 

சீனாவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக நாடுகள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ஜப்பான் இது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் தாம் பெறவில்லை என்று கூறியதோடு, இது அதிக கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

இந்தப் பிராந்தியத்தைத் தவறாக மதிப்பிடுவதால் உருவாகும் சிக்கல்களை இது அதிகப்படுத்துகிறது என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது. மேலும் இந்தச் சோதனை ஓட்டத்திற்கான விளக்கத்தை சீனாவிடம் கேட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. இது தேவையற்றது என்றும், கவலை அளிக்கக் கூடிய நிகழ்வு என்றும் நியூசிலாந்து கூறியுள்ளது.

 

சீனா ஒரு அரசியல் செய்தியை அளிப்பதற்காக இதை மேற்கொண்டுள்ளது என்பதை நம்பவில்லை என்று பாண்டா கூறுகிறார். ஆசியாவில் தங்களின் அணு ஆயுத நிலைப்பாட்டை உடனுக்குடன் மாற்றிக் கொள்ளும் அமெரிக்காவுக்கும், இந்தப் பிராந்தியத்திலும் இது ஒரு தெளிவான நினைவூட்டலாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

 

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு ஒரு அழைப்பு மணியாக இந்தச் செயல் இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

சீனாவின் இந்தச் செயல்பாடு, தைவான் தொடர்பான விவகாரங்களில் தலையீடு நிகழும் பட்சத்தில் உங்கள் நாடும் தாக்குதலுக்கு ஆளாகும் பலவீனமான நிலையில் தான் இருக்கிறது என்று செய்தியை அமெரிக்காவுக்குக் கடத்துவதாக இருக்கிறது என்று தென்கொரியாவில் உள்ளா எவா பெண்கள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் லெய்ஃப்-எரிக் ஏஸ்லே கூறுகிறார்.

 

ஆசியாவில் உள்ள அமெரிக்கக் கூட்டணி நாடுகளுக்கு, ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதலை நடத்துவதற்கான திறன் தன்னிடம் இருப்பதை நிரூபிக்க இந்தச் சோதனையை சீனா நடத்தியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

 

இது நடந்திருக்கும் நேரம் தான் முக்கியம் என்று கூறுகிறார் சிங்கப்பூரில் உள்ள ராஜரத்தினம் சர்வதேச விவகாரங்கள் துறை பள்ளியில் ஆராய்ச்சியாளராக இருக்கும் ட்ரூ தாம்சன்.

 

"சீனா தன்னுடைய அறிக்கையில் எந்த நாட்டையும் இலக்காக வைத்து இதனை நடத்தவில்லை என்று கூறுகிறது. ஆனால் இந்தச் சோதனை ஓட்டம் சீனா, மற்றும் ஜப்பான், பிலிப்பைன்ஸ், தைவான் இடையே அதிக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது," என்று கூறுகிறார் அவர்.

 

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு கடந்த ஆண்டு மேம்பட்டு வந்த நிலையில் இந்தப் பிராந்தியத்தில் தன்னுடைய அதிகாரத்தைத் தக்கவைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது சீனா. கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய இடங்களில் தொடர்ந்து சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டினரின் படகுகள் மோதிக்கொள்வது இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த மாதம், சீனாவின் உளவு விமானம் ஒன்று ஜப்பானின் எல்லைக்குள் உலவியதாகக் குற்றம்சாட்டிய ஜப்பான் அந்த நடவடிக்கையை துளியும் ஏற்றுக் கொள்ள இயலாது என்று குற்றம்சாட்டியிருந்தது.

 

500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள சீனா
 

சீனாவுடனான தைவானின் உறவும் இந்தப் பதற்றத்திற்கு மற்றொரு காரணம்.

 

தைவானின் பாதுகாப்பு அமைச்சர் புதன்கிழமை அன்று சீனா நடத்திய சோதனை ஓட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தைவானைச் சுற்றி 23 சீன ராணுவ விமானங்கள் செயல்பட்டு வந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஊடுருவல்களை நியாயப்படுத்தும் வகையில் ‘கிரே ஸோன் வார்ஃபேர்’ என்ற பெயரில் தைவானின் நீர்வழிகள் மற்றும் வான்வெளியில் சீனா தொடர்ச்சியாகக் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பி வருகிறது.

 

தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கியதால் ஜூலையில் சீனா அமெரிக்காவுடனான அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்தது.

 

அமெரிக்காவைக் காட்டிலும் சீனா குறைவாகவே ஆயுதங்களை வைத்திருக்கும் போதும், கடந்த ஆண்டு சீனாவின் ஆயுதங்களை நவீனப்படுத்தும் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.

 

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அலுவலகமான பெண்டகன், சீனாவின் அணு ஆயுத கிடங்களில் 500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அவற்றில் 350 ஆயுதகங்கள் தொலைதூர ஏவுகணைகள் என்றும் மதிப்பிட்டுள்ளது.

 

2030-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,000-ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவும் அமெரிக்காவும் 5,000-க்கும் மேலே இத்தகைய ஆயுதங்களை வைத்துள்ளது.

 

அணு ஆயுதக் கிடங்கை மேற்பார்வையிட்டு வரும் சீனா பாதுகாப்புத்துறையின் ராக்கெட் படையிலும் சர்ச்சைகள் நிலவி வருகின்றன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அந்தப் படையின் இரண்டு தலைவர்கள் பணி இழப்புக்கு காரணமாக அமைந்தன.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்.! "மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல்" - அன்புமணி ராமதாஸ்.!!