Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

56 ஆண்டுக்கு முன் விமான விபத்தில் பலியான இவரது உடல் பனி படர்ந்த இமயமலையில் மீட்கப்பட்டது எப்படி?

Advertiesment
BBC

Prasanth Karthick

, வியாழன், 17 அக்டோபர் 2024 (12:06 IST)

56 ஆண்டுகள், 8 மாத காத்திருப்புகளையும் ஏக்கத்தையும் முடிவுக்கு கொண்டுவந்தது ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு.

 

 

கேரளாவில் பத்தனம்திட்டாவில் அமைந்திருக்கும் காவல்நிலையத்தில் இருந்து காவலர் ஒருவர் தாமஸை போனில் அழைத்து, அவர் அண்ணன் செரியனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.

 

1968-ஆம் ஆண்டு செரியன் உட்பட 102 பேர் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் பயணித்தனர். இமயமலைப் பகுதியில் முதன்முறையாக ராணுவப் பணிக்காக பயணித்தார் 22 வயதான செரியன்.

 

மோசமான காலநிலை காரணமாக அந்த விமானம் விபத்துக்குள்ளானது. ஹிமாச்சல பிரதேசத்தை இந்தியாவின் காஷ்மீருடன் இணைக்கும் ரோஹ்டாங்கை தாண்டிய போது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

 

பல ஆண்டுகளாக அந்த இந்திய விமானப்படை விமானம் ஏ.என்.-12 காணாமல் போன விமானமாகவே பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. அந்த விமானம் என்ன ஆனது என்பது பற்றி யாருக்குமே தெரியவில்லை.

 

2003-ஆம் ஆண்டு மலையேற்றத்திற்கு சென்ற சிலர், அந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரின் உடலை கண்டறிந்தனர். அதன் பிறகு தொடர்ச்சியாக அந்த பகுதியில் தேடுதல் பணியை நிகழ்த்தி வருகிறது ராணுவம். 2019-ஆம் ஆண்டு அந்த விமான விபத்தில் இறந்தவர்களில் 8 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டன.

 

ஏக்கத்துடன் காத்திருந்த பெற்றோர்

சில நாட்களுக்கு முன்பு நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இந்த விமான விபத்து மீண்டும் தலைப்புச் செய்தியானது. அப்போது மீட்கப்பட்ட உடல்களில் செரியனின் உடலும் இருந்தது.

 

செரியனின் உடல் குறித்த தகவல் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவித்த பிறகு, "56 ஆண்டுகளாக மனதை வாட்டிக் கொண்டிருந்த ஒரு அழுத்தம் அன்றைய தினம் தான் நீங்கியது," என்று பிபிசி ஹிந்தியிடம் கூறுகிறார் தாமஸ்.

 

"இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விடமுடிகிறது," என்று கூறினார் அவர்.

 

செரியனின் உடன் பிறந்தவர்கள் 5 பேர். அவர் இரண்டாவதாக பிறந்தவர். அந்த விமான விபத்தில் சிக்கிய போது அவருக்கு வயது வெறும் 22. அவருக்கு வேலை கிடைத்த பிறகு முதன்முறையாக லே நகரில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. அங்கே செல்வதற்காக அந்த விமானத்தில் பயணம் செய்தார் செரியன்.

 

2003-ஆம் ஆண்டு முதல் நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே அந்த காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு செரியனின் பெயர் இறந்தவர்கள் பட்டியலில் வைக்கப்பட்டது.

 

"என்னுடைய அப்பா 1990-ல் உயிரிழந்தார். அம்மா 1998-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர்களின் மகன் குறித்த தகவல் ஏதும் அவர்களுக்கு கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடனே அவர்கள் இங்கே காத்துக் கொண்டிருந்தனர்," என்று நினைவு கூறுகிறார் தாமஸ்.

 

webdunia
 

இறந்தவர்களின் உடல்கள் எவ்வாறு மீட்கப்படுகின்றன?
 

விபத்து நடந்த இடத்தில் இருந்து மொத்தமாக இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

மோசமான காலநிலை மற்றும் பனிப்பிரதேசம் என்பதால் இங்கே அவர்களை தேடும் பணியானது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கிறது.

 

செரியனுடன் கண்டெடுக்கப்பட்ட மற்றவர்களின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாராயண் சிங், மல்கன் சிங் மற்றும் முன்சிராமுடன் செரியனின் உடலும் கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பனிப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.

 

இந்திய ராணுவத்தின் டோக்ரா படைப்பிரிவும், திரங்கா மீட்புக் குழுவும் (Tiranga Mountain Rescue) இறந்தவர்களின் உடல்களை தேடும் பணியை கூட்டாக செய்து வருகின்றன.

 

அதிகாரிகள், செயற்கைக்கோள் படங்கள், ரெக்கோ ரேடார், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உடல்களை கண்டறிந்ததாக கூறுகிறார் டோக்ரா பிரிவின் தலைவராக இருக்கும் கர்னல் லலித் பலரியா.

 

ரெக்கோ ரேடார் (Recco Radar) பனி பரப்பின் அடியே 20 மீட்டர் ஆழம் வரை புதைந்திருக்கும் உலோகப் பொருட்களை கண்டறியும் திறன் கொண்டது. இந்த ரேடார் தான் உடைந்து போன விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்க உதவியது.

 

அந்த உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்ட பிறகு, மீட்புக் குழுவினர் அந்த பகுதியை தோண்டி ஒருவரின் உடலை மீட்டது.

 

செரியனின் சீருடையில் 'தாமஸ் சி' என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அதில் 'சி'-யை மட்டுமே பார்க்க முடிந்தது. அவரின் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த ஆவணத்தின் உதவியுடன் அந்த உடல் செரியனின் உடல் என்று உறுதி செய்யப்பட்டது.

 

குடும்பத்தினருடன் ஆண்டுக்கணக்கில் தொடர்பில் இருந்த ராணுவத்தினர்

அவரை இழந்த வருத்தம் எங்களை விட்டு மறையாது என்றாலும் அவரைப் பற்றி ஒரு உறுதியான தகவல் கிடைத்திருப்பது ஆசுவாசப்படுத்துகிறது என்று கூறுகின்றனர் செரியனின் குடும்பத்தினர்.

 

அக்டோபர் மூன்றாம் தேதி அன்று, செரியனின் உடல் இந்திய தேசியக் கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதையுடன் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாள் கழித்து அவருக்கான இறுதி அஞ்சலி எலந்தூர் கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது.

 

இத்தனை ஆண்டுகள் காத்திருப்பின் போதும் ராணுவத்தினர் தொடர்ந்து செரியனின் உடலை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், உடல் கிடைத்த பின்பு தகவல் அளிக்கப்படும் என்று தங்களின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து கூறி வந்ததாக நினைவு கூர்கிறார் தாமஸ்.

 

"இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன்," என்று கூறிய அவர், செரியன் காணாமல் போன பிறகும் கூட அவரின் குடும்பத்தினர் பலரும் ராணுவத்தில் சேர்ந்ததாக பிபிசியிடம் தெரிவிக்கிறார்.

 

இவர்களைப் போன்றே, இதுவரை மீட்கப்பட்ட ராணுவத்தினரின் குடும்பத்தினரும் இந்த சோகத்தையும் ஒருவித ஆசுவாசத்தையும் தற்போது உணருகின்றனர். செரியனின் பெற்றோரைப் போன்றே, பலரின் பெற்றோரும், வாழ்க்கை துணையும் இவர்களைப் பற்றிய செய்திகளுக்காக காத்திருந்தே இறந்தும் போயுள்ளனர்.

 

நாரயண் சிங்கின் உடலை அக்டோபரில் பெற்றுக் கொண்ட உத்தராகண்டின் ஜெய்வீர் சிங்கும் இதேபோன்ற ஒரு மனப் போராட்டத்தில் தான் இருந்துள்ளார்.

 

நாராயண் காணாமல் போன பிறகு, அவரின் குடும்பத்தினர் முழுமையாக நம்பிக்கை இழந்தனர். நாராயண் சிங்கின் குடும்பத்தினர் ஒப்புதலோடு அவரின் மனைவி பசந்தி தேவி, நாராயணின் உறவினர்களில் ஒருவரை திருமணம் முடித்துக் கொண்டார். அவர்களுக்கு பிறந்தவரே ஜெய்வீர் சிங்.

 

இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் நாராயண் திரும்பி வருவார் என்று நம்பிக்கையுடன் தன்னுடைய அம்மா காத்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கிறார் ஜெய்வீர். 2011-ஆம் ஆண்டு பசந்தியும் உயிர் நீத்தார்.

 

"அவரின் நினைவாக என்னிடம் ஒரு புகைப்படம் கூட இல்லை," என்கிறார் அவர்.

 

கூடுதல் செய்திகளை வழங்கியது ஆசிஃப் அலி, உத்தராகண்ட்

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழை பெய்யாமல் இருக்க அகல் விளக்கேற்றி வழிபட்ட விஜய் கட்சி தொண்டர்..!