Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னை தொடங்கியது எப்படி?

Israel
, வியாழன், 6 ஜூலை 2023 (21:53 IST)
மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரருக்கும், பாலத்தீனருக்கும் இடையே நிகழ்ந்த மோதல்
 
நீண்ட காலமாக நீடித்து வரும் இஸ்ரேல் -பாலத்தீனம் இடையேயான மோதலை அதிகரிக்கும் விதத்தில் மற்றொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. மேற்குக் கரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலத்தீன அகதிகள் முகாமில் பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான அதிரடி சோதனையை இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கட்கிழமை நடத்தி உள்ளது. இந்த சோதனையின்போது இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலத்தீனர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் குறைந்தபட்சம் 10 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்; 100 பேர் காயமடைந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு வணிக மையத்துக்கு வெளியே, பாலத்தீனர் ஒருவர் தனது காரை பாதசாரிகளின் மேல் மோதவிட்டதில் ஏழு பேர் காயம் அடைந்தனர். இவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று பாலத்தீன போராட்டக் குழுவான ஹமாஸ் தெரிவித்துள்ளது.
 
இப்படி முடிவில்லாமல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் -பாலத்தீனம் இடையேயான மோதல்களால் இருதரப்பிலும் உயிர் பலிகள் நிகழ்வதும், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. இதற்கு ஒரு முடிவே கிடையாதா என்று கேட்கும் அளவுக்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் தொடரும் இந்த பிரச்னை எப்படி ஆரம்பித்தது, மேற்குக் கரை மற்றும் காசா எல்லைப் பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் என்ன? ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம்? இருதரப்பு பிரச்னைகள் எதிர்காலத்தில் ஆவது தீர்க்கப்படுமா? என்பன உள்ளிட்டவை குறித்து இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.
 
கச்சா எண்ணெய் உற்பத்தியை சொல்லி வைத்து குறைக்கும் சௌதி அரேபியா, ரஷ்யா - இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?
 
முதல் உலகப் போர் காலகட்டத்தில் மத்திய கிழக்கு ஆசியாவில் பாலத்தீனம் என்று அறியப்பட்ட பகுதியில் ஒட்டோமான் பேரரசு ஆட்சிபுரிந்து வந்தது. முதல் உலகப்போரின் போது இந்த பேரரசை பிரிட்டன் வென்றதையடுத்து பாலத்தீனம் பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன் தொடர்ச்சியாக பாலத்தீன பகுதியில் யூதர்களுக்கு தாய் நாட்டை உருவாக்கும் பொறுப்பை சர்வதேச சமூகம் பிரிட்டனுக்கு அளித்தது.
 
இதனால் அந்த நிலத்தில் சிறுபான்மையினராக வசித்து வந்த யூதர்களுக்கும், பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த அரேபியர்களுக்கும் இடையே மோதல் ஆரம்பித்தது. யூதர்களின் மூதாதையர்களுக்கு சொந்தமானதாக கருதப்பட்ட அந்த நிலத்திற்கு பாலத்தீன அரேபியர்கள் உரிமை கொண்டாடினர். அத்துடன் அங்கு யூதர்களுக்கு தனிநாடு உருவாக்கும் பிரிட்டனின் நடவடிக்கையையும் அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
 
இதனிடையே , ஐரோப்பாவில் யூதர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்தனர். அதன் உச்சமாக இரண்டாம் உலகப் போர் காலத்தில் இன அழிப்புக்கு அவர்கள் இலக்காகினர். அவற்றில் இருந்து தப்பித்து, தங்களுக்கென தாய்நாடு தேடி, 1920 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் பாலத்தீனம் நோக்கிய யூதர்களின் வருகை அதிகரித்து கொண்டே இருந்தது. இதன் விளைவாக யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அத்துடன் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான அரேபியர்களின் போராட்டமும் அதிகரித்தது.
 
அந்த நிலையில்தான், பாலத்தீனத்தை யூதர்கள் மற்றும் அரேபியர்களுக்கு என தனித்தனி நாடுகளாக பிரிப்பது தொடர்பாகவும், ஜெருசலேம் சர்வதேச நகராக அறிவிக்கப்படுவது குறித்தும் 1947 இல் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை யூதர்கள் தரப்பு தலைவர்கள் ஏற்றுக் கொண்ட போதிலும், அரேபியர்கள் தரப்பினர் நிராகரித்துடன், அத்திட்டத்தை அவர்கள் ஒருபோதும் செயல்படுத்தவில்லை.
 
ஃபிரான்ஸ் வன்முறையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை அனுப்பி வைக்க சொன்னவர் யார்?
 
மார்ச் 1948 இல் யூத ஏஜென்சியின் தற்காப்புப் படையான ஹகானாவின் போராளிகள் மீது நேச நாட்டு அரபு லெஜியன் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
 
பாலத்தீனத்தை இரு தனி நாடுகளாக பிரிக்கும் விவகாரத்தில் தீர்வு எட்டப்பட முடியாததையடுத்து, 1948 இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். ‘இஸ்ரேல்’ தனி நாடு உருவாக்கப்பட்டதாக யூத தலைவர்கள் பிரகடனப்படுத்தினர். யூதர்களின் இந்த நடவடிக்கையை பாலத்தீனர்கள் கடுமையாக எதிர்த்ததையடுத்து இருதரப்புக்கும் இடையே போர் வெடித்தது. அருகில் இருந்த அரபு நாடுகளின் படைகளும் போரில் ஈடுபட்டன. பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் உயிருக்கு அஞ்சி தங்கள் நிலத்தை விட்டு வெளியேறினர். அவ்வாறு செய்யாதவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை “பேரழிவு” என்று பாலத்தீனர்கள் குறிப்பிட்டனர்.
 
ஓராண்டில் யூதர்கள் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியானபோது பாலத்தீனத்தின் பெரும்பகுதியை இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.
 
இஸ்ரேல் எனும் தனி நாடு உருவாக்கம், ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்களின் குடியேற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
தென் ஆப்ரிக்காவில் வாரிசுச் சண்டையில் மன்னருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?
 
பாலத்தீனத்தில் ஜோர்டானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதி தான் ‘மேற்குக் கரை’. ஜோர்டான் நதியின் மேற்கே அமைந்துள்ள இப்பகுதி, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கே இஸ்ரேலை எல்லையாக கொண்டுள்ளது. இப்பகுதியின் கிழக்கே ஜோர்டான் அமைந்துள்ளது.
 
இதேபோன்று எகிப்தின் எல்லையில் அமைந்திருந்த ஒரு சிறிய கடலோர பகுதியை அந்நாடு ஆக்கிரமித்தது. இந்தப் பகுதி ‘காசா’ என்று அழைக்கப்படுகிறது.
 
இலங்கை: முல்லைத்தீவில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி - சரணடைந்த விடுதலைப்புலிகள் கொலையா என சந்தேகம்
 
1967 இல் ஆறு நாள் நடைபெற்ற போரின்போது கிழக்கு ஜெருசலேமிற்கு வருகை தந்த இஸ்ரேலிய இராணுவத் தளபதிகள்
 
இரண்டான ஜெருசலேம்
இதனிடையே, இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் படைகளால் ஜெருசலேம் நகரம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அந்த நகரின் மேற்கு பகுதியில் இஸ்ரேலிய படைகளும், கிழக்கே ஜோர்டன் படைகளும் ஆதிக்கம் செலுத்தி வந்தன.
 
இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மற்றும் ஜோர்டனுக்கு இடையே சமாதான உடன்படிக்கை ஏற்படாததால், பல ஆண்டுகளாக இரண்டு நாடுகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வந்துள்ளது.
 
பாலத்தீனத்தை தாண்டி நீண்ட இஸ்ரேலின் கரங்கள்
 
1967 இல், கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரை, சிரியாவின் பெரும்பாலான பீடபூமி பகுதி, எகிப்தின் சினாய் தீபகற்பம் ஆகியவற்றை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அப்போது பாலத்தீன அகதிகள் மற்றும் அவர்களின் சந்ததியினர் காசா மற்றும் மேற்குக் கரையில் வாழ்ந்து வந்தனர். மேலும் அவர்கள் அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவிலும் வசித்து வந்தனர்.
 
அகதிகளாக வாழ்ந்து வந்த பாலத்தீனர்களும், அவர்களின் சந்ததியினரும் அவர்களின் சொந்த நிலத்துக்கு திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. யூதர்களுக்கான ‘தனி நாடு’ என்ற பிரகடனத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று கருதியதால் இஸ்ரேல் அவ்வாறு முடிவெடுத்தது.
 
காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் பின்னர் வெளியேறினாலும், மேற்குக் கரை பகுதி இன்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தான் உள்ளது.
 
கிழக்கு ஜெருசலேம், காசா மற்றும் மேற்குக் கரையில் வசிக்கும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன.
 
ஜெருசலேம் முழுவதும் தமக்கே சொந்தம் எனக் கோரும் இஸ்ரேல், அதை தலைநகராகவும் கருதுகிறது. ஆனால் ஜெருசலேத்தின் கிழக்குப் பகுதிக்கு உரிமை கோரி வரும் பாலத்தீனியர்கள், எதிர்காலத்தில் அமைய உள்ள தங்களது நாட்டின் தலைநகராகவும் அது விளங்கும் என்றும் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில். ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அங்கீகரித்தன. ஆனால், இந்த நகருக்கு உரிமைக் கோரும் விவகாரத்தில் சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் இறுதி முடிவு எட்டப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி இருந்தன.
 
இருப்பினும் கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குடியிருப்புகளை கட்டி வருகிறது. அங்கு தற்போது ஆறு லட்சத்திற்கும் மேலான யூதர்கள் வசித்து வருகின்றனர்.
 
ஜெருசலேத்தில் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் கூறி வருகின்றன. பாலத்தீனர்களுக்கு ஆதரவான இந்த குரல்களை இஸ்ரேல் பொருட்படுத்துவதாக தெரியவில்லை.
 
பாலத்தீனத்தை உறுப்பினர் அல்லாத நாடாக அங்கீகரிப்பது தொடர்பாக, 2012 இல் ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.நா. பொதுச் சபை விவாதங்களில் பாலத்தீனம் பங்கேற்கவும். ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும் வழிவகை செய்யும் நோக்கில் அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், பாலத்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வாக்கெடுப்பு வழிவகுக்கவில்லை.
 
இருப்பினும் . ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் 70 சதவீதம் நாடுகள், பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க தங்களது ஆதரவை தெரிவித்தன. ஆனாலும் பாலத்தீனர்கள் வசித்து வரும் கிழக்கு ஜெருசலேம், காசா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் இஸ்ரேலுக்கும், பாலத்தீனத்துக்கும் இடையே மோதல் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
 
பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து சென்றது உண்மையா? நாசா என்ன சொல்கிறது?
 
பாலத்தீனத்தின் காசா பகுதி தற்போது ஹமாஸ் எனப்படும் பாலத்தீன போராட்டக் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இஸ்ரேலுடன் பலமுறை சண்டையிட்டுள்ள ஹமாஸுக்கு, ஆயுதங்கள் கிடைக்கப் பெறுவதை தடுக்கும் நோக்கில் இஸ்ரேல் மற்றும் எகிப்து காசா எல்லைப் பகுதியில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
 
இஸ்ரேலின் இந்த கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளின் விளைவாக தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக காசா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் வாழ்ந்துவரும் பாலத்தீனர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் பாலத்தீனர்களின் வன்முறை தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் கூறி வருகிறது.
 
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் உள்ளன. இவற்றில் பாலத்தீன அகதிகளின் எதிர்காலம், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் அப்படியே இருக்கலாமா அல்லது அவை அகற்றப்பட வேண்டுமா, ஜெருசலேத்தை இருதரப்பும் பங்கீட்டு கொள்வதா, இல்லையா என்பவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன. இவை எல்லாவற்றையும் விட ‘இஸ்ரேல் உடன் இணைந்த பாலத்தீன நாடு’ உருவாக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் இரு நாடுகளுக்கு இடையேயான மிக முக்கிய பிரச்னையாக நீடித்து வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காண மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், அவற்றுக்கு இதுநாள்வரை தீர்வு காணப்படவில்லை.
 
இஸ்ரேல் -பாலத்தீனம் இடையேயான பிரச்னைகளுக்கு இன்று இல்லையென்றாலும், எதிர்காலத்தில் தீ்ர்வு காணப்பட்டுவிடும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
 
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது, இஸ்ரேல்- பாலத்தீன பிரச்னைகளை தீர்ப்பதற்கான அமைதி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இருதரப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய இந்த முயற்சியை, ‘இந்த நூற்றாண்டின் உடன்படிக்கை’ என்று இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு வர்ணித்திருந்தார்.
 
ஆனால், அமெரிக்காவின் அமைதி முயற்சி ஒருதலைபட்சமானது எனக் கூறி அதை நிராகரித்த பாலத்தீனர்கள், இதனால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் தெரிவித்தனர். எனவே இஸ்ரேல் -பாலத்தீனம் இடையேயான சிக்கலான பிரச்னைகளுக்கு இருதரப்பினரும் ஏற்றுகொள்ளும்படியாக தீர்வு காணப்படும் வரை, இஸ்ரேல்- பாலத்தீனம் மோதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதே தற்போதைய யதார்த்த நிலையாக உள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து-ஒரு வயது குழந்தை உள்பட 27 பேர் பலி!