“தமிழகத்தைப் பொறுத்தவரை எய்ட்ஸ் பரவல் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவின் எய்ட்ஸ் பரவல் 0.21 சதவிகிதம். ஆனால், தமிழகத்தில் எய்ட்ஸ் பரவல் 0.18 சதவிகிதம். எனவே இந்திய அளவை ஒப்பிடும்போது நாம் 0.03 சதவிகிதம் குறைவாக இருக்கிறோம்” என்கிறார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தின் திட்ட இயக்குநர் டி.என்.ஹரிஹரன், ஐஏஎஸ்.
டிசம்பர் 1ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
90கள் மற்றும் 2000த்தின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை எச்ஐவி வைரஸ் ஏற்படுத்தியது. உயிர்க்கொல்லி நோயாக அறியப்படும் எய்ட்ஸ், ஒப்பீட்டளவில் இன்று கட்டுக்குள் வந்துவிட்டாலும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை.
இன்றும் உலக அளவில் 38 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயாளிகளாக வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
இந்தியாவில் 2011-2021க்கு இடைப்பட்ட காலத்தில் 17,08,777 பேர் பாதுகாப்பற்ற உடலுறவால் எய்ட்ஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் 1986ஆம் ஆண்டு முதன்முறையாக சென்னையில் வசித்த நான்கு பாலியல் தொழில் புரியும் பெண்களிடம் எய்ட்ஸ் கண்டறியப்பட்டது. பின்னர், படிப்படியாக இந்தியாவில் எய்ட்ஸ் பரவல் அதிகரித்தது. எய்ட்ஸ் பாதிப்பு எண்ணிக்கை 1990களின் இறுதியில் உச்சத்தைத் தொட்டது. அந்த நேரத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மிகவும் தீவிரமாக இருந்தது.
இன்று தமிழகத்தில் எய்ட்ஸ் பரவல் எப்படி உள்ளது, எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் எந்த அளவுக்கு உள்ளது, எய்ட்ஸ் நோயாளிகளைக் கையாளுவதில் தமிழ்நாடு எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறது என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குநர் டி.என்.ஹரிஹரன் ஐஏஎஸிடம் பிபிசி தமிழுக்காகப் பேசினோம்.
தமிழ்நாட்டில் மொத்தம் 1,24,000 எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
கடந்த காலங்களை ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்று கூறும் டி.என்.ஹரிஹரன், இதற்கு தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சிகளே காரணம் என்கிறார்.
“தமிழகத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கட்டாயம் எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனை மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் 100 சதவிகிதம் கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. ஒருவேளை எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது பிறக்கவிருக்கும் குழந்தைக்குப் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் எய்ட்ஸுடன் பிறப்பது தடுக்கப்படுகிறது. தமிழகத்தில் எந்தப் பகுதிகளில் பரவல் அதிகமாக உள்ளதோ அங்கு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம் கூடுதல் கவனம் கொடுத்து செயல்பட்டு வருகிறது,” என்கிறார் டி.என்.ஹரிஹரன்.
பேருந்துகள், மின்சார ரயில்கள், ஆட்டோக்கள், சுவரொட்டிகள் மற்றும் மாநிலம் முழுவதும் நாட்டுப்புற பாடல்கள் மூலமாகத் தொடர் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறும் அவர், இதன் காரணமாகவே இந்தியாவில் எய்ட்ஸ் ஒழிப்பில் பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்கிறார்.
நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு
கிராமங்களோடு ஒப்பிடும் போது நகர்ப்புறங்களில்தான் அதிகம் எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாகவும் டி.என்.ஹரிஹரன் கூறுகிறார்.
இதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது, “நகரங்களில் அதிக விழிப்புணர்வு இருந்தாலும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுவர்களின் புழக்கம் அதிகமாக உள்ளதால் இந்த எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது” என்கிறார்.
“நகரங்களில் பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண் பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களிடம் அதிகம் பரிசோதனை செய்கிறோம். உடலுறவின் போது ஆணுறைகள் பயன்படுத்த மற்றும் போதைக்காக ஊசிகள் பயன்படுத்தினால் ஒரே ஊசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறோம். இதையும் கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசுசாரா அமைப்புகள் மூலம் நிறைய முன்னெடுப்புகளை தமிழக அரசு எடுத்து வருகிறது” என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறும் டி.என்.ஹரிஹரன், அதற்கான செயல்திட்ட முன்னெடுப்பில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
அதே நேரத்தில், இந்தியா உட்பட உலகம் முழுவதுமே எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் குறைந்துவிட்டதாக ஐ.சிடபிள்யூஓ (ICWO) என்ற அரசுசார அமைப்பின் செயலாளர் ஏ.ஜே.ஹரிஹரன் கூறுகிறார்.
“பத்தாண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் தொடர்பான விளம்பரங்கள் தொடர்ந்து வரும். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராகுல் ட்ராவிட் உட்பட நிறைய பிரபலங்கள் இது குறித்துப் பேசினார்கள். ஆனால், இன்று அந்தப் பிரசாரங்கள் இல்லை. அன்றைக்கு நாம் செய்த பிரசாரத்தினால்தான் இன்றைய இளைஞர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள். இன்று நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறினால் எதிர்காலத்தில் மீண்டும் அதிகமாகலாம்” என்கிறார் ஐ.சிடபிள்யூஓ ஹரிஹரன்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு விளம்பரங்கள் நிறுத்தப்படுமா?
எய்ட்ஸ் முழுமையாக கட்டுக்குள் வந்த பிறகுதான் விழிப்புணர்வு பிரசாரத்தை நாம் நிறுத்த வேண்டும். எனவே, அதற்கு இது சரியான நேரமல்ல” என்றும் அவர் கூறுகிறார்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரங்களுக்கு அதிக பணம் செலவிடப்படுகிறதே என்று அரசு நினைக்கக் கூடாது என்று கூறும் ஐ.சிடபிள்யூஓ ஹரிஹரன், இன்றைய இளைஞர்கள்தான் எதிர்கால இந்தியா, அவர்களது பாதுகாப்பிற்குச் செய்யும் முதலீடு நம் நாட்டின் பாதுகாப்பிற்காகச் செய்யப்படும் முதலீடு என்கிறார்.
பொதுவாக எய்ட்ஸ் என்பது ரத்தம், விந்து, யோனி திரம் மூலமாகப் பரவக்கூடியது. பாதிக்கப்பட்டவர்களைத் தொடுவதன் மூலமாகவோ அல்லது காற்றின் மூலமாகவோ மற்றவர்களுக்குப் பரவும் தன்மை கொண்டதல்ல. இதுகுறித்து கடந்த காலங்களில் பெருமளவில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டிருந்தாலும், எய்ட்ஸ் நோயாளிகள் மீதான பொதுச்சமூகத்தின் பாரபட்சம் இன்றும் தொடரத்தான் செய்கிறது.
எய்ட்ஸ் விழிப்புணர்வு களப் பணியில் இருக்கும் ஐ.சிடபிள்யூஓ ஹரிஹரனும் அதையே உணர்கிறார்.
“எய்ட்ஸ் நோயாளியுடன் இருந்தால் நமக்கும் வந்துவிடுமோ என்று நினைக்கிறார்கள். அவ்வாறு பரவாது என்று தெரிந்தாலும் ஒருவித பயம் மக்களிடம் இருக்கிறது. அவர்களுடன் சகஜமாகப் பழகுவது, அவர்களுடைய உடைகள், உணவுத் தட்டுகளைப் பயன்படுத்துவதில் இன்னும் தயக்கம் தெரிகிறது,” என்கிறார் அவர்.
எய்ட்ஸை தடுக்க அரசு என்ன செய்கிறது?
முன்பு எய்ட்ஸிற்கு மருந்து இல்லாத நிலை இருந்தது. இன்று பல மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. ஏஆர்டி போன்ற மருந்துகளை அரசே இலவசமாக வழங்குகிறது. இந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் முற்றிலும் குணமடையாவிட்டாலும், ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.
“2000க்கு முன்பு வரை எய்ட்ஸால் நிறைய பேர் இறந்துள்ளனர். அப்போதெல்லாம் ஏஆர்டி மருந்து கிடையாது. இன்றைக்கு அந்த மருந்து இலவசமாகக் கிடைக்கிறது. தற்போது நிறைய மருந்துகள் வந்துவிட்டன. கருவுற்ற எச்ஐவி பாதித்த பெண்ணிடம் இருந்து பிறக்கும் குழந்தைக்குப் பரவுவதைத் தடுக்கக் கூட நெவிரபைன் (Nevirapine) என்ற மருந்து உள்ளது,” என்கிறார் எய்ட்ஸ் நோயாளியான சேகர்.
சேகருக்கு 1992ஆம் ஆண்டு எய்ட்ஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவர் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்திருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக எய்ட்ஸ் பரிசோதனை செய்திருக்கிறார். அதில் அவருக்கு எய்ட்ஸ் உறுதியானதும், சேகரின் வாழ்க்கை தலைகீழாக மாறியது.
“எனக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதியானதும் திருமணத்தை நிறுத்திவிட்டேன். அக்கம் பக்கத்தினர் ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்துவிட்டனர். என்னுடைய அண்ணன் பணிமாற்று வாங்கி வேறு ஊருக்குச் சென்றுவிட்டார். என்னுடைய அம்மா பள்ளி ஆசிரியை. அவரால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. தங்கையின் திருமணம் என்னால் பாதிக்கப்பட்டது. வீட்டிற்கு வருவதையே சொந்தக்காரர்கள் நிறுத்திவிட்டனர். எய்ட்ஸை அவமானகரமான சின்னமாகப் பார்க்கிறார்கள்” என்கிறார் சேகர்.
தன்னுடைய வாழ்க்கை இவ்வாறு முடங்கிவிட்ட நிலையில், ஸ்வாம் (swam) என்ற அரசுசாரா அமைப்பைத் தொடங்கி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வுப் பணியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுவருகிறார் சேகர். பெண்களுடனான உடலுறவு மட்டுமல்ல, பாதுகாப்பற்ற தன்பாலின உறவு மூலமாகவும் எய்ட்ஸ் பரவும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் தீவிர கவனம் செலுத்துகிறார்.
“7 முதல் 8 கோடி வரை மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் இன்றைய மொத்த பாதிப்பு அளவே 1.24 லட்சம்தான். 90களின் காலத்தோடு ஒப்பிடும்போது இது மிகப்பெரிய முன்னேற்றம். இதற்கு முழு காரணமும் நாம் முன்னெடுத்த விழிப்புணர்வு பிரசாரங்கள்தான். எய்ட்ஸ் என்றால் உயிருக்கு ஆபத்தான நோய் என்ற புரிதல் ஏற்பட்டு இன்றைய இளைஞர்கள் பாதுகாப்பு உணர்வோடு உள்ளனர்” என்கிறார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குநர் டி.என்.ஹரிஹரன்.