இலங்கையில் வடமேல் மாகாணத்தில் குளியாபிட்டிய என்ற இடத்தில், எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர் என்ற வதந்திக்கு உள்ளான 6 வயது சிறுவனை அண்மையில் சேர்த்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடம் இப்போது அவரை நீக்கியுள்ளது.
அந்தச் சிறுவனின் தந்தை எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக உள்ளூரில் வதந்தி பரவியிருந்த நிலையில், அவரை சேர்த்துக்கொள்ள எந்தப் பள்ளிக்கூடமும் முன்வந்திருக்காத நிலையில், கல்வி அதிகாரிகளின் தலையீட்டால் பள்ளிக்கூடம் ஒன்று அவரை அண்மையில் சேர்த்திருந்தது.
சிறுவனுக்கு எச்ஐவி இல்லை என்று மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்ளூர் மக்களிடமிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் எதிர்ப்புக்கு மத்தியில், அவரை அந்தப் பள்ளியிலிருந்து விலக்கியுள்ளதாக வட-மேற்கு மாகாண சபை கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவன் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு தங்களின் பிள்ளைகளை அனுப்பமுடியாது என்று ஏனைய பெற்றோர் மறுத்திருந்த நிலையில், பள்ளிக்கூடத்தை சில நாட்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், ஏனைய பிள்ளைகளின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அந்தப் பள்ளிக்கூடத்தில் வைத்திருப்பது அந்த சிறுவனுக்கு பாதமான நிலைமையை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலேயே அந்த சிறுவனை அங்கிருந்து விலக்க நடவடிக்கை எடுத்ததாக மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்தார்.
அடையாள ஆவணங்களை மாற்ற முடிவு
சிறுவனின் அடையாள ஆவணங்களை மாற்றி, எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வேறு பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மகனுக்கு 6 வயதாகியும் எந்தப் பள்ளிக்கூடமும் முன்னர் சேர்க்க சம்மதித்திருக்காத நிலையில் நியாயம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவனது தாயார், தனது மகனுக்கு எச்ஐவி தொற்று இல்லை என்பதையும் மருத்துவ சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.
தன் மகனை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்படி, அவனது தாயார் முன்னர் போராட்டம் நடத்தியிருந்தார்
அதனையடுத்தே, கல்வி அமைச்சின் அதிகாரிகளினால் குளியாப்பிட்டியிலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சிறுவனை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.
பள்ளிக்கூடம் சில நாட்கள் மூடப்பட்டிருந்ததால், பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக பள்ளி நிர்வாகம் மாகாண கல்வி அமைச்சின் உதவியை நாடியது.
பள்ளி நிர்வாகத்தினருக்கும் மாகாண கல்வி அமைச்சருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையில் இன்று நடந்த பேச்சுவார்த்தையின்போது, சிறுவனுக்கு எச்ஐவி தொற்று இல்லை என்று சுகாதார அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
ஆனாலும், அதை ஏற்க மறுத்த பெற்றோர் சிறுவனை தொடர்ந்தும் பள்ளிக்கூடத்தில் வைத்திருப்பதற்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பெற்றோரிடமிருந்து வந்த தொடர் எதிர்ப்பை அடுத்து, சிறுவனை பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்வதாக மாகாண கல்வி அமைச்சர் அறிவித்தார்.
ஆனால், அமைச்சரின் இந்த முடிவுக்கு அப்பகுதி சுகாதார அதிகாரிகளும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், சிறுவனுக்கு வேறொரு பள்ளிக்கூடத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இந்த சிறுவனுக்கு எச்ஐவி இல்லை என தேசிய பாலியல் தொற்று மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் விசேட நிபுணர் டாக்டர் ஜி.வீரசிங்க பிபிசியிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.