Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சளி, இருமல் மருந்துகளில் ஒளிந்திருக்கும் ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவர்கள்

Advertiesment
Syrup
, வியாழன், 22 டிசம்பர் 2022 (13:55 IST)
மும்பையில் இருமல் மருந்து எடுத்துக் கொண்ட இரண்டரை வயது குழந்தை சுமார் 20 நிமிடங்களுக்கு மூர்ச்சையாகிவிட்டது. அது மருத்துவ தம்பதியின் குழந்தை என்பதால் உடனடி சிகிச்சை கிடைத்து மீண்டது. இது இந்தியாவில் குழந்தைகளுக்கு சளி, இருமல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

தெற்கு மும்பையைச் சேர்ந்த மருத்துவ தம்பதியின் இரண்டரை வயது குழந்தைக்கு இருமல் அதிகமாக இருக்கவே, தாயார் இருமல் மருந்து கொடுத்துள்ளார். அந்த மருந்தை குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தை திடீரென மூச்சுப் பேச்சின்றி மூர்ச்சையாகிவிட்டது. குழந்தையின் சுவாசத்தையோ, இதயத் துடிப்பையோ உணர முடியாமல் போகவே, அந்த மருத்துவ தம்பதி அதிர்ந்து போய்விட்டது.

அப்போது வெளிநாட்டில் இருந்து வந்திருந்த, குழந்தையின் பாட்டியும், பிரபல வலி மேலாண்மை நிபுணருமான திலு மங்கேஷிகார் எதற்கும் பதற்றப்படாமல் சாதுர்யமாக செயல்பட்டதே குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. குழந்தைக்கு இதயம், நுரையீரலை மீள உயிர்ப்பிக்கும் சி.பி.ஆர். சிகிச்சையை அவர் அளிக்க, சுமார் 20 நிமிடங்கள் மூச்சுப் பேச்சின்றி இருந்த குழந்தை மெல்ல கண் விழித்துள்ளது.

அடுத்த சில நிமிடங்களில் சிறுவனின் சுவாசம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவை மெல்லமெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. தொடர்ந்து, குழந்தைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ தம்பதியின் குழந்தைக்கு திடீரென நேரிட்ட இந்த மோசமான நிகழ்வு சாதாரண குடும்பத்தில் உள்ள குழந்தைக்கு வந்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருக்கும்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இயல்பாகவே எழுகிறது. குழந்தைகளுக்கு திரவ வடிவில் (Syrup) சளி, இருமல் மருந்துகள் புழக்கத்தில் இருக்கும் இந்தியாவில் அதுகுறித்த ஆய்வு அவசியமாகிறது.

சளி மருந்தை குடித்ததும் குழந்தை மூர்ச்சையாக காரணம் என்ன?

மும்பையைச் சேர்ந்த அந்த மருத்துவ குடும்பம், மருத்துவத் துறையின் அடிப்படைகளை ஆய்வு செய்த போது, அவர்கள் குழந்தைக்குக் கொடுத்த மருந்தில் குளோர்பெனிராமைன் மற்றும் டெக்ஸ்ட்ராமெதார்ஃபன் ஆகிய 2 வேதிப் பொருட்களும் இருந்ததைக் கண்டனர்.

"அமெரிக்காவில் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகளை பரிந்துரைக்கக் கூடாது என்ற எச்சரிக்கை வாசகங்கள் பாட்டிலின் லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இந்தியாவில் அதுபோன்ற எச்சரிக்கை வாசகங்கள் இல்லை. மருத்துவர்களும் பரிந்துரைக்கவே செய்கின்றனர்" என்கிறார் திலு மங்கேஷிகார்.
இதுகுறித்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர் மருத்துவர் ராவணகோமகனிடம் பேசிய போது,

"தொண்டை முதல் நுரையீரலின் மூச்சுக்குழல் வரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருமலுக்கான தொற்று இருக்கலாம். இருமலுக்கான காரணம் என்னவென்பதை பரிசோதனையில் கண்டுபிடித்த பின்னரே முறையான சிகிச்சை அளிக்கப்படும். உள்ளுறுப்புகளில் இருமல் தொற்று இருக்கும் போது மட்டுமே டெஸ்ட்ராமெதார்ஃபைன் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அது மூளையில் இருமலுக்குக் காரணமான ஏற்பிகள் மீது செயல்படும். இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவில் மட்டுமே, மிகச் சரியாக அதே மருந்தை மட்டுமே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஒரே நாளில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது மருத்துவர் குறிப்பிட்டதைக் காட்டிலும் கூடுதலாகவோ கொடுத்தால் இதுபோன்ற நிலை வரலாம்" என்றார்.

சென்னையைச் சேர்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணரும், புரோமெட் மருத்துவமனை இயக்குநருமான அருண் கல்யாணசுந்தரம் பேசுகையில், "2 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகளை கொடுக்கவே கூடாது. சுவாசம் குறைவது, இதயத்துடிப்பு அதிகரிப்பது போன்ற காரணங்களால் சில குழந்தைகள் மரணமடையக் கூட வாய்ப்புள்ளது," என்று எச்சரிக்கிறார்.

webdunia


"மருத்துவர்கள் குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக கொடுப்பது, அடிக்கடி மருந்து தருவது என்பதையும் தாண்டி மருத்துவர்களின் பரிந்துரையின்றி தாமாகவே மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கிக் கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் இருக்கிறது. அது மிகவும் தவறானது. அமெரிக்காவைப் பொருத்தவரை இதுபோன்ற நிலை இல்லை. 4 வயது வரை மட்டுமல்ல, அதற்கும் மேலாக வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கும் கூட சளி, இருமல் மருந்துகள் மிகுந்த எச்சரிக்கையுடனே பரிந்துரைக்கப்படுகின்றன," என்று அவர் மேலும் கூறுகிறார்.

சளி, இருமல் வருவது ஏன்? உடனே மருத்துவரை அணுகுவது அவசியமா?

சென்னையில் நாள்தோறும் பலநூறு குழந்தைகளை பரிசோதித்து, சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ராவணகோமகன், "இருமல் என்பது நோய்க்கிருமிகள், தூசு, காற்று மாசு போன்றவற்றில் இருந்து நம் உடலில் காப்பாற்றிக் கொள்ள இயற்கையாகவே அமைந்துள்ள பாதுகாப்பு செயல்முறை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொண்டையில் இருந்து நுரையீரலில் கடைசி பாகமான மூச்சுக்குழல் வரை எங்கு வேண்டுமானாலும் இருமல் தொற்று இருக்கலாம். இருமல் தொற்று எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்த பின்னரே மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.

தொண்டையில் இருமல் தொற்று இருந்தால் சுடுதண்ணீர், தேனில் மிளகு கலந்து கொடுப்பது போன்றவற்றின் மூலமே குணப்படுத்தி விடலாம். இருமல் வரும் போதெல்லாம் மருந்தோ, சிகிச்சையோ எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உணவோ, குடிநீரோ எடுத்துக் கொள்ள முடியாத நிலை, பேசவோ தூங்கவோ முடியாத அளவுக்கு தொடர்ந்து இருமுதல் போன்ற அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு மோசமானால் மட்டுமே இருமலுக்கு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்," என்கிறார்.

பொதுவாக சளி, இருமலை சாதாரண ஒன்றாக அலட்சியமாக கருதும் போக்கு நம் சமூகத்தில் நிலவுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். "தாமாகவே மருந்துக்கடைக்குச் சென்று அவர்கள் தரும் ஏதோவொரு மருந்தை குழந்தைக்கு கொடுக்கும் போக்கு அறவே கூடாது. அதேபோல், மருத்துவர் பரிந்துரைத்த மருந்து இல்லாவிட்டால், அதற்கு இணையான வேறொரு நிறுவனம் தயாரித்த மருந்தைத் தருவதாகக் கூறி மருந்துக்கடைகளில் தரும் மருந்தை வாங்கவே கூடாது. ஏனெனில், மருத்துவர் பரிந்துரைத்த மருந்தைப் போல இருந்தாலும், அந்த மருந்தில் உள்ள மூலப்பொருட்களின் கூட்டுச்சேர்க்கை, விகிதாச்சாரம் மாறுபடலாம் போன்றவை மாறுபடலாம் என்பதால் அது எதிர்மறை விளைவை உண்டாக்கிவிடும்" என்று அவர் எச்சரிக்கிறார்.

குழந்தைக்கு ஒவ்வாமை, பக்க விளைவு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

"மருந்தால் குழந்தைக்கு ஒவ்வாமையோ அல்லது பக்க விளைவோ ஏற்பட்டால், அடுத்த 5 நிமிடங்களிலேயே தெரிந்துவிடும். இருமல் அதிகமாவது, மூச்சுவிட சிரமப்படுவது, வாய் வீங்குவது, முகமும், உடலும் சிவப்பாவது, உடல் முழுவதும் தடிப்புகள் தோன்றுவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் தெரியப்படுத்திவிட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவது அவசியம். ஏனெனில், மருத்துவமனைகளில் மட்டுமே அவசர நிலையை கையாள தேவையான உயிர் காக்கும் கருவிகளும் மருந்துகளும் இருக்கும்" என்று மருத்துவர் ராவணகோமகன் அறிவுறுத்துகிறார்.

"சளி, இருமல் வந்தால் உடனே சரி செய்துவிட வேண்டும் என்று மக்கள் அவசரம் காட்டுவது தவறு. அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே மருந்து தேவை. அதுவும் மருத்துவரிடம் சென்று முறையாக சிகிச்சை பெற வேண்டும்," என்பதே அவரது முடிவான அறிவுரை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவங்கதான் இந்த ஆண்டின் டாப் 10 பணக்காரர்கள்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?