Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"மூலிகை மருந்துகள் புற்றுநோய் குணமாவதை தாமதப்படுத்தலாம்"

Advertiesment
, சனி, 16 நவம்பர் 2019 (21:54 IST)
புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவருபவர்கள் மூலிகை மருந்துகளை பயன்படுத்தினால் அதுகுறித்த தகவல்களை தங்களது மருத்துவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும், ஏனெனில் அவை ஏற்கனவே அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று புற்றுநோய் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, மார்பக புற்றுநோய் பரவும்போது, பூண்டு, இஞ்சி மற்றும் ஜின்கோ எனும் சீனாவை பூர்விகமாக கொண்ட மரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகளை உட்கொள்வது தோல் காயங்களை குணப்படுத்துவதை தாமதப்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
மூலிகைகளை அடிப்படையாக கொண்ட சிகிச்சை முறைகள் அல்லது களிம்புகள் புற்றுநோயை குணப்படுத்தியதாக எவ்வித ஆதாரமும் இல்லை என்று பேராசிரியர் மரியா ஜோவா கார்டோசோ கூறுகிறார்.
 
சந்தேகம் இருப்பின், மருத்துவர் அளிக்கும் சிகிச்சையை விடுத்து வேறெந்த மருத்துவ முறையையும் கடைபிடிக்காமல் இருப்பதே சிறந்தது என்று அவர் கூறுகிறார்.
 
"தங்களிடம் புற்றுநோய்க்கான சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அவர்கள் வேறெந்த சிகிச்சை முறையை எடுத்துக்கொள்கிறார்கள் என்று மருத்துவர்கள் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்," என்று பிபிசியிடம் பேசிய போர்ச்சுகலின் லிஸ்பனில் உள்ள சம்பலிமாட் புற்றுநோய் மையத்தில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள பேராசிரியர் மரியா ஜோவா கார்டோசோ கூறுகிறார்.
 
குறிப்பாக தோல் வரை புற்றுநோய் பரவலை கொண்ட நோயாளிகள், அடிப்படையில் எடுத்துவரும் சிகிச்சைக்கு மேலதிகமாக புதிய சிகிச்சையை எடுத்துக்கொள்வதற்கு முன்னர், தங்களது மருத்துவரின் அறிவுரையை பெற்றுக்கொள்வது அவசியம் என்று அவர் கூறுகிறார்.
 
மூலிகை மாத்திரைகள் உட்கொள்வது அல்லது அதுசார்ந்த சிகிச்சை முறைக்கு உட்படுவது, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் ஹார்மோன் அல்லது கீமோதெரபி சிகிச்சையில் பிரச்சனையை ஏற்படுத்த கூடும். இதன் காரணமாக இரத்த உறைவு செயல்முறை நீடிப்பதுடன், காயங்கள் குணமடைய அதிக நேரமாவதுடன், வடுக்களையும் ஏற்படுத்தக்கூடும்.
 
கீழே குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகள், இரத்தம் உறைவதை தாமதப்படுத்தும் மூலிகைகளுக்கு சில உதாரணங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
நிலவேம்பு
இஞ்சி
ஜிங்கோ
ஜின்ஸெங்
ஹௌதோர்ன்
ஹார்ஸ் சேஸ்நட்
மஞ்சள்
'ஆபத்தை ஏற்படுத்த கூடும்'
மக்கள் தங்களது உடல்நிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த கூடிய மாற்று சிகிச்சை முறையை நாடி செல்வது இயல்பான ஒன்றே என்று கார்டோசோ கூறுகிறார்.
 
எனினும், இதுபோன்ற முயற்சிகள் "இறுதியில் மென்மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடும்" என்பதை மக்கள் அறிய வேண்டியது அவசியம் என்று கூறுகிறார்.
 
"எவ்வித மோசமான விளைவையும் ஏற்படுத்த கூடாது என்பதே மருத்துவத்தின் முதன்மையான நோக்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
 
"திராட்சை மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட பழவகைகள் மற்றும் சில உணவு வகைகளை புற்றுநோயாளிகள் சிகிச்சை காலத்தின்போது தவிர்க்க வேண்டியது அவசியம்" என்று பிரிட்டனின் புற்றுநோய் ஆய்வு அமைப்பு கூறுகிறது.
 
"இணையத்தில் மூலிகை தயாரிப்புகள் குறித்த பல நிரூபிக்கப்படாத தகவல்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றின் நம்பகத்தன்மை குறித்த ஆய்வுகள் குறைவாக இருப்பதால், ஒரு சுகாதார நிபுணருடனான கலந்துரையாடல் மூலம் ஒரு நோயாளி துல்லியமான தகவல்களை பெற முடியும்" என்று கூறுகிறார் பிரஸ்ட் கேன்சர் நவ் எனும் அமைப்பை சேர்ந்த கிரேட் பிராட்டன்-ஸ்மித்.
 
மார்பக புற்றுநோய் தொடர்பான ஐந்தாவது சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் பேசிய பேராசிரியர் கார்டோசோ, யோகா, மனத் தெளிநிலை, ரெய்கி மற்றும் அக்குபஞ்சர் போன்ற சிகிச்சை முறைகள் நோயாளிகளின் வாழ்க்கை தரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார்

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே ஒரு கோழி ’லெக் பீஸ்’... கடித்துச் சண்டை போடும் பூனைகள்... இப்படியுமா ? வைரல் வீடியோ