Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹேமா கமிட்டி அறிக்கை: முதல்முறையாக வாய் திறந்த நடிகர் மோகன் லால், தெலுங்கு சினிமா பற்றிப் பேசிய சமந்தா

Advertiesment
Hema Committee Report

Prasanth Karthick

, ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 (15:30 IST)

மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக (casting couch) எழுந்த சர்ச்சைக்கு மலையாள நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நடிகருமான மோகன் லால் முதல்முறையாகப் பதிலளித்துள்ளார்.

 

 

“மலையாள திரையுலகை அழித்து விடாதீர்கள்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையை மோகன் லால் வரவேற்றதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

 

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என்றும் அவர் கூறினார். மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. பெண் கலைஞர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் இந்திய திரையுலகத்தை உலுக்கியுள்ளது.

 

"இதுபோன்ற சம்பவங்கள் முழு திரையுலகையும் அழித்துவிடும். 'அம்மா' சங்கத்தின் மீது மட்டும் குற்றம் சுமாத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று மோகன் லால் கூறினார்.

 

“அம்மா சங்கத்திலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ‘அம்மா’ சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. ‘அம்மா’ சங்கத்தின் பதவியிலிருந்து விலகியது தப்பிப்பதற்காக அல்ல. தயவு செய்து தேவையில்லாமல் ‘அம்மா’ சங்கத்தைக் குறை சொல்லாதீர்கள். நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கிறோம். அந்த அறிக்கையை வெளியிட்டது சரியான முடிவு,'' என்றார்.

 

மலையாள இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், முகேஷ் உள்ளிட்ட மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சில நடிகைகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், மோகன் லால் உள்ளிட்ட 'அம்மா' உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

 

'கடினமாக உழைக்கும் திரைத்துறை'

 

ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் எதிர்மறையாகச் சித்தரிக்க வேண்டாம் என்று ஊடகங்களையும் மக்களையும் கேட்டுக்கொண்டார் மோகன் லால். மலையாள திரையுலகம் மிகவும் கடினமாக உழைக்கும் திரைத்துறை என்று அவர் கூறினார்.

 

"அம்மா சங்கத்தை மட்டுமே நோக்கிப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தக் கேள்விகளை எல்லோரிடமும் கேட்க வேண்டும். மலையாள திரையுலகம் மிகவும் கடினமாக உழைக்கும் திரைத்துறை.

 

நிறைய பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எல்லோரையும் குறை சொல்லக்கூடாது. யாருக்காகவும் சட்டத்தை மாற்ற முடியாது. இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மலையாள திரையுலகை அழிக்க வேண்டாம்,'' என்றார்.

 

"விசாரணை கண்டிப்பாக நடைபெறும். துணை நடிகர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம். ஒரே நேரத்தில் அனைவரின் பெயர்களும் வெளிவருகின்றன. நாங்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறோம். விசாரணை நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்போம். பிரச்னைகளைச் சரி செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்று மோகன் லால் தெரிவித்துள்ளார்

 

தெலுங்கு சினிமா குறித்து சமந்தா கருத்து

 

இந்த விவகாரம் குறித்து நடிகை சமந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

 

தெலுங்கு சினிமா அமைப்பான ‘பெண்களின் குரல்’ (The Voice of Women) என்ற அமைப்பு அரசாங்கத்திடம் அளித்த அறிக்கையை வெளியிடுமாறு, ​​சமந்தா வெள்ளிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

webdunia
 

"தெலுங்கு திரையுலகில் உள்ள அனைத்து பெண்களும் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கின்றனர். கேரளாவில் உள்ள நடிகைகள் கூட்டமைப்பான ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அவர்களின் முயற்சிகள் ‘தி வாய்ஸ் ஆஃப் வுமன்’ இயக்கத்திற்கு வழிவகுத்தது.

 

அதனால் ஈர்க்கப்பட்டு, 'தி வாய்ஸ் ஆஃப் வுமன்' தெலுங்கு திரையுலகில் பெண்களை ஆதரிப்பதற்காக 2019இல் அமைக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அக்குழுவின் அறிக்கையை தெலங்கானா அரசு வெளியிட வேண்டும்” என்று சமந்தா அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2017ஆம் ஆண்டு கேரளாவில் உருவான ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ திரைப்படத் துறையில் பாலின பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி வருகிறது. பெண்களுக்கு சம உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் கொள்கை மாற்றங்களுக்காகப் பணியாற்றி வருகிறது.

 

மலையாளத் திரையுலகில் பணிபுரியும் பெண்களைக் கொண்டு ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ உருவாக்கப்பட்டது.

 

நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கையில் என்ன இருக்கிறது?

மலையாளத் திரையுலகின் நிலைமை குறித்து ஆய்வு செய்யக் கோரி 2017ஆம் ஆண்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதையடுத்து, அதே ஆண்டில் நீதிபதி ஹேமா ஆணையத்தை மாநில அரசு அமைத்தது.

 

பிரபல கதாநாயகியை காரில் வைத்து சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்ததை அடுத்து, திரையுலகின் நிலைமையை ஆய்வு செய்ய வுமன் இன் சினிமா கலெக்டிவ் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

 

இந்தக் குழுவில் நடிகை டி.சாரதா, கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் கே.பி.வல்சலா குமாரி ஆகியோர் இடம்பெற்றனர்.

 

மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்வது (casting couch) ஆழமாக வேரூன்றியுள்ளதாக ஓய்வுபெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அந்தக் குழுவின் அறிக்கை சமீபத்தில் கேரள அரசால் வெளியிடப்பட்டது.

 

“சமரசம்” மற்றும் “ஒத்துப்போதல்” போன்றவை மலையாள திரையுலகின் பல்வேறு மட்டங்களில் “வாய்ப்புக்கான” கடவுச் சொற்களாக இருப்பதாக, அந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.

 

“தேவைப்படும் போதெல்லாம் பெண்கள் பாலியல் உறவுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்பதுதான் இந்த இரு வார்த்தைகளின் அர்த்தம்.

 

திரையுலகில் 'காஸ்டிங் கவுச்' நடப்பதாக இருக்கும் பரவலான நம்பிக்கையைப் பயன்படுத்தி, புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு தயாரிப்பு மேலாளர்கள் (production controllers) இத்தகைய உணர்வை வழங்குகின்றனர். இதற்கு இரையாகும் நபர்களுக்கு “குறியீட்டு எண்களும்” வழங்கப்படுகின்றன.

 

44 பக்கங்கள் இல்லை

 

நீதிபதி கே.ஹேமா தலைமையிலான குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்து நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள அரசு அந்த அறிக்கையை வெளியிட்டது.

 

அறிக்கையின் 290 பக்கங்களில் 44 பக்கங்கள் வெளியிடப்படவில்லை. இந்தப் பக்கங்களில், திரையுலகில் தங்களைத் துன்புறுத்தியவர்களின் பெயர்களைப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

அந்த அறிக்கையில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு பக்கத்தில், பெண்கள் எப்படித் துன்புறுத்தப்பட்டனர், எவ்வளவு கொடுமையாக நடத்தப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அந்த அறிக்கையில் நீக்கப்பட்ட இரண்டாவது பகுதியில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண், “அடுத்த நாள் முதல் அதே நபருடன் கணவன் - மனைவியாக, கட்டிப்பிடித்துக் கொண்டு நடிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது, இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்தும் அதிர்ச்சிகரமான உதாரணம்.

 

“இதுவொரு பயங்கரமான சம்பவம். படப்பிடிப்பின்போது அவர் சந்தித்த இந்தக் கசப்பான அனுபவம் அவருடைய முகத்தில் தெரிந்தது. இதனால், ஒரு ஷாட்டுக்கு அவர் 17 டேக்குகளை எடுத்தார். இயக்குநர் அந்தப் பெண்ணை மோசமாகத் திட்டினார்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

 

இந்த அறிக்கை வெளியானதும் கதாநாயகிகள் தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தி வருகின்றனர்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு செய்ய வேண்டியதை ஈஷா செய்கிறது! - ஈஷா காவேரி கூக்குரல் கருத்தரங்கில் அமைச்சர் சாமிநாதன் புகழாரம்