இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தினத்தந்தி: "தமிழகத்திற்கு வருகிறது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை" நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்க, தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என லண்டன் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
"உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தொலைதூரத்தில் இருந்து நகரத்திற்கு வந்து சிகிச்சை பெறமுடியாதபோது, விலை மதிக்க முடியாத உயிரை இழக்க நேரிடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலமாக குறித்த காலத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து நோயை குணப்படுத்தி அவர்களை பிழைக்க வைக்கக்கூடிய அரிய சாதனையை கிங்ஸ் மருத்துவமனை செய்து கொண்டிருக்கிறது.
அதுபோன்றே, தொலைதூரத்தில் உள்ள இடங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை குறித்த நேரத்தில் சிகிச்சை அளித்துக்காப்பாற்ற, தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு நிச்சயமாக செயல்படுத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை - ''நீங்கள் தான் உண்மையான இரும்பு மனிதர்''
நீங்கள் தான் இந்தியாவின் உண்மையான இரும்பு மனிதர் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி புகழ்ந்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
குஜராத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, "அமித் ஷா அவர்களே நீங்கள் தான் உண்மையான கர்மயோகி. இந்த நாட்டின் உண்மையான இரும்பு மனிதர். குஜராத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே உங்களை போன்ற தலைவரை பெற்றது பெருமை.
உங்களின் கைகளில் இந்தியா பாதுகாப்புடன் உள்ளது. உங்கள் இலக்கை எந்த தடையும் தாக்குவதில்லை. அதுபோலவே மிகப்பெரிய கனவுகளை காண்பதற்கு நீங்கள் தயங்குவதில்லை. உங்கள் எண்ணங்கள் மற்றும் கனவுளால் இந்தியாவில் நாளை புதிய வாய்ப்புகள் தோன்றும் என நம்புகிறோம்'' என்று அவர் கூறியதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
தினமணி: "வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி"
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய இன்றே கடைசி தேதி என்றும், காலநீட்டிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மார்ச் வரையிலான நிதியாண்டில், ரூ.2.50 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டியவர்கள், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது அவசியமாகும். இதற்காகக் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர், இந்த அவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை வருமான வரித் துறை மறுத்துள்ளது.
இது தொடர்பாக, வருமான வரித் துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் போலியானதாகும். அதில் எந்தவித உண்மையும் இல்லை. இதன் காரணமாக, வருமான வரி செலுத்துவோர் தங்களது கணக்குகளை சனிக்கிழமைக்குள் தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.