Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருமல் மருந்துக்காக வேட்டையாடப்படும் முள்ளெலி?

Advertiesment
இருமல் மருந்துக்காக வேட்டையாடப்படும் முள்ளெலி?
, ஞாயிறு, 12 ஜூன் 2022 (13:05 IST)
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக காணப்படும் சிறிய வகை பாலூட்டியான முள்ளெலிகள் (Madras Hedgehog) தொடர்ந்து அழிந்து வருவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த உயிரினத்தின் முக்கியத்துவம் என்ன, இதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி இந்தக் கட்டுரை விவரிக்கிறது. முள்ளெலிகளைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பிரவீன் குமாருடன் பிபிசி தமிழ் பேசியது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் இவருக்கு சமீபத்தில் பசுமை முதன்மையாளர் விருது (Green Champion Award) வழங்கியுள்ளது.
 
"அடிப்படையில் நான் ஒரு பயோ டெக்னாலஜி மாணவன். ஆனாலும் விலங்குகள் மீது எனக்கு ஆர்வம் உண்டு. 2013-ம் ஆண்டு ஒரு நிகழ்வுக்காக திருநெல்வேலி சென்றிருந்தபோது அந்த கிராம மக்கள் தங்கள் ஊரில் முள் வைத்த எலி இருப்பதாக கூறினார்கள். அப்போது தான் முள்ளெலி பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. அன்றிலிருந்து இன்று வரை முள்ளெலிகள் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன்" என்று கூறினார் பிரவீன் குமார்.
 
"உலகத்தில் 17 வகையாக முள்ளெலிகள் உள்ளன. இந்தியாவில் மூன்று வகையான முள்ளெலிகள் உள்ளன. அதில் Madras Hedgehog என்கிற முள்ளெலி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலாக காணப்படுகின்றன. முள்ளெலி 1851-ம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்டது. பலரும் முள்ளெலிகளை முள்ளம்பன்றி என நினைத்துக் கொள்வார்கள். தோற்றத்தில் ஓரளவு ஒற்றுமை இருந்தாலும் இரண்டும் முற்றிலும் வேறுபட்டது."
 
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முள்ளெலிகள் காணப்படுகின்றன. ஆனால் அரசாங்க தரவுகளில் முள்ளெலிகள் பற்றி போதிய விவரங்கள் இல்லை. எங்களுடைய ஆய்வில் 18 மாவட்டங்களில் முள்ளெலிகள் இருப்பதை பிரவீன் குமார் தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார்.
 
விவசாயிகளின் நண்பன்
 
முள்ளெலி என அழைக்கப்பட்டாலும் தென் மாவட்டங்களில் இருமல் எலி உட்பட இதற்குப் பல பெயர்கள் இருப்பதாக பிரவீன் குமார் கூறுகிறார். "முள்ளெலிகள் உணவு, மருந்துக்காக வேட்டையாடப்படுகின்றன. கிராமப்புறங்களில் வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும் இவை வளர்க்கப்படுகின்றன. இருமலுக்கு முள்ளெலிகள் பயன்படுத்தினால் குணமாகும் என ஒரு நம்பிக்கை இருப்பதாலும் இதனை இருமல் எலி என்றும் அழைக்கின்றனர்."
 
"முள்ளெலி ஓர் இரவாடி உயிரினம். இரவு நேரங்களில் தான் அதிகளவில் நடமாகும். இவை பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்கள், புதர் நிலங்கள், புல்வெளிகள், மணல் திட்டுகள் மற்றும் சிறிய குன்றுகளின் அடிவாரங்கள் போன்ற இடங்களில் குழி தோண்டி வசிக்கும்."
 
முள்ளெலிகள் மண் மீது படுத்து ஓய்வெடுக்கும், தொட்டால் பந்து போல சுருங்கிக் கொள்ளும். முள்ளெலிகளுக்கு பூச்சிகள் தான் பிரதான உணவு. விவசாய நிலங்களை பாதிக்கும் பூச்சிகளை முள்ளெலிகள் உண்கின்றன. இதனால் தான் முள்ளெலிகளை விவசாயிகளின் நண்பன் என சொல்கிறார்கள்.
 
உணவு சங்கிலியில் முக்கியப் பங்கு
 
பல்வேறு முக்கியத்துவம் இருந்தாலும் முள்ளெலிகள் வேட்டை என்பது தடையில்லாமல் நடைபெற்று வருகிறது. "சித்த மருத்துவ சிகிச்சையில் முள்ளெலிகள் பயன்படுகிறது என நம்பிக்கை இருப்பதாலும் இவை வேட்டையாடப்படுகின்றன. தென் மாவட்டங்களில் பல்வேறு வீடுகளில் முள்ளெலிகளின் தோலை அலங்கார பொருளாக மாட்டி வைத்துள்ளனர்."
 
புல்வெளிகளில் முள்ளெலி உட்பட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவற்றை பற்றி முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. முள்ளெலி வன விலங்குகளின் உணவு சங்கிலியில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. பருந்து, பாம்பு, மயில் போன்றவற்றுக்கு இவை முக்கிய உணவாக உள்ளன. பனை மரத்திற்கும் முள்ளெலிகளுக்கும் உள்ள தொடர்பு முள்ளெலிகள் பனை மரத்திற்கு அடியிலும் குழி தோண்டி வசிக்கும்.
 
எங்களுடைய கள ஆய்விலும், முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளன. பனை மரங்கள் குறைந்துபோனதும் முள்ளெலிகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியமான காரணமாக அமைந்திருக்கலாம். நில பயன்பாடுகளில் ஏற்படும் மாற்றமும் இதற்கு மற்றுமொரு முக்கிய காரணம். சாலைகளில் வாகனங்களில் அடிபட்டும் முள்ளெலிகள் அதிக அளவில் இறக்கின்றன.
 
ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?
 
இந்திய அரசின் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் முள்ளெலிகள் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இல்லை. அதனால் இவை வேட்டையாடப்படுவதை கட்டுப்படுத்த முடிவதில்லை. புலி, யானை போன்ற பெரிய விலங்குகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குள் வசிப்பவை. அரசாங்கத்தின் முதன்மையான கவனம் இத்தகைய பெரிய விலங்குகளைப் பற்றியதாக தான் உள்ளது.
 
"முள்ளெலி போன்ற சிறிய உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு வெளியே மனிதர்கள் வாழும் பகுதிகளைச் சுற்றித்தான் வசிக்கின்றன. இத்தகைய சிறிய உயிரினங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். தேவாங்கு அழிவில் விளிம்பில் இருப்பதை உணர்ந்து அதனைப் பாதுகாக்க தற்போது சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முள்ளெலி பற்றிய போதிய தரவுகள் இல்லை. நாங்கள் ஆய்வில் கண்டறிந்தடைவிடவும் தமிழ்நாடு முழுவதும் நிறைய இடங்களில் முள்ளெலிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன."
 
அரசு என்ன செய்யலாம்?
 
முள்ளெலிகளைப் பாதுகாக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பிரவீன்குமார் விளக்கினார். "இந்த ஆய்வில் என்னுடன் இணைந்து பல ஆராய்ச்சியாளர்களும் தன்னார்வலர்களும் வேலை செய்துள்ளனர். முள்ளெலி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தோல்பாவை கூத்து உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பள்ளிகளிலும், கிராமங்களிலும் மேற்கொண்டு வருகிறோம். மக்கள் பாரம்பரியமாக வேட்டையாடி பழகிவிட்டார்கள், ஒரே நாளில் அதை நிறுத்துவிட முடியாது."
 
"அரசு முள்ளெலிகளை பாதுகாக்கப்பட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும். முள்ளெலிகளின் இருப்பை பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முள்ளெலி போன்ற சிறிய பாலூட்டிகளை பற்றிய ஆராய்ச்சி செய்ய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்கான ஒருங்கிணைந்த திட்ட வரைவு உருவாக்கப்பட வேண்டும்.
 
இந்தியா முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்களை இதற்காக பயன்படுத்தலாம்" என்றார்.
அரசு என்ன செய்கிறது? முள்ளெலிகளைப் பாதுகாப்பது தொடர்பாக அரசு என்ன செய்கிறது என்ற கேள்வியுடன் தமிழ்நாடு சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூவிடம் பேசினோம்
 
"முள்ளெலி எண்ணிக்கை அச்சுறுத்தல் ஏற்படுவதை வனத்துறை மிகவும் கவனத்துடன் எதிர்கொள்கிறது. முதலில் வல்லுநர்களின் உதவியுடன் முள்ளெலி பற்றிய தகவல்களை விரிவாக சேகரிக்க திட்டங்களை வகுத்து வருகிறோம்.
 
இது தொடர்பான விவாதங்களும், பயிற்சி பட்டறைகளும் நடத்த திட்டமுள்ளது. அதன் மூலம் முள்ளெலிகளை மதிப்பீட்டிற்குப் பிறகு உரிய பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பாதுகாப்பிற்கான திட்டங்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் 14ஆம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை அறிவிப்பு