Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்கானிஸ்தானில் தாலிபன் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டதா? கள நிலவரம் என்ன?

ஆப்கானிஸ்தானில் தாலிபன் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டதா? கள நிலவரம் என்ன?
, சனி, 4 செப்டம்பர் 2021 (11:04 IST)
அமெரிக்கா உட்பட மேற்குலகப் படைகள் பின் வாங்கத் தொடங்கி ஒரு சில வாரங்களிலேயே, தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் மொத்த மாகாணங்களையும் கைப்பற்றிவிட்டனர்.
 
ஆனால் இப்போது வரை, ஆப்கானின் தலைநகரான காபூலுக்கு அருகில் இருக்கும் பஞ்ஷீர் மாகாணம் தாலிபன்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
 
இப்போது பஞ்ஷீர் மாகாணத்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக ராய்டர்ஸ் முகமையிடம் தாலிபன் தரப்பிலிருந்து கூறப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் பஞ்ஷீர் போராளிகளோ அதை மறுத்துள்ளனர் .
 
அதே போல பஞ்ஷீர் மாகாண போராளிகளில் முக்கிய நபரான அம்ருல்லா சலே, தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டது. அதை மறுத்து அம்ருல்லா சலெ தாமே காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
webdunia
1.5 - 2.0 லட்சம் பேர் வாழும் பஞ்ஷீர் மாகாணம் கடந்த பல ஆண்டுகளாக தாலிபனுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த மாகாணப் படையில் முன்னாள் ஆப்கன் அரசுப் படை வீரர்கள், உள்ளூர் ஆயுதமேந்திய வீரர்கள் இருக்கின்றனர்.
 
இப்படையை அஹ்மத் மசூத் தலைமை தாங்கி வழிநடத்திக் கொண்டிருக்கிறார். 1980களில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகவும், 1990களில் தாலிபன்களுக்கு எதிராகவும் இவரது தந்தை அஹ்மத் ஷா மசூத் போரிட்டவர் என்பது நினைவுகூரத்தக்கது.
 
முன்னாள் ஆப்கானிஸ்தான் துணை அதிபரான அம்ருல்லா சலே, பிபிசிக்கு அனுப்பிய காணொளியில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
 
"நாங்கள் நெருக்கடியான சூழலில் தான் இருக்கிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. நாங்கள் தாலிபன்களின் படையெடுப்பை எதிர்கொண்டு வருகிறோம்" எனக் கூறினார்.
 
"நாங்கள் சரணடையமாட்டோம், நாங்கள் ஆப்கானிஸ்தானுக்காக நிற்கிறோம்" எனவும் கூறினார்.
 
தான் ஆப்கானிஸ்தானை விட்டு ஓடிவிட்டதாகக் கூறுவது தவறு என்பதை உறுதிப்படுத்தவே இந்த காணோளியைப் பகிர்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் பிபிசியால் அம்ருல்லா சலேவின் இருப்பிடத்தை சுயாதீனமாக கண்டுபிடிக்க முடியவில்லை.
 
பஞ்ஷீர் போராளிகள் தாலிபனை பின் தள்ளி இருப்பதாக தேசிய எதிர்ப்பு முன்னணியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் அலி நசாரி, பிபிசியிடம் கூறினார்.
 
"சில நூறு தாலிபன்கள் சிக்கியுள்ளனர், அவர்களிடம் ஆயுதங்கள் குறைந்து வருகிறது. அவர்கள் தற்போது எங்களிடம் சரணடைவது தொடர்பாக பேசி வருகிறார்கள்" என அவர் கூறினார். ஆனால் தாலிபன்களோ அப்பகுதியை முழுமையாக வெற்றி கொண்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.
 
"அல்லாவின் கருணையினால் தற்போது ஆப்கானிஸ்தான் முழுக்க எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுவரை தொல்லை கொடுத்து வந்தவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இப்போது பஞ்ஷிர் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது" என ஒரு தாலிபன் கமாண்டர் ராய்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளார்.
 
வரும் நாட்களில் தாலிபன்கள் புதிய அரசை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய குழுக்களோடு பேச்சு வார்த்தைகள் நடத்துவோம், ஆனால் தாலிபன்களின் அரசை ஆப்கானிஸ்தானின் அரசாக அங்கீகரிக்கமாட்டோம் என ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய முன்னணி உலக நாடுகள் கடந்த செப்டம்பர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உச்சம் தொடும் தங்கம் - ஒரே நாளில் ரூ.352 உயர்வு!