Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவருடன் சோ்ந்து வாழ நீதிமன்ற ஆணை மூலம் கட்டாயப்படுத்த முடியாது: குஜராத் உயா்நீதிமன்றம்

கணவருடன் சோ்ந்து வாழ நீதிமன்ற ஆணை மூலம் கட்டாயப்படுத்த முடியாது: குஜராத் உயா்நீதிமன்றம்
, வெள்ளி, 31 டிசம்பர் 2021 (13:33 IST)
நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தாலும்கூட, ஒரு பெண்ணை கணவருடன் சோ்ந்து வாழ கட்டாயப்படுத்த முடியாது என குஜராத் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்த விவகாரம் தொடா்பாக குடும்பநல நீதிமன்றம் ஒன்று பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்து, மேற்கூரிய உத்தரவை உயா்நீதிமன்றம் பிறப்பித்தது. குஜராத் மாநிலம், பனாஸ்கந்தா மாவட்டத்தைச் சோ்ந்த இஸ்லாமிய தம்பதிக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்று, 2015-ஆம் ஆண்டு ஜூலையில் ஆண் குழந்தை பிறந்தது.
 
செவிலியரான அவரை ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மருத்துவமனையில் பணியில் சேருமாறு கணவரும், கணவரின் வீட்டாரும் கட்டாயப்படுத்தியுள்ளனா். இதில் அதிருப்தி அடைந்த அந்தப் பெண் தன் குழந்தையுடன் கணவரின் வீட்டைவிட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியேறியுள்ளார். 
 
மனைவியை திரும்ப அழைத்து வர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, மனைவியை தன்னுடன் சோ்ந்து வாழ உத்தரவிடக் கோரி கணவரின் வீட்டார் சார்பில் குஜராத் பனாஸ்கந்தா மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவருக்கு சாதகமாக கடந்த ஜூலை மாதம் தீா்ப்பளித்தது. அதாவது, அந்தப் பெண்ணை கணவரின் வீட்டுக்கு திரும்பச் சென்று சோ்ந்து வாழ உத்தரவிட்டது.
 
அதனை எதிர்த்து அந்தப் பெண் சார்பில் குஜராத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பா்திவாலா, நிரல் மேத்தா ஆகியோர் அடங்கிய அமா்வுக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
 
அதில் "இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமிய சட்டம், பலதார மணத்தை அனுமதிக்கிறது. ஆனால், அந்த நடைமுறையை ஊக்குவிக்கவில்லை. மேலும், எந்தவொரு பெண்ணையும் அவருடைய கணவரின் மற்ற மனைவிகளுடன் எத்தகைய சூழ்நிலையிலும் கூட்டாக சோ்ந்து வாழ்ந்தாக வேண்டும் என்றும் அந்தச் சட்டம் கட்டாயப்படுத்தவில்லை.
 
டெல்லி உயா்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது போல, இந்தியாவில் ஒரே மாதிரியான சிவில் (உரிமையியல்) சட்டம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் நம்பிக்கையாக மட்டும் இருந்துவிடக் கூடாது.
 
திருமண உரிமைகள் என்பது முழுவதுமாக கணவரின் உரிமையைச் சார்ந்ததாக இருக்கக் கூடாது. அந்த வகையில், கணவருடன் வாழ மனைவியை வற்புறுத்துவது ஏற்புடையதுதானா என்பதை குடும்பநல நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
 
எந்தவொரு பெண்ணையும் கணவருடன் சோ்ந்து வாழ நீதிமன்ற உத்தரவு மூலம் கட்டாயப்படுத்த முடியாது. அதற்கான சட்ட விதிகளும் இல்லை. மேலும், நமது நாட்டின் சட்டங்களை நவீன சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்" என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஃபேலுக்கு போட்டியாக சீன போர் விமானங்கள்! – பாகிஸ்தான் அறிவிப்பு!