Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை முள்ளிவாய்க்காலில் அரசு கட்டுப்பாடு: உள்நாட்டுப்போர் முடிந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு

இலங்கை முள்ளிவாய்க்காலில் அரசு கட்டுப்பாடு: உள்நாட்டுப்போர் முடிந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு
, செவ்வாய், 18 மே 2021 (14:39 IST)
இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் முந்தைய ஆண்டுகளில் யுத்தத்தினால் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து வந்த தமிழர்களுக்கு இம்முறை அந்த பகுதியில் உயிர் நீத்த மக்களை நினைவுகூர்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, முள்ளியாவளை, புதுகுடியிருப்பு ஆகிய பகுதிகள் நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், கொரோனாவை காரணமாகக் கூறி, முல்லைத்தீவு பகுதியை முடக்கி, எந்த விதத்திலும் முள்ளிவாய்க்காலை மக்கள் அணுக முடியாதவாறு அரசு தடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அரசாங்கம் திட்டமிட்டு அழித்ததாகவும், மாணவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அதனை மீள அமைக்க அனுமதி வழங்கியதாகவும் மாணவர் ஒன்றியம் அதில் குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று, ஆண்டுதோறும் மக்களை பொங்கும் உணர்வுகளோடு நினைவு கூரும், முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் தூபி மிலேச்சத்தனமாக அழிக்கப்பட்டதாகவும் யாழ். மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது.

மேலும், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்தாபிக்கப்படவிருந்த நினைவுக்கல்லை வஞ்சகமாக கவர்ந்து சென்று, அரசாங்கம் அராஜகம் புரிந்துள்ளதாகவும் ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் செல்ல தற்போது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமது வீட்டு முற்றங்களில் நினைவு சுடரை ஏற்றுமாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நினைவிடத்தை அழிக்கலாம், நினைவுகளை அழிக்க முடியாது என்பதை இந்த செயற்பாட்டின் ஊடாக உரத்துச் சொல்லுவோம் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் 12ஆம் ஆண்டுநினைவேந்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இலங்கை உள்நாட்டுப்போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமது அண்ணா நகர் இல்லத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன், "முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ஆவது ஆண்டாக நினவுகூரப்படும் இந்நாளில், ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நல்லாதரவைத் திரட்டி, ஈழவிடுதலையை வென்றெடுக்கவும், உலகத் தமிழர்களுக்கிடையிலான முரண்களைக் கூர்மைப்படுத்தாமல் ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்தவும் உறதியேற்போம்," என்று கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வீழ்வதெல்லாம் அழுவதற்கல்ல, எழுவதற்கே என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 8 மணியளவில் காணொளி வாயிலாக முள்ளிவாய்க்கால் நிநைவேந்தல் பற்றி பேசும் நிகழ்ச்சிக்கும் அவரது கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, "சமீபத்தில் கூட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த நினைவிடம், முள்ளிவாய்க்கால் நினைவிடம் சேதப்படுத்தப்பட்டன. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சமத்துவமோ, அடிப்படை உரிமைகளோ அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இலங்கைத் தமிழர்கள் குறித்த பிரச்சனையை அனைவரிடமும் கொண்டுசேர்த்த கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சியும் மிக முக்கியமானது. அது இனியும் தொடரும். உண்மை நிச்சயம் வெல்லும்," என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் நிவாரண நிதிக்கு கிடைத்த தொகை எவ்வளவு? – தமிழக அரசு அறிவிப்பு!