Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம்

Advertiesment
ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம்
, புதன், 3 ஜூன் 2020 (14:18 IST)
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீஸ் காவலில் கொல்லப்பட்டதால் நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன.

மின்னசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸார் பிடியில் கழுத்து நெறிபட்டு இறந்தார்.

ஒரு காருக்கு அடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைவிலங்கிடப்பட்டிருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்தி கொன்றதாக, சாவின் என்ற காவலர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஃப்ளாய்ட் மரணத்திற்கு காரணமான நிகழ்வுகள் அனைத்தும் வெறும் 30 நிமிடங்களில் நடந்து முடிந்தன.

இவை அனைத்தும் 20 டாலர் கள்ளநோட்டு விவகாரத்தில் ஆரம்பித்தது.

ஒரு கடையில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் சிகரெட் வாங்கியபோது, அவர் கொடுத்த 20 டாலர் பணம் கள்ளநோட்டு என சந்தேகித்த கடைக்காரர், போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

தனது சொந்த ஊரான டெக்ஸாசில் இருந்து குடிபெயர்ந்து மினியாபொலிஸில் பல ஆண்டுகளாக ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்ந்து வந்தார்.

சமீப காலம் வரை பவுன்சராக அவர் வேலை செய்தார்.
webdunia

கொரோனா உலகத் தொற்று காரணமாக அமெரிக்காவில் வேலையிழந்த மில்லியன் கணக்கான மக்களில் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டும் ஒருவர்.

எங்களது கடைக்கு ஜார்ஜ் ஃப்ளாய்ட் வழக்கமாக வருவார். அவர் எந்த பிரச்சனையும் செய்ததில்லை என என்.பி.சி தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார் கப் புட் கடையின் உரிமையாளர் அபுமாயலே.

ஆனால், சம்பவம் நடந்த அன்று அபுமாயலே கடையில் இல்லை. கள்ள நோட்டு சந்தேகத்தில் அவரது கடையில் வேலை பார்த்த பதின்ம வயது இளைஞர் வழக்கமான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றினார்.

20:01 மணிக்கு அவரச உதவி எண்ணான 911 ஐ தொடர்புகொண்ட கடைக்காரர், ஜார்ஜ் ஃப்ளாய்ட் அளித்தது கள்ள நோட்டு என்ற சந்தேகத்தின் பெயரில் அவருக்கு வழங்கிய சிகரெட்டை திரும்ப கேட்டதாகவும், ஆனால் அவர் அதை வழங்க மறுத்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

மேலும், ஜார்ஜ் ஃப்ளாய்ட் நன்கு குடித்திருப்பதாக தெரிவதாகவும் கடைக்காரர் புகார் அளித்துள்ளார் என போலீஸார் வெளியிட்ட பதிவுகள் காட்டுகின்றன.

20:08 மணிக்கு சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்துள்ளனர். அங்கு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரண்டு பேருடன் ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமர்ந்திருந்தார்.
webdunia

வாகனத்துக்கு அருகே சென்ற தாமஸ் லேன் என்ற போலீஸ்காரர் தனது துப்பாக்கியை எடுத்ததுடன், கைகளைக் காட்டுமாறும் ஜார்ஜ் ஃப்ளாய்டிற்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், காவல் அதிகாரி ஏன் தேவையில்லாமல் துப்பாக்கியை வெளியே எடுத்தார் என்பதை அவரது வழக்கறிஞர் விளக்கவில்லை.

‘’ ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை போலீஸ் அதிகாரி தாமஸ் லேன் காரை விட்டு வெளியே இழுத்தார். கைகளில் விலங்கு போடும்போது, ஜார்ஜ் ஃப்ளாய்ட் அதை பலமாக எதிர்த்துள்ளார்’’ என தாமஸ் லேனின் வழக்கறிஞர் கூறுகிறார்.

கைவிலங்கு போட்ட பிறகே, கள்ள நோட்டு விவகாரத்தில் கைது செய்யப்படுவதாக ஜார்ஜ் ஃப்ளாய்ட்டிற்கு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை காவல்துறை வாகனத்தில் போலீஸார் ஏற்ற முயன்றபோது ஏற்பட்ட கைகலப்பில் அவர் கீழே விழுந்தார்.

அப்போது அங்கு வந்த காவல் அதிகாரி சாவின், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை ரோந்து வாகனத்தில் ஏற்ற மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து முயன்றுள்ளார்.
 
இந்த முயற்சியின் போது, சரியாக 20:19 மணிக்கு காவலர் சாவின் இழுத்ததால், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கீழே விழுந்தார். அப்போது அவர் கையில் கைவிலங்கு இருந்தது.
webdunia

காவல் அதிகாரி சாவின், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் தலைக்கும் கழுத்துக்கும் இடையே காலை வைத்து அழுத்தினார். இதை அங்கிருந்த பலர் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்தனர்.

‘’ என்னால் மூச்சு விடமுடியவில்லை’’ என தொடர்ந்து கூறிய ஜார்ஜ் ஃப்ளாய்ட், பிளீஸ், பிளீஸ், பிளீஸ் என கெஞ்சியுள்ளார்.

எட்டு நிமிடம் 46 நொடிகளுக்கு ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் கழுத்தில், காவலர் சாவின் காலை வைத்து அழுத்தியுள்ளார் என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

இதில் முதல் 6 நிமிடத்திலே ஜார்ஜ் ஃப்ளாய்ட் அசைவற்ற நிலைக்கு வந்தார். அங்கிருந்த பலர் ஃப்ளாய்ட்டின் நாடித்துடிப்பைப் பார்க்குமாறு அதிகாரிகளை கேட்டுள்ளனர்.

குயேங் என்ற காவலர் ஃப்ளாய்ட்டின் வலது கையை பிடித்து பார்த்தபோது, நாடித்துடிப்பு எதுவும் இல்லை. ஆனாலும், போலீஸார் ஃப்ளாய்ட்டை விட்டு நகரவில்லை.

20:27 மணிக்கு காவலர் சாவின் தனது காலை ஃப்ளாய்ட்டின் கழுத்தில் இருந்து எடுத்துள்ளார். ஹென்னெபின் கவுண்டி மருத்துவ மையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் ஃப்ளாய்ட் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் இறந்துவிட்டதாக ஒரு மணி நேரம் கழித்து தெரிவிக்கப்பட்டது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவின் பொருளாளர் யார் ? ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு